அகத்தி கீரையில் நல்ல பலன்கள் இருந்தாலும், அதை அடிக்கடி சேர்த்துக்கொள்ளக் கூடாது என்கிறார்கள். அகத்தி கீரை மருந்து முறிவு கீரையாகும். வேறு மருந்து சாப்பிடும்போது இக்கீரையை சாப்பிட்டால் மருந்தின் வீரியம் குறைந்து விடும். அதனால்தான் மக்களும் இந்த கீரையை மற்ற கீரைகளை போல அடிக்கடி உபயோகிப்பதில்லை.
ஏழெட்டு வயது குழந்தைள் ஐந்தாறு சேர்ந்துக்கொண்டு ஒரு பாட்டியின் உதவியுடன் அருஞ்சுவை பழரசம் வியாபாரம் செய்வது சுவாரஷ்யமாக இருந்தது. சசிகலா விஸ்வநாதனின் இந்த கதை முற்றிலும் ஒரு மாறுதலான கதைதான்!
தமிழ்நிலாவின் 'புரியாத புதிர்' சிறுகதையை படித்தேன். நாளைய தேவைக்கு இன்று உறவைக் கொண்டாடுவதை காரிய வாதம் என்பதா? சாதுர்யம் என்பதா? பார்வதிக்கு புரியாததை போலவே எனக்கும் புரியாமல்தான் இருக்கிறது. ஆனாலும் இப்போதுள்ள தலைமுறைகள் ஏதாவது ஒரு சுய ஆதாயத்தை வைத்தே ஒவ்வொரு காரியத்தையும் செய்கிறார்கள்!
பயணங்கள் முடிவதில்லை பகுதியில் கா.ந. கல்யாணசுந்தரத்தின் அமெரிக்கா பயணம் என்ற கட்டுரையை அமெரிக்காவிலிருந்தே படித்தேன். சுவாரஷ்யமாக பல தகவல்களை நிறைய படங்களுடன் சொல்லியிருக்கிறார். இன்னும் பல தகவல்களை அவர் சொல்ல இருப்பது மகிழ்ச்சிக்குரியதுதான்.
ப.கோபிபச்சமுத்து நந்தி தேவரைப்பற்றி நிறைய தகவல்களை சொல்லி ஆச்சரியத்தில் ஆழ்த்தி விட்டார். சிவாலயங்களில் உள்ள நந்திதேவர் மூன்று கால்களை மடக்கி, ஒரு காலை மட்டும் நிமிர்த்தியுள்ளதை பார்த்திருக்கிறேன். அற்கான காரணத்தை இப்போதுதான் இந்த கட்டுரை மூலம்தான் அறிந்தேன்.
விடுதலைப் போராட்டவீரரும், காங்கிரஸ் கட்சியில் பல முக்கியமான பதவிகளை வகித்தவரும், தமிழக அமைச்சராகவும் இருந்த பி.கக்கன் அவர்கள் நாமெல்லாம் நன்கு அறிந்த மிக சமீப காலத்தவர். அவரைப்பற்றிய இந்த கட்டுரை அவரது வெற்றித்தோல்விகளையும், அவரது சாதனைகளையும் தெளிவாக சொல்லியிருக்கிறது.
'திருடா திருடா' என்ற முத்து ஆனந்த்தின் கவிதையை படித்து இதென்ன புதுவித திருட்டாயிருக்கே என்று ஆச்சரியப்பட்டேன். நல்ல மகிழ்ச்சியான திருட்டுதான். இதைப்போன்று இந்த புதுக்கவிதை பகுதியில் வெளிவந்திருக்கும் ஒவ்வொரு கவிதைகளும் ஒவ்வொரு விதத்தில் சிறப்புதான்!
-சின்னஞ்சிறுகோபு ,
சிகாகோ.