அன்றைய செய்தித் தாளை படித்துக் கொண்டிருந்த எழுத்தாளர் பூமிநாதனுக்கு கைபேசியில் அழைப்பு வந்தது. அப்போது காலை மணி எட்டு இருக்கும்.
கைபேசியை எடுத்து எழுத்தாளர் பூமிநாதன் பேசறேன் என்றார்.
எதிர் முனையில் அழைத்தவர் " நம் குரல்" பத்திரிகையிலிருந்து உதவி ஆசிரியர் தமிழ்வாசன் பேசுகிறேன் என்றதும், இருவரும் வணக்கம் என்று சொல்லியபடியே, நலம் விசாரித்துக் கொண்டனர்.
தங்களைச் சிறந்த எழுத்தாளர் என்று தமிழ்நாடு அரசு தேர்வு செய்துள்ளது சம்பந்தமாக,எங்களது பத்திரிகையில் இருந்து தங்களை சிறப்புப் பேட்டி ஒன்று எடுக்க இருக்கிறோம்.
தங்களை எப்போது சந்திக்கலாம்? என்றார் உதவி ஆசிரியர் தமிழ்வாசன்.
எழுத்தாளர் பூமிநாதன் குறித்த நேரமான, மதியம் 3 மணிக்கு பேட்டி துவங்கியது.
வணக்கம்! தங்களது எழுத்துத் திறமையை பாராட்டி தங்களை தமிழ்நாடு அரசு சிறந்த எழுத்தாளராக தேர்வு செய்துள்ளமைக்கு " நம் குரல்" பத்திரிகை சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்; என்று சொல்லியவாறு உதவி ஆசிரியர் பேட்டியைத் துவக்கினார்.
நீங்க எழுதுற கதைகளுக்கான கரு உங்களுக்கு எங்கிருந்து கிடைக்கிறது?
என்னுடைய கதைகளில் உள்ள கரு அனைத்தும் பொது வெளியிலிருந்து தான் கிடைக்கிறது. அதாவது மக்களோடு மக்களாக நான் பழகும் சூழலில் என் கதைக்கான கருவை தேடிக் கொள்கிறேன்.
நான் செல்லும் தேநீர் கடை, முடித்திருத்தும் நிலையம், காய்கறிகடை, பூங்காக்கள் ஆகிய இடங்களிலிருந்தும் என் கதைக்கான மூலக்கருக் கிடைக்கிறது. நான் யாரைப் பார்த்தாலும் அவர்களிடம் கூச்சமில்லாமல் பேசும் தன்மை உடையவன். அப்படி அவர்களோடு பேசி உறவாடும்போது அவர்கள் சொல்லுகின்ற விசயங்களில் என் கதைக்கான கருவாக உருவாகிறது.
நீங்கள் எழுதும் கதைகளை யாரிடமாவது கொடுத்து படிக்கச் சொல்லும் பழக்கம் தங்களிடம் உண்டா?
என்னுடைய கதைகளை முதலில் படித்துச் சொல்வது எனது மனைவி வள்ளியம்மைதான்.
அவர்தான் எனது கதைகளின் முதல் வாசகர். அவர் படித்துவிட்டு சொல்லும் போது அதில் சில மாற்றங்களை செய்யச் சொல்லுவார். அதன்படி சில மாற்றங்களை செய்வதும் உண்டு.
அந்த அளவிற்கு கதையை மிக ஆழமாக ரசித்து வாசிக்கும் அவரிடம் உண்டு.
உங்களுடைய கதைகள் மூலமா சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்னு நம்புகிறீர்களா?
இன்னைக்கு கிடைக்காம போனாலும், என் கதையைப் படிக்கிற வாசகர்களுக்கு ஒரு விழிப்புணர்வு உண்டாகும்னு நம்புறேன். மக்கள் விழிப்புணர்வு பெற்றாலே, அரசாங்கம் விழித்துக் கொள்ளும்.
அதனால் சமூகப் பிரச்சினைகளுக்கு நிச்சயமா தீர்வு கிடைக்கும்னு எனக்கு எப்போதும் நம்பிக்கை உண்டு.
நம்ம நாடு விஞ்ஞான வளர்ச்சியில் நல்ல முன்னேற்றம் அடைஞ்சிகிட்டு இருக்கறதை பத்தி எழுத்தாளர்ங்கிற முறையில உங்களுடைய கருத்து என்னான்னு தெரிஞ்சிக்கிலாமா?
உலகநாடுகள் மத்தியில நம்ம இந்தியாவின் விஞ்ஞான வளர்ச்சி பாராட்டுக்குரியதாக இருந்தாலும், சில கண்டுபிடிப்புகள் மனித இனத்துக்கே அழிவை ஏற்படுத்துகிற வகையில் இருப்பது வருத்தமாகத் தான் உள்ளது.
இப்பகூட இன்னைக்கு செய்தித் தாள்ல 2000 கிலோமீட்டர் தூரம் வரை சென்று இலக்கைத் தாக்கும் ஏவுகணை ஒன்னு கண்டுபிடிச்சிருக்கறதா செய்தியை படிச்சேன். 2000 கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்று இலக்கைத் தாக்கும் ஏவுகணைக்கான செலவை வைத்து நம்ம இந்தியாவுக்குள்ள வாழ்ற ஏழ்மை நிலையில் பசி பட்டினியோட தினசரி வயித்துக்காகப் போராடிகிட்டு இருக்கற பல பேரோட ஏழ்மை நிலையை போக்கலாங்கறது என்னுடைய கருத்து.
இதை செஞ்சா பசி பட்டினியால அழிஞ்சிகிட்டிருக்கற பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களை காப்பாற்றிய பெருமை, நம்ம அரசாங்கத்துக்கு கிடைக்கும்ல! நான் என்ன சொல்ல வரேன்னு உங்களுக்கு புரிஞ்சிருக்கும். அதாவது பல்லாயிரம் கோடி செலவு செஞ்சு ஏவுகணையை கண்டு பிடிச்சு அதன் மூலமா மனித உயிர்களை அழிக்கறதுக்கு முக்கியத்துவம் தருவதை விட்டுட்டு நம்ம நாட்டுல, நம்ம கண்ணு முன்னாடி பசி பட்டினியால தினமும் மடிஞ்சிகிட்டு இருக்கற பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களை காப்பாத்துலேமேன்னு சொல்றேன்.
சார்... நல்ல ஆழமான சிந்தனை...! உங்களோட பேட்டி மூலமா நீங்கள் சொல்லியிருக்கிற இந்த கருத்து நம்ம அரசாங்கத்தோடக் கதவுகளைத் திறக்கும்னு நினைக்கிறேன்! நன்றி வணக்கம்! என்று சொல்லியபடி நம் குரல் உதவி ஆசிரியர்
தமிழ்வாசன் பேட்டியை முடித்துக் கொண்டார்.
-------------------------
ஆக்கம்:
தமிழ்ச் செம்மல்
நன்னிலம் இளங்கோவன்.