அனைத்து கட்சிகளும் எங்களுக்கு தோழமை கட்சிகள் தான்” - கூட்டணி குறித்து பிரேமலதா பேச்சு
அருப்புக்கோட்டை: “தமிழ்நாட்டிலும், மத்தியிலும் உள்ள அனைத்து கட்சிகளும் தேமுதிகவுக்கு தோழமை கட்சிகள் தான். மக்களுக்கு நல்லது செய்யும் வகையில் ஒரு மகத்தான கூட்டணியை தேமுதிக அமைக்கும். தேமுதிகவுக்கு உரிய இடங்கள் கிடைக்கும்” என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே செம்பட்டி கிராமத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரமலதா இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, முத்தரையர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப் புத்தங்கள் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற பிரச்சாரத்தில் அவர் பேசுகையில், “தமிழகம் முழுவதும் நேரடியாக சென்று மக்களை சந்திக்க இருக்கிறேன்.
இது நெசவாளர்கள் அதிகம் உள்ள பூமி. விவசாயிகளுக்கும் நெசவாளர்களுக்கும் தேமுதிக எப்போதும் உற்ற நண்பனாக இருக்கும். ஒரு காலத்தில் நெசவாளர்களுக்கு பிரச்சினை வந்தபோது ஒரு கட்சி பிரியாணி, ஒரு கட்சி கஞ்சியும் கொடுத்தாங்க. ஆனால், விஜயகாந்த் மட்டும் தான் நீங்க நெசவு செய்த அந்த துணிகளை 10 லட்சம் ரூபாய்க்கு தன் சொந்த செலவிலேயே வாங்கி தமிழ்நாடு முழுக்க அதை மக்களுக்கு கொடுத்து உங்களுக்கு பெரும் மதிப்பையும் கௌரவத்தையும் உருவாக்கிக் கொடுத்தார்.
இதே அருப்புக்கோட்டை தொகுதியில் ராமானுஜபுரத்தில் பிறந்து வளர்ந்தவர் விஜயகாந்த். விஜய பிரபாகரன் இத்தொகுதியில் போட்டியிட்டார். உண்மை மறைக்கப்பட்டு அவர் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. கடவுள் இருந்தால் நிச்சயம் தர்மம் ஜெயிக்கும்.
விஜய பிரபாகரன் எப்பொழுதும் விருதுநகர் மாவட்ட மக்களுக்கு துணை நிற்பார். அவர் எப்பவுமே உங்கள் வீட்டுப் பிள்ளை. அவரு என்னைக்குமே மக்களோட மக்களாக இருந்து இந்த விருதுநகர் தொகுதிக்கு நல்லது செய்வார்.
நல்லவர்கள் லட்சியம் வெல்வது நிச்சயம். தர்மம் வெல்லும், நியாயம் கிடைக்கும் என்று சொல்லி 2026 சட்டமன்ற தேர்தல் தமிழ்நாட்டுக்கு மக்களுக்கும் நல்லது செய்யும் வகையில் ஒரு மகத்தான கூட்டணியை தேமுதிக அமைக்கும். அது மக்களும் தொண்டர்களும் விரும்பும் ஒரு கூட்டணியாக அனைவரும் வரவேற்கும் ஒரு கூட்டணியாக நிச்சயமாக இருக்கும். விரைவில் தேர்தல் வரும் அனைவரும் தயாராக இருங்கள். ஒரு நல்ல ஆட்சியை கொண்டு வர வேண்டியது நம் கடமை. எனவே 2026 நிச்சயம் மக்களுக்கு நல்லது நடக்கும் ஒரு ஆண்டாக இருக்கும் என்று கூறினார்.