news Breaking News
clock

அருள்மிகு வெங்கடேசப்பெருமாள் திருக்கோயில்...!!

அருள்மிகு வெங்கடேசப்பெருமாள் திருக்கோயில்...!!



கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மொண்டிபாளையம் என்னும் ஊரில் அருள்மிகு வெங்கடேசப்பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது.




கோயம்புத்தூரிலிருந்து சுமார் 41 கி.மீ தொலைவில் உள்ள மொண்டிபாளையம் என்னும் ஊரில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.



இங்கு பெருமாள் சாளகிராம சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.


இத்தலத்தில் பெருமாள் ஏகதள விமானத்தின் கீழ் காட்சியளிக்கிறார்.


இத்தலத்தில் உள்ள வெங்கடேசர் நான்கு புறமும் பட்டையாகவும், மத்தியில் கூராக, வாழைப்பூ வடிவில், சுயம்பு லிங்கம் போல காட்சி தருவது வேறு வைணவத்தலங்களில் காண முடியாத சிறப்பாக உள்ளது.


இத்தலம் 'மேலத்திருப்பதி" என்ற சிறப்பு பெயருடனும் அழைக்கப்படுகிறது. திருப்பதிக்கு ஏழுமலைகளைக் கடந்து செல்வதைப் போலவே, இங்கு செல்ல வேண்டுமெனில் இயற்கையாகவே அமைந்த ஏழு மேடுகளைக் கடந்தே செல்ல வேண்டும்.


வடகிழக்கே சனீஸ்வர பகவான் தனது காக வாகனத்தில் தனியே அமர்ந்தும், வலது முகப்பில் கிழக்கு நோக்கியபடி சக்கரத்தாழ்வார் நின்ற கோலத்தில் சக்கரவடிவிலும், வீர ஆஞ்சநேயர் வடக்கு நோக்கியபடியும் காட்சி தருகின்றனர்.


சுற்றுப் பிரகாரத்தில் வேணுகோபால், ஆழ்வார்கள், மகாலட்சுமி, ஆண்டாள், வைகுண்ட நாராயணமூர்த்தி ஆகியோர் அமைந்துள்ளனர்.


சுவாமிக்கு இடது புறத்தில் திருப்பாதம் அமைந்துள்ளது. இங்கு சுவாமியை வணங்க வருபவர்களுக்கு துளசி, வேம்பு, வெள்ளெருக்கு, பூமொட்டு, அரளி, ஊஞ்சற்கரி, எலுமிச்சைச்சாறு ஆகிய மூலிகை பொருட்கள் கலந்த மல்லிப்பொட்டு எனும் சிறப்பு பிரசாதம் வழங்கப்படுகிறது.




தை மாதத்தில் 10 நாள், மார்கழியில் 11 நாள் பிரம்மோற்சவம் பிரதான திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.


விஜயதசமி, ஆயுதபூஜை, சரஸ்வதிபூஜை, திருக்கார்த்திகை தீபம், வைகுண்ட ஏகாதசி, கிருஷ்ணஜெயந்தி, ராமநவமி மற்றும் புரட்டாசி சனிக்கிழமை ஆகிய நாட்களில் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.




வெங்கடேசரை வணங்கிட திருமணத்தடை நீங்கும், குடும்பம் மற்றும் தொழில் விருத்தியடையும், பாவங்கள் நீங்கி மோட்சம் கிட்டும். மல்லிப்பொட்டினை நெற்றியில் இட்டுக்கொள்ள நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை.



சுவாமிக்கு தளிகை நைவேத்தியம் படைத்து அஷ்டோத்ர அர்ச்சனைகள் செய்து விசேஷ திருமஞ்சனம், சுதர்சன ஹோமம், திருக்கல்யாணம் நடத்தி வைத்து நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர்.

 

Thanks and regards 

A s Govinda rajan 



அருள்மிகு கும்பேஸ்வரர் திருக்கோயில்...!!




தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் என்னும் ஊரில் அருள்மிகு கும்பேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. 




தஞ்சாவூரிலிருந்து சுமார் 37 கி.மீ தொலைவில் கும்பகோணம் அமைந்துள்ளது. கும்பகோணம் நகரின் மையப்பகுதியில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. தஞ்சாவூரிலிருந்து கும்பகோணத்துக்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.



இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். லிங்கம் கீழே பருத்தும், மேலே செல்ல செல்ல ஊசி வடிவிலும் காணப்படும்.


இக்கோயிலில் கல் நாதஸ்வரம் இருக்கிறது.


சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 89வது தேவாரத்தலம் ஆகும். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது விஷ்ணு சக்தி பீடம், மந்திரிணி சக்தி பீடம் ஆகும்.



உலகம் அழிந்த போது, உயிர்களை மீண்டும் இவ்வுலகில் படைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சிவபெருமான், பிரம்மா மூலம் படைப்புக்கலன்களை ஒரு கும்பத்தில் வைத்து காப்பாற்றினார். இதனால் 'கும்பேஸ்வரர்" என்று பெயர்பெற்றார்.


கும்பேஸ்வரரை வணங்கிய பிறகு, முதல் பிரகாரத்தில் உள்ள 63 நாயன்மார்கள், சப்த மாதர்கள், காமதேனு, பவலிங்கம், சர்வ லிங்கம், ஈசான லிங்கம், பசுபதி லிங்கம், ருத்ர லிங்கம், உக்ர லிங்கம், பீம லிங்கம், மகாலிங்கம், தட்சிணாமூர்த்தி ஆகியோரை தரிசித்த பிறகு சற்று தள்ளியுள்ள வலஞ்சுழி விநாயகரை வணங்க வேண்டும்.


பிட்சாடனர், முருகன், அட்சயலிங்கம், சகஸ்ரலிங்கம், அன்னபூரணி, கஜலட்சுமி, மகாலட்சுமி, கோஷ்டத்திலுள்ள பிரம்மா, சரஸ்வதி ஆகியோருக்கு சன்னதி அமைந்துள்ளது.


12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாசி மாதத்தில் குரு சிம்ம ராசியிலும், சூரியன் கும்ப ராசியிலும் பிரவேசிக்கும் பௌர்ணமி நன்னாளில் மகாமக திருவிழா இத்திருக்கோயிலில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.


வைகாசியில் திருக்கல்யாணம், ஆனியில் திருமஞ்சனம், ஆடியில் பதினெட்டாம் பெருக்கு, ஆடிப்பூரம், பங்குனித்திருவிழா ஆகியவை கொண்டாடப்படுகிறது.




கல்வியில் சிறந்து விளங்க நினைப்பவர்கள், தொழில் துவங்குபவர்கள், திருமணத்தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், குபேர வாழ்வு விரும்புபவர்கள் மங்கள நாயகிக்கு ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் செம்பருத்தி பூவால் அலங்காரம் செய்து பிரார்த்தனை செய்கின்றனர்.




சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் சாற்றியும் நேர்த்திக்கடனை நிறைவேற்றலாம்.

 


 Thanks and regards 

A s Govinda rajan 


அருள்மிகு அபயவரத ஆஞ்சநேயர் திருக்கோயில்...!!




திண்டுக்கல் மாவட்டத்தின் மையப்பகுதியில் அருள்மிகு அபயவரத ஆஞ்சநேயர் திருக்கோயில் அமைந்துள்ளது.




திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து மதுரை செல்லும் வழியில் சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ள மலைக்கோட்டையின் அடிவாரத்தில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.



அருள்மிகு அபயவரத ஆஞ்சநேயர் திருக்கோயிலில் மூலவரான ஆஞ்சநேயரின் கால்களில் பாதரட்சை (காலணி) அணிந்து, இடுப்பில் கத்தி செருகி போர்க்கோலத்தில் காட்சி தருகிறார். இத்தகைய அமைப்பில் ஆஞ்சநேயரின் தரிசனம் கிடைப்பது அபூர்வம்.



பொதுவாக, ஆஞ்சநேயருக்கு பெருமாளுக்குரிய சனிக்கிழமையே உகந்த நாளாக கருதப்படுகிறது. ஆனால், இத்தலத்தில் மூலவரை சிவபெருமானின் அம்சமாக வணங்கப்படுவதால், வியாழக்கிழமைகளில் வடை மாலை அணிவித்தும், தயிர் சாதம் படைத்தும் பக்தர்கள் வழிபடுகிறார்கள்.


