tamilnadu epaper

மிமிக்ரி

மிமிக்ரி


அந்தத் திருமண ரிசப்ஷன் மிகவும் ஆடம்பரமாக நடந்து கொண்டிருந்தது. வெளியே அமைக்கப்பட்டிருந்த ஒரு திறந்த வெளி மேடையில் ஒருவன் மிமிக்ரி செய்ய, கூட்டம் ஆரவாரம் செய்து, கைதட்டி அவனை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தது.


எனக்கு எரிச்சலாயிருந்தது. "ச்சை... இது என்ன ஒரு கலைன்னு மக்கள் இதைப் போய் ரசிக்கிறார்கள்.. த்தூ" மனதிற்குள் பொருமினேன்.


அவனது நிகழ்ச்சி முடிந்ததும் பலர் அவனிடம் சென்று ஆட்டோகிராப் வாங்குவதும், செல்பி எடுப்பதுமாயிருக்க,அவனை எரிச்சலோடு பார்த்து விட்டு அங்கிருந்து நகர்ந்தேன்.


சில நிமிடங்களுக்கு பிறகு யாரோ என் தோளைத் தொடுவது போலிருக்க, திரும்பிப் பார்த்தேன்.


அந்த மிமிக்ரிகாரன். "ஏன் சார் என் நிகழ்ச்சி உங்களுக்கு பிடிக்கலையா?" கேட்டான்.


 "யோவ்!... இதெல்லாம் ஒரு நிகழ்ச்சியா?... இதெல்லாம் ஒரு கலையா?.. ஆடு மாதிரிக் கத்துறதும், மாடு மாதிரிக் கத்துறதும், அப்புறம் யாரோ சில நடிகர்கள் மாதிரி இமிடேட் பண்றதும்... இதெல்லாம் ஒரு கலையா?.. கருமம்.. கருமம்!" என் ஆத்திரத்தைக் கொட்டினேன்.


சில நிமிடங்கள் என் முகத்தையே கூர்ந்து பார்த்தவன், "கொஞ்சம் என் கூட வர்றீங்களா சார்?" என்றான்.


  "எங்கே?"


 "வாங்க சொல்றேன்!" அவன் நடக்க பின்பு தொடர்ந்தேன்.


அந்த மண்டபத்திற்கு அடுத்த தெருவிலிருந்த முதியோர் இல்லத்திற்கு என்னை அழைத்துச் சென்ற மிமிக்ரிகாரன் அங்கிருந்து ஒரு சிப்பந்தியிடம், "அம்மா சாப்பிட்டார்களா?" என்று கேட்டான்.


  "என்னப்பா... நீ வந்து ஊட்டி விடாம.. அவங்க என்னைக்கு சாப்பிட்டிருக்காங்க,?"


அந்த சிப்பந்தி இடமிருந்து சாப்பாட்டுத் தட்டை வாங்கிக் கொண்டு கண் பார்வையற்ற ஒரு மூதாட்டியிடம் சென்ற மிமிக்ரிகாரன், "அம்மா... சரவணன் வந்துட்டேன்!" என்று சொல்ல,


 "சரவணா... வந்துட்டியாப்பா?... என்ன இன்னமும் காணலையேன்னு ரொம்ப பயந்துட்டேன்!" என்றாள் மூதாட்டி நடுங்கும் குரலில்.


 "சரி... சரி.. சாப்பிடலாமா?"


 "ம்... ஊட்டி விடு!" என்றாள் மூதாட்டி.


 அப்போதுதான் கவனித்தேன், அவளுக்கு ஒரு கையும் காலும் செயலிழந்திருந்ததை.


இவன் பேசிக் கொண்டே ஊட்ட, அவள் புன்னகையோடு சாப்பிட்டாள். சாப்பிட்டு முடித்ததும், தட்டிலேயே கையை கழுவ விட்டு, அவள் வாயைத் துடைத்து விட்டான் மிமிக்ரிகாரன்.


 அங்கிருந்து கிளம்பி மண்டபத்திற்கு வரும் போது கேட்டேன், "ஏம்பா... கண் தெரியாத தாயை இப்படி.. முதியோர் இல்லத்தில் விட்டிருக்கியே... உனக்கு மனசாட்சியே இல்லையா?"


மெலிதாய்ச் சிரித்த மிமிக்ரிகாரன், "சார் அவங்க என் அம்மா இல்லை... என் ஃப்ரெண்ட் சரவணனோட அம்மா!.. சரவணன் 6 மாசத்துக்கு முன்னாடி ஒரு விபத்துல இறந்துட்டான்... அது இவங்களுக்கு தெரியாது... சொல்லாமலே மறைத்து வைத்திருக்கோம்!...ஏன்னா.. அதைக் கேட்டா அடுத்த நிமிஷமே இவங்க மாரடைப்புல செத்துருவாங்க!... அதான்.... நான் தினமும் வந்து சரவணன் மாதிரியே மிமிக்ரி பண்ணி அவங்களுக்கு சாப்பாடு ஊட்டி விடறேன்... அவங்க இப்ப வாழ்க்கையோட இறுதி அத்தியாயத்தில் இருக்காங்க!... மகன் உயிரோடதான் இருக்கிறான் என்கிற சந்தோஷத்திலேயே அவங்க போகட்டுமே!... என்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு"


என்னையுமறியாமல் அவனைக் கையெடுத்துக் கும்பிட்டேன்.



-முகில் தினகரன்.

கோயமுத்தூர்.