ஜெருசலேம்,
இஸ்ரேல் , ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டுக்குமேல் நடைபெற்று வருகிறது. இந்த போரில் 52 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர் ஆதரவு அளித்து வருகின்றனர்.
ஹமாசுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் அரபிக்கடல், செங்கடலில் செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும், இஸ்ரேல் மீதும் அவ்வப்போது ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, இஸ்ரேல் விமான நிலையத்தை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இன்று ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள பென் குரின் சர்வதேச விமான நிலையத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.
இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பையும் மீறி ஏவுகணை விமான நிலையத்திற்குள் உள்ளே ஓடுதளம் அருகே இருந்த சாலையில் விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் 7 பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில், பென் குரின் விமான நிலைய தாக்குதலுக்கு பதிலடியாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தப்படும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்து தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம். ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை ஏற்கனவே எடுத்துள்ளோம். அவர்களுக்கு எதிராக எதிர்காலத்திலும் செயல்படுவோம். இந்த முறை ஒரு தாக்குதல் நடத்திவிட்டு நிறுத்தப்போவதில்லை. ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தப்படும்’ என்றார்.