tamilnadu epaper

வாசகர் கடிதம் (வெ.ஆசைத்தம்பி )-16.04.25

வாசகர் கடிதம் (வெ.ஆசைத்தம்பி )-16.04.25


அமெரிக்காவின் வரிவிதிப்பு போரால் அந்நாட்டுக்கும் சீனாவுக்குமான வர்த்தகம் பெரும் பாதிப்படைந்து இருக்கிறது.

அமெரிக்காவுக்கு கனிமங்கள், காந்த பொருட்கள், உலோகம் போன்றவற்றை அனுப்புவதை சீனா தடை செய்து இருக்கிறது.


இதனால் அமெரிக்காவின் ராணுவ தளவாட உற்பத்தியில் இருந்து இன்னும் பல முக்கிய உற்பத்தி பொருட்களையும் தயாரிக்க முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது.


இந்நிலையில் அமெரிக்காவிலிருந்து போயிங் விமானங்களை இறக்குமதி செய்வதை நிறுத்தி வைக்குமாறு சீன பிரதமர் உத்தரவிட்டிருக்கிறார். இப்படிப்பட்ட சீனாவின் அதிரடி நடவடிக்கைகள் அமெரிக்க பொருளாதாரத்தை நிச்சயம் பாதிக்கும்.


உலக நாடுகள்  ஏதோ ஒரு வகையில் எலக்ட்ரானிக் மூலப் பொருட்களுக்கும், உதிரி பாகங்களுக்கும் சீனாவையே பெரிதும் நம்பி இருப்பது அனைவரும் அறிந்ததே !


முக்கியமான ஒரு சில பொருட்களுக்காக சீனாவை எதிர்பார்த்து இருக்க வேண்டிய நிலை நமக்கு இருக்கிறது என்பதை ட்ரம்ப் யோசிக்க தவறிவிட்டார்.


ட்ரம்ப் வெட்கத்தை விட்டு விட்டு விரைவில் சீன நாட்டுக்கு விதித்து இருந்த வரியை தள்ளுபடி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


அமெரிக்க அதிபர் எதையுமே யோசிக்காமல் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று நடந்து கொள்கிறார். அவர் நினைத்ததை எல்லாம் உத்தரவாக மாற்றுகிறார். 

அது அவர் தனது பதவிக் காலத்தை முழுவதுமாக சுமுகமாக கழிப்பதற்கு முட்டுக்கட்டையாக அமையக்கூடும் என்பது அனைவரது கருத்தாகும்.


ஹார்வர்டு பல்கலைக்கழகம் ட்ரம்ப்பின் உத்தரவை புறந்தள்ளியதால் அதற்கு கொடுக்க வேண்டிய நிதி உதவியை நிறுத்தி வைத்திருக்கிறார்.


இப்படி நாங்கள் சொல்வதைக் கேட்காவிட்டால் நிதியை வழங்க மாட்டோம் என்று அவர் சொல்வதற்கு அவருக்கு யார் ரோல் மாடல் என்பதை நாமே யூகித்துக் கொள்ளலாம்.


நமது மாநிலத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு போதை பொருட்கள்  கைப்பற்றப்படுவது கவலை அளிக்கிறது. 


போதைப் பொருள் வியாபாரிகள் இளைய தலைமுறையினரான மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் ஐடி ஊழியர்களை குறி வைத்து இவற்றை விற்பனை செய்கிறார்கள் என்பது மிகவும் கவலைக்குரிய விஷயம்.


தமிழ்நாட்டில் ஒரு பள்ளியில் பென்சில் தகராறு காரணமாக ஒரு மாணவரை மற்றொரு மாணவர்

அரிவாளால் வெட்டி இருக்கிறார். அதை தடுக்கச் சென்ற ஆசிரியைக்கும் வெட்டு விழுந்திருக்கிறது.


மாணவர்களை ஆசிரியர்கள் திட்டக்கூடாது அடிக்க கூடாது என்ற சட்டம் வந்த பிறகு மாணவர்களின் ஒழுக்கம் சீர்குலைந்து போய் இருப்பதே இது காட்டுகிறது.


-வெ.ஆசைத்தம்பி 

தஞ்சாவூர்