அனைவருக்கும் எனது காலை வணக்கம் !
தமிழக பாஜகவில் புதிய மாநில தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக நடைமுறைகள் தொடங்கி இருக்கின்றன. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான தகுதி நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
ஒருவர் மாநிலத் தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பாஜகவில் உறுப்பினராக இருக்க வேண்டும் என்று விதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
இதனால் அதிகாரியாக இருந்து அரசியல்வாதியாக மாறிய அண்ணாமலையோ
அதிமுகவில் இருந்து வந்து பாஜகவில் ஐக்கியமான நயினார் நரேந்திரனோ போட்டியிடுவதற்கு தடை ஏற்பட்டிருக்கிறது,
அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி படித்தேன். இறைவனின் படைப்பில் மனிதனுக்காக படைக்கப்பட்ட அத்தனை பழங்களிலும் சத்து நிறைந்திருக்கிறது. நாம் தான் அவற்றை சாப்பிடாமல் புறக்கணிக்கிறோம்.
" தப்பு கணக்கு " சிறுகதை படித்தேன். கரடு முரடாக தோற்றமளித்த ஆட்டோ ஓட்டுனரின் மென்மையான நல்ல மனசு பயனித்த அந்த பெண்ணுக்கு உடனடியாக தெரியவில்லை.
எனவே ஒருவரை அவரது புறத்தோற்றத்தை வைத்தே குணத்தை எடை போடக்கூடாது என்பதற்கு இந்த கதை உதாரணமாக விளங்குகிறது.
" தினம் ஒரு தலைவர்கள் " பகுதியில் பரலி சு.நெல்லையப்பர் பற்றிய வரலாறு படித்தேன்.
அவரது பெயரை கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அவர் நாட்டுக்காக செய்த தியாகங்களை கட்டுரை மூலமாக அறிய முடிந்தது.
விரைவில் கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப் போவதாக அமைச்சர் பெரிய கருப்பன் அறிவித்திருக்கிறார்.
கூட்டுறவு சங்கங்களுக்கு நடத்தப்படும் தேர்தல்களில் தலைவராகவும் உறுப்பினர்களாகவும் தேர்ந்தெடுக்கப்படுபவர் அனைவரும் கிட்டத்தட்ட ஆளுங்கட்சியின் பிரமுகர்களாக இருப்பது என்பது கட்சி பேதமின்றி அனைத்து ஆட்சிகளிலும் நடப்பதுதான்.
கூட்டுறவு சங்கங்கள் லோக்கல் ஆளுங்கட்சிக் காரர்களுக்கு பதவி வழங்கும் அட்சய பாத்திரங்களாக விளங்குகின்றன.
சென்னையில் 14 வயது நிரம்பிய தனது மகனிடம் காரை கொடுத்ததால் அவன் விபத்தை ஏற்படுத்தி விட்டான். அந்த குற்றத்துக்காக அவனது தந்தை புழல் சிறையில் கம்பி எண்ணுகிறார். இந்தக் காலத்தில் பெற்றோர் தங்கள் குழந்தைகளை கண்டித்து வளர்ப்பதில்லை.
அவர்களை கடவுளின் அவதாரங்களாகவே கருதுவது தான் சோகம்.
இப்போது புதிது புதிதாக முளைத்து வரும் இலவச கம்ப்யூட்டர் செயலிகளால் ஆபத்து இருப்பதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை செய்துள்ளனர்.
எனவே கண்ட கண்ட செயலிகளை ஆர்வக்கோளாறினால் டவுன்லோட் செய்வதை நாம் நிறுத்த வேண்டும்.
யாராவது ஒரு லிங்கை அனுப்பி அதனுள் செல்லச் சொன்னால் பல முறை யோசிக்க வேண்டும். அது சைபர் கிரைம்காரர்கள் நமக்கு வைத்த " பொறி "
யாகவும் இருக்கலாம்.
முன்பு ஒரு குறள் மொழி சொல்வார்கள்
" யாகாவாராயினும் நாகாக்க "
என்று ! இன்று "யாகாவாராயினும் விரல் நுனி காக்க " என்று புதுமொழியை சொல்லலாம் போல இருக்கிறது.
அவசரப்பட்டு மொபைலில் கண்ட லிங்குகளை தொடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த புது மொழி.
-வெ.ஆசைத்தம்பி
தஞ்சாவூர்.