ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக சதம்:தெண்டுல்கரின் சாதனையை சமன் செய்த ரோகித் சர்மா
Oct 28 2025
11
சிட்னி, அக்.26-
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா நேற்று 121 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஒட்டு மொத்த சர்வதேச கிரிக்கெட்டில் அவர் அடித்த 50-வது சதம் (டெஸ்ட்-12, ஒருநாள் போட்டி-33, 20 ஓவர் போட்டி-5) இதுவாகும். அவர் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளாசிய 9-வது சதம் இதுவாகும். அத்துடன் ஆஸ்திரேலிய மண்ணில் அடித்த 6-வது சதமாகும். இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக சதம் அடித்தவரான இந்திய ஜாம்பவான் தெண்டுல்கரின் (9 சதம்) சாதனையை ரோகித் சர்மா சமன் செய்தார். விராட் கோலி 8 சதங்களுடன் அடுத்த இடத்தில் உள்ளார். மேலும் ஆஸ்திரேலிய மண்ணில் ஒருநாள் போட்டியில் அதிக சதங்கள் அடித்த வெளிநாட்டு வீரர்களான இந்தியாவின் விராட் கோலி, இலங்கையின் குமார் சங்கக்கரா (இருவரும் தலா 5 சதம்) ஆகியோரை பின்னுக்கு தள்ளி ரோகித் சர்மா முதலிடத்தை சொந்தமாக்கினார்.
ஒருநாள் போட்டியில் அதிக ரன்: சங்கக்கராவை முந்தினார் கோலி
சிட்னி, அக்.26-
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 74 ரன்கள் எடுத்தார். ஒருநாள் போட்டியில் இலக்கை விரட்டுகையில் (சேசிங்கில்) அவர் 50 ரன்களுக்கு மேல் எடுப்பது 70-வது முறையாகும். கோலி 54 ரன்னை எட்டிய போது ஒருநாள் போட்டியில் அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் 2-வது இடத்தில் இருந்த இலங்கை முன்னாள் வீரர் குமார் சங்கக்கராவை (14,234 ரன்கள்) பின்னுக்கு தள்ளி 2-வது இடத்தை தன்வசப்படுத்தினார். விராட் கோலி 51 சதங்களுடன் 14,255 ரன்கள் எடுத்துள்ளார். இந்திய ஜாம்பவான் தெண்டுல்கர் 18,426 ரன்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.
ரோகித் சர்மா-விராட் கோலி இணை 2-வது விக்கெட்டுக்கு 168 ரன்கள் திரட்டியது. ஒருநாள் போட்டியில் அவர்கள் 150 ரன்களுக்கு மேல் ரன் சேர்ப்பது இது 12-வது முறையாகும். இதன் மூலம் ஒருநாள் போட்டியில் அதிக முறை 150 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்தியாவின் கங்குலி-தெண்டுல்கர் ஜோடியின் சாதனையை (12 தடவை) சமன் செய்தனர்.
சர்வதேச கிரிக்கெட்டில் ரோகித் சர்மா-விராட் கோலி கூட்டணி செஞ்சுரி பார்ட்னர்ஷிப் அமைப்பது 2020-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல்முறையாகும்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?