மூலவர் சன்னதியின் பின்புறம் வேணுகோபாலர் சன்னதி அமைந்துள்ளது. இவருக்கு ரோகிணி நட்சத்திர நாளில் திருமஞ்சனத்துடன் பூஜை நடக்கிறது.




பெரும்பாலான ஆஞ்சநேயர் கோயில்களில் மட்டைத் தேங்காய் கட்டி பிரார்த்தனை செய்யும் வழக்கம் உள்ளது. ஆனால், இத்திருக்கோயிலில் கிரக, ஜாதக தோஷ நிவர்த்திக்காக இளநீர் கட்டி வேண்டிக் கொள்கின்றனர்.


ராமவதாரத்தின் போது, பெருமாள் ஆகிய இராமருக்கு சிவபெருமானே ஆஞ்சநேயராக தோன்றி சேவை செய்தார். இதை உணர்த்தும் விதமாக இக்கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் சிலையின் மார்பில் சிவலிங்கம் வடிக்கப்பட்டுள்ளது.



இத்திருக்கோயிலில் ராமநவமி, கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமை, நவராத்திரி போன்றவைகள் கொண்டாடப்படுகின்றது.


தை அமாவாசை அன்று சுவாமிக்கு செந்தூரக்காப்பு அலங்காரம் செய்து விசேஷ பூஜை நடைபெறுகின்றது.



ஆடி அமாவாசை மற்றும் ஆடிப்பெருக்கு அன்று பெண்கள் கோயில் தீர்த்தக்கரையில் தாலிக்கயிறு மாற்றுகிறார்கள். துவங்கும் செயல்களில் தடையின்றி, வெற்றி கிடைக்கவும் இங்கு வேண்டிக் கொள்கிறார்கள்.




அருள்மிகு அபயவரத ஆஞ்சநேயர் திருக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் வெற்றிலை மற்றும் வடை மாலை அணிவித்தும், வெண்ணெய் காப்பு சாற்றியும் நேர்த்திக்கடனை நிறைவேற்றுகிறார்கள்.

 


Thanks and regards 

A s Govinda rajan 


அருள்மிகு அழகிய மணவாளர் திருக்கோயில்...!!




திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூர் என்னும் ஊரில் அருள்மிகு அழகிய மணவாளர் திருக்கோயில் அமைந்துள்ளது.




திருச்சி ஜங்ஷன் பேருந்து நிறுத்தத்திலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் உறையூர் அமைந்துள்ளது. உறையூர் பேருந்து நிறுத்தத்திலிருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.




மூலஸ்தானத்தில் அழகிய மணவாளப் பெருமாளும், கமலவல்லி தாயாரும் திருமணக் கோலத்தில் நின்றபடி காட்சி தருகின்றனர்.


இங்கு சுவாமி, தாயார் இருவரும் வடக்கு திசை நோக்கியிருக்கின்றனர்.



திருப்பாணாழ்வார் இத்தலத்தில் அவதரித்ததால் இங்கு இவருக்கு தனிச்சன்னதி உள்ளது.


பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 2வது திவ்ய தேசம் ஆகும். இத்தலத்தை திருமங்கையாழ்வாரும் மங்களாசாசனம் செய்துள்ளார்.


மூலஸ்தானத்தில் தாயார் மட்டுமே உற்சவராக இருக்கிறாள். பெருமாள் உற்சவர் இல்லை.


பிரகாரத்தில் நம்மாழ்வார், ராமானுஜன் ஆகியோருக்கு சன்னதிகள் உள்ளன.


மூலவரின் விமானம் கமலவிமானம் எனப்படுகிறது. இத்திருக்கோயில் 5 நிலை கோபுரம் உடையது.


பொதுவாக வைகுண்ட ஏகாதசியன்று பெருமாள் சொர்க்கவாசலைக் கடந்து வரும் வைபவம் வைணவத் தலங்களில் நடைபெறும். இத்தலத்தில் தாயார் சொர்க்கவாசல் கடக்கும் நிகழ்ச்சி மாசி மாத தேய்பிறை ஏகாதசி நாளில் நடைபெறும். வைகுண்ட ஏகாதசியன்று இத்திருக்கோயிலில் சொர்க்கவாசல் திறப்பதில்லை.


இங்கே பகவானுக்குரிய எல்லா வழிபாடுகளும் இந்த கமலவல்லித் தாயாருக்கு நடக்கிறது.


