டைரக்டர் சோமு சினிமா உலகத்தின் வெற்றி, வீழ்ச்சி எல்லாவற்றையும் பார்த்தவர். ஆனால் அவருக்குப் புரியாத ஒரே கதாபாத்திரம் அவர் மகன் கார்த்திக்.
கார்த்திக் பாடகன். நல்ல குரல் இருந்தது. ஆனால் அந்தக் குரலை விட பெரியதாக இருந்தது அவனுடைய அகங்காரம். “நான் யாருன்னு உங்களுக்கு தெரியுமா? டைரக்டர் சோமுவின் மகன்,” என்ற அடையாளம் அவனுக்கு கவசம் போல. பயிற்சி இல்லை. பொறுமை இல்லை. தோல்வியை ஏற்கும் மனமும் இல்லை.
“பாடுறது மட்டும் போதாது கார்த்திக்...மத்தவங்க திருத்தம் சொன்னா கேட்டுக் கற்றுக்கோ,” என்று சோமு சொன்ன ஒவ்வொரு முறையும், கார்த்திக் சிரித்தான். “எனக்கு திருத்தம் சொல்ற அளவுக்கு எவனுக்குத் திறமை இருக்கு?,” என்ற அவன் பதில்கள் சோமுவின் இதயத்தில் சின்னச் சின்ன வெட்டுகள்.
ஒரு நாள், ரயில் பயணத்தில், அந்த வெட்டுகளுக்கு பதில் கிடைத்தது. ரயிலில் பாடிக் கொண்டிருந்த இளைஞன், எந்தப் பின்னணியும் இல்லை, எந்தப் பெயரும் இல்லை. ஆனால் பாடலில் வாழ்ந்தான். ஒவ்வொரு வரியிலும் பசி, தோல்வி, கனவு எல்லாம் கலவையாய் வந்து போயின.
சோமுவின் மனதில் ஒரு எண்ணம் மெல்ல உருவானது. "இவனை வெச்சுத்தான் கார்த்திக்கிற்கு பாடம் புகட்டணும்"
அந்த ரயில் பாடகன் திரையுலகிற்குள் கால் வைத்த நாளே, கார்த்திக்கின் உலகம் சறுக்கத் தொடங்கியது.
அவன் முதன்முறையாக ‘நிராகரிப்பு’ என்ற வார்த்தையை கேட்டான்.
ஒரு நாள் இரவு, கார்த்திக் வெடித்தான். “என்ன தண்டிக்குறீங்களா அப்பா? ஒரு பிச்சைக்காரனை வெச்சு என்னைப் பழி வாங்கறீங்களா?''
சோமு அமைதியாகப் பார்த்தார். “நான் உன்னை பழிவாங்கலே கார்த்திக். உன்னை நீயே பழிவாங்கிக்கிட்டே... அவன் பிச்சைக்காரன் இல்ல. அவன் ஒரு பிறவிக் கலைஞன். நீ… இன்னும் கலஞனாகக் கூட ஆகலை.”
அந்த வார்த்தைகள் கார்த்திக்கின் அகங்காரத்தை உடைத்தது. நாட்கள் கழிந்தன. வாய்ப்புகள் போனது. புகழ் பேசவில்லை. வீட்டில் அமைதி மட்டும் கனமாக இருந்தது.
ஒரு மழை இரவில், கார்த்திக் தந்தையின் காலடியில் அமர்ந்தான். “அப்பா… நான் கலையை நேசிக்கல... புகழை மட்டுமே நேசிச்சேன்... அதனால்தான் அது என்னை விட்டுப் போச்சு. மன்னிச்சுடுங்க.”
சோமு மகனைத் தூக்கி அணைத்தார். அந்த அணைப்பில் கோபமும் இல்லை, ஒரு தந்தையின் நிம்மதி மட்டும் இருந்தது.
சில காலம் கழித்து, ரயில் பாடகர் சினிமாவை விட்டு விலகிய செய்தி வந்தது. “இந்த உலகம் என் சத்தத்தை மாற்றுது சார்... நான் என் இயல்பாய் இருக்க முடியலை.... ரயில்தான் எனக்கு உண்மை,” என்று சொல்லிப் போய் விட்டான்.
சோமு அவனைத் தேடவில்லை. அவன் அவனாகவே வாழட்டும் என்று விட்டு விட்டார்.
(முற்றும்)
முகில் தினகரன்
கோயமுத்தூர்