tamilnadu epaper

வாசகர் கடிதம் (சின்னஞ்சிறுகோபு)-02.05.25

வாசகர் கடிதம் (சின்னஞ்சிறுகோபு)-02.05.25


  'தமிழ் தந்த பரிசு' என்ற சீர்காழி ஆர்.சீதாராமனின் சிறுகதையை படித்தபோது, ஒரு தமிழறிஞர் இப்படி வறுமையில் வாடுகிறாரேயென்று வருத்தமாக இருந்தது. ஆங்கில ஆசிரியராக இருந்தாலும் மகாதேவனின் தமிழ் புலமையை உணர்ந்த குமரன் அவருக்கு செய்த உதவி போற்றத்தக்கதாகும். எப்படியோ கடவுள் குமரன் வடிவில் வந்து மகாதேவனுக்கு புது வாழ்வு கொடுத்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.


  திருமாமகளின் 'சேமிப்பு' என்ற சிறுகதை சேமிப்பின் அவசியத்தை சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்கு பக்குவமாக கற்பிக்க வேண்டுமென்பதை உணர்த்தியது. அப்போதுதான் அவர்கள் பணத்தின் அருமையையும், உழைப்பின் அவசியத்தையும் உணருவார்கள். பெரியவர்கள் ஆனபிறகும் ஊதாரித்தனமாக வீண் செலவு செய்ய மாட்டார்கள்.


  எறிபத்தர் நாயனார் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் எங்கும் படித்ததில்லை. ஆன்மிக களஞ்சியத்தில் எறிபத்தர் நாயனாரைப் பற்றி சுருக்கமாக சுவையாக சொல்லி, அவரைப் பற்றி நன்கு அறிய வைத்து விட்டார் சிவ முத்து லட்சுமணன்.


  ஸ்ரீராமானுஜர் ஜெயந்தியை முன்னிட்டு ஈரோடு க. ரவீந்திரன் எழுதிய கட்டுரையை படித்தேன். 'ஸ்ரீராமானுஜர் ஸ்ரீரங்கத்தில் இருந்த காலகட்டத்தில் அதன் நிர்வாகத்தை சீர்மைப்படுத்தினார். நேரம் காலம் தவறாமல் பூஜைகள் நடைபெற பூஜா காலங்களை முறைப்படுத்தினார். பல குழுக்களை அமைத்து அதற்கு தமது சீடர்களையே தலைவர்களாக அமர்த்தினார். இந்த கட்டு திட்டங்களை விரும்பாத சிலர் ஸ்ரீராமானுஜரை ஒழிக்க திட்டமிட்டனர். இதிலிருந்து ஸ்ரீராமானுஜர் தப்பினார். தீண்டாமைக்கு எதிரான போராட்டம் இன்று நேற்று தொடங்கியது அல்ல. பல நூற்றாண்டு போராட்டம் அது. அந்தப் போராட்டத்தில் ஒரு முக்கிய கண்ணியாக ஸ்ரீராமானுஜர் செயல்பட்டார் என்பதே அவரது பெருமை' என்றெல்லாம் ஸ்ரீராமானுஜரின் வாழ்க்கையை நன்கு படித்து உணர்ந்து இந்த கட்டுரையை க.ரவீந்திரன் எழுதியிருக்கிறார். அதனால் இந்த கட்டுரையை படிக்கும்போதே, ஸ்ரீராமானுஜரின் வாழ்க்கையை தெளிவாக உணர முடிகிறது.


  மாயாண்டி பாரதியின் பெயரை தினம் ஒரு தலைவர்கள் வரிசையில் படித்தபோது, சமீபகாலத்திய தலைவர் போல தெரிகிறதேயென்று நினைத்தேன். அதன் பிறகுதான் இவர் சுதந்திரப் போராட்ட காலத்து வீரர்தான் என்றாலும், பத்து வருடத்திற்கு முன்புவரை, தன்னுடைய 98 வது வயது வரை வாழ்ந்தவர் என்பதும் தெரிந்தது. "நாங்க எல்லாம் பதவி, பட்டம்னு எதிர்பார்த்து இருக்கலையே..." என்ற அவரது தூய்மையான பேச்சு இன்னும் என் இதயத்தில் ஒலித்துக்கொண்டிருக்கிறது!


  புதுக்கவிதை பகுதியில் காஃபி என்ற கவிதையை காஃபியை ருசிப்பதைப்போலவே ரசித்துப் படித்தேன். கவிதையும் ஒரு சூடான காஃபியை போல ஒரு புத்துணர்வை தந்தது. எழுதியவரின் புனைப்பெயரை பார்த்தால் காஃபி நேசன் என்று இருந்தது. அது என்னை கொஞ்சம் புன்னகைக்க வைத்தது!



-சின்னஞ்சிறுகோபு,

  சிகாகோ.