நியூயார்க்:
அதானி குழுமம் மீதான ரூ.2,200 கோடி லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு புகார் தொடர்பான விசாரணையை ரத்து செய்யக் கோரி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் நிர்வாகத்தை அதானி தரப்பு நாடியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து முன்னணி செய்தி நிறுவனமான ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு, அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் அதானி, முன்னாள் சிஇஓ வினீத் ஜெயின் உள்ளிட்ட 7 பேர் மீது லஞ்சம் மற்றும் கடன் பத்திர மோசடி தொடர்பான தனித்தனி வழக்குகளில் அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
2020-24 காலகட்டத்தில் அதிக விலைக்கு சூரிய ஒளி (சோலார்) மின்சாரம் வாங்கும் வகையில் விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக தமிழகம், ஆந்திரா, ஜம்மு - காஷ்மீர், சத்தீஸ்கர், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் அரசு அதிகாரிகளுக்கு அதானி குழுமம் ரூ.2,100 கோடி லஞ்சம் கொடுத்ததாகவும், இதை மறைத்து அமெரிக்க நிறுவனங்களிடம் முதலீடு பெற்றதாகவும் அதானி குழுமம் மீது நியூயார்க்கில் உள்ள புரூக்ளின் பெடரல் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக அதானி தரப்புக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்பின் நிர்வாக அதிகாரிகளை அதானி குழும பிரதிநிதிகள் சந்தித்துள்ளனர். இந்த வழக்கு விசாரணையில் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை அவர்கள் ரத்து செய்யக் கோருவதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த பேச்சுவார்த்தை இந்த ஆண்டின் தொடக்கம் முதல் நடந்து வருவதாகவும் தகவல். விரைவில் இதற்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கு ட்ரம்ப் அரசின் முன்னுரிமைகளுடன் ஒத்துப்போகவில்லை என்றும், அதனால் அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அதானி தரப்பு கூறியுள்ளதாக தகவல்.