கடந்த 2025 டிசம்பர் முதல் ஈரான் அரசுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தை ஒடுக்க ஈரான் மேற்கொண்ட நடவடிக்கையில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இந்த கொடூர அடக்குமுறைக்கு பதிலடியாக, ஈரான் மீது தாக்குதல் நடத்தப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தார். அப்போது முதல் இரு நாடுகள் இடையே மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.
ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்கி விடக் கூடாது என்பதால் தங்கள் நாட்டுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என ட்ரம்ப் கோரி வருகிறார். ஈரானை அச்சுறுத்த அமெரிக்க போர்க் கப்பல்களை வளைகுடா பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இந்த நிலையில் அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தினால், அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தும் என்று அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து ஒரு பேட்டியில் பேசிய அவர், "எங்களால் அமெரிக்க மண்ணைத் தாக்க முடியாமல் போகலாம், ஆனால் எங்கள் பிராந்தியத்தில் உள்ள அவர்களின் தளங்களை நிச்சயமாகத் தாக்குவோம். இது அந்தத் தளங்களைக் கொண்டுள்ள அண்டை நாடுகளுக்கு எதிரான தாக்குதல் அல்ல. அங்குள்ள அமெரிக்கப் படைகளுக்கு எதிரான நடவடிக்கை மட்டுமே. எந்தவொரு பேச்சுவார்த்தையும் மிரட்டல்கள் இன்றி நடைபெற வேண்டும். நாங்கள் அணுசக்தி விவகாரத்தை மட்டுமே விவாதிப்போம், மற்ற விஷயங்களை அல்ல" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஈரானில் உள்ள அமெரிக்க மக்கள் உடனே ஈரானை விட்டு வெளியேற வேண்டும் என அமெரிக்க அரசு அறிவுறுத்தி இருந்தது.
இந்தச் சூழலில், அடுத்த வாரத் தொடக்கத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்புள்ளதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இருப்பினும், இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் இந்த நேரடித் தாக்குதல் மிரட்டல்கள், உலக அளவில் கச்சா எண்ணெய் விலை மற்றும் சர்வதேசப் பாதுகாப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘முழுமையான இந்திய வரைபடம்’ - பாக்., சீனாவை மூக்குடைத்ததா அமெரிக்கா?
இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்க அரசு அதிகாரபூர்வமாக பகிர்ந்த எக்ஸ் பதிவில் இடம்பெற்றிருந்த ‘முழுமையான இந்தியா’ வரைபடம் பல்வேறு விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது.
இந்தியா - அமெரிக்கா இடையேயான இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை இரு நாடுகளும் ஏற்றுக்கொண்டதை அடுத்து, இது தொடர்பான கூட்டறிக்கையை வெள்ளை மாளிகை வெளியிட்டது.
வர்த்தக உலகில் இந்த ஒப்பந்தத்தை ஒட்டி பல்வேறு கருத்துகள் ஒருபுறம் வெளியாகி வரும் சூழலில், கூட்டறிக்கை குறித்து அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஒருவர் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த இந்திய வரைபடம் மறுபுறம் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
அந்தப் பதிவில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) என்று அறியப்படும் ஜம்முவின் வடக்கு பகுதி, தனது எல்லைக்கு உட்பட்ட பகுதி என்று சீனா உரிமை கோரிவரும் அக்ஷய் சின் (Aksai Chin) ஆகியனவற்றை அந்த இந்திய வரைபடம் உள்ளடக்கியுள்ளது. இது இப்போது இணைய வெளியில் பேசுபொருளாகியுள்ளது.
----------