பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணி 6-–வது வெற்றி: அரைஇறுதியில் இந்தியாவை சந்திக்கிறது
இந்தூர், அக்.26-
13-வது பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் இந்தூரில் நேற்று நடந்த 26-வது லீக் ஆட்டத்தில் ஏற்கனவே அரைஇறுதிக்கு தகுதி பெற்று விட்ட ஆஸ்திரேலியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதின. ‘டாஸ்’ ஜெயித்த ஆஸ்திரேலிய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்க அணி, ஆஸ்திரேலிய வீராங்கனைகளின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 24 ஓவர்களில் 97 ரன்னில் சுருண்டது.
அதிகபட்சமாக கேப்டன் லாரா வோல்வார்ட் 31 ரன்னும், சினாலோ ஜப்தா 29 ரன்னும் எடுத்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் அலனா கிங் 18 ரன் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகள் அள்ளினார்.
இதைத்தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி 16.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 98 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெத் மூனி 42 ரன்னில் அவுட் ஆனார். ஜார்ஜியா 38 ரன்னுடனும், அனபெல் சுதர்லாண்ட் 10 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா 6 வெற்றி, ஒரு முடிவில்லையுடன் 13 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்தது. தென்ஆப்பிரிக்க அணிக்கு இது 2-வது தோல்வியாகும். நவிமும்பையில் வருகிற 30-ந் தேதி நடைபெறும் 2-வது அரைஇறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி, இந்தியாவை சந்திக்கிறது. முன்னதாக வருகிற 29-ந் தேதி கவுகாத்தியில் நடைபெறும் முதலாவது அரைஇறுதியில் இங்கிலாந்து-–தென்ஆப்பிரிக்கா அணிகள் சந்திக்கின்றன.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?