இத்தலம் தாயாரின் பிறந்த தலம் என்பதால் இவளே இங்கு பிரதானமாக இருக்கிறாள். இவளது பெயரால் இத்தலம் நாச்சியார் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.



திருமணத்தடையுள்ளவர்கள் ஆயில்யம் நட்சத்திரத்தன்று தாயாருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணம் நிச்சயமாகும் என்பது நம்பிக்கை.


பொதுவாக பெருமாள் தலங்களில் குங்கும பிரசாதம் கொடுப்பர். ஆனால் இங்கு சந்தன பிரசாதம் தருகின்றனர்.



நவராத்திரி மற்றும் கார்த்திகையில் திருப்பாணாழ்வார் திருவிழா 10 நாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.




கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்க இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.



தாயாருக்கு திருமஞ்சனம் செய்து நேர்த்திக்கடனை நிறைவேற்றுகிறார்கள்.

 


Thanks and regards 

A s Govinda rajan 


அருள்மிகு தேசிகநாதர் திருக்கோயில்...!!



சிவகங்கை மாவட்டம் நகர சூரக்குடி என்னும் ஊரில் அருள்மிகு தேசிகநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது.



காரைக்குடியில் இருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் நகர சூரக்குடி என்னும் ஊர் உள்ளது. நகர சூரக்குடி பேருந்து நிறுத்தத்திலிருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.



அருள்மிகு தேசிகநாதர் திருக்கோயிலின் மூலவரான தேசிகநாதர் சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். இறைவி ஆவுடைநாயகி ஆவார்.



தட்சிணாமூர்த்தி மண்டபம் எனப்படும் பதினாறு கால் மண்டபம், பிரம்மாண்டமான வண்ணக் கோபுரம் ஆகியவை சிறந்த வேலைப்பாடுகளை உடையவை எனும் பெருமை கொண்டவை.


காசி விசுவநாதர், விசாலாட்சி, வள்ளி, தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், மகாலட்சுமி, சரஸ்வதி, ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், நாவுக்கரசர் உள்ளிட்ட அறுபத்து மூவர் காட்சியளிக்கின்றனர்.


இத்திருக்கோயிலில் பைரவரே பிரதான மூர்த்தி ஆவார். பக்தர்கள் முதலில் பைரவரை வழிபட்ட பின்பே சிவன், அம்பாளை வணங்குகிறார்கள்.


இத்தலத்தில் சிவன், அம்பாளுக்கு செய்யப்படும் கற்பூர ஆரத்தியை பக்தர்கள் கண்ணில் தொட்டு வைக்க அனுமதி கிடையாது. பைரவருக்கு செய்யப்படும் கற்பூர ஆரத்தியை பக்தர்களுக்கு காட்டுகிறார்கள்.



காவல் தெய்வமான முனீஸ்வரர் வட்டமான பீட வடிவில் பக்தர்களுக்கு அருள்பாளிக்கிறார்.


தினமும் இக்கோயிலில் காலையில் முதல் பூஜை சூரியனுக்கு செய்யப்பட்டு, அதன் பின்பே பிற சுவாமிகளுக்கு பூஜை செய்யப்படுகிறது.


பைரவர் சன்னதியின் பின்புற பிரகாரத்தில் மற்றொரு பைரவர், கையில் கதாயுதத்துடன் காட்சி தருகிறார்.


பொதுவாக பைரவர், கையில் சூலத்துடன் காட்சி தருவார். ஆனால் இங்குள்ள 'ஆனந்த பைரவர்" சூலத்துக்குப் பதிலாக கதாயுதத்துடன் காட்சி தருவது சிறப்பு.



பைரவர் ஜென்மாஷ்டமி, ஆனி மாதம் உத்திர விழா, மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனம், அறுபத்து மூவர் குருபூஜை போன்றவை சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.



குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகவும், குழப்பம் நீங்கி மன அமைதி பெறவும் இத்தலத்தில் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது.



இத்தலத்தில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் சுவாமி மற்றும் பைரவருக்கு வஸ்திரம் அணிவித்தும், விசேஷ வழிபாடு செய்தும் நேர்த்திக்கடனை நிறைவேற்றலாம்.

 

Thanks and regards 

A s Govinda rajan 

Kodambakkam Chennai

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News