சிட்னி, அக்.26-
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரோகித் சர்மா சதம் அடித்து அசத்தினார்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. இதில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சிட்னியில் நேற்று நடந்தது.
‘டாஸ்’ ஜெயித்த ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் மிட்செல் மார்ஷ், டிராவிஸ் ஹெட் ஆகியோர் களம் இறங்கினர்.
ஸ்கோர் 62 ரன்னை எட்டிய போது (9.2 ஓவரில்) தொடக்க ஜோடி பிரிந்தது. டிராவிஸ் ஹெட் 29 ரன்னில் (25 பந்து, 6 பவுண்டரி) முகமது சிராஜ் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். சற்று நேரத்தில் மிட்செல் மார்ஷ் 41 ரன்னில் (50 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) அக்ஷர் பட்டேல் பந்து வீச்சில் போல்டு ஆனார்.
இதைத்தொடர்ந்து மேத் ரென்ஷா, மேத்யூ ஷார்டுடன் கைகோர்த்தார். அதன் பிறகு இந்திய பந்து வீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்து ரன் வேகத்தை கட்டுப்படுத்தியதுடன், சீரான இடைவெளியில் விக்கெட்டையும் வீழ்த்தினர். மேத்யூ ஷார்ட் 30 ரன்னிலும் (41 பந்து, 2 பவுண்டரி), விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி 24 ரன்னிலும் (37 பந்து, ஒரு பவுண்டரி), நிலைத்து நின்று முதல் அரைசதம் அடித்த மேத் ரென்ஷா 56 ரன்னிலும் (58 பந்து, 2 பவுண்டரி) ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த கூபர் கனோலி (23 ரன்), மிட்செல் ஓவன் (1 ரன்), மிட்செல் ஸ்டார்க் (2 ரன்), நாதன் எலிஸ் (16 ரன்) ஆகியோர் நிலைக்கவில்லை. 46.4 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 236 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இது அவரது சிறந்த பந்து வீச்சாகும். தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட் கைப்பற்றினார்.
இதைத்தொடர்ந்து 237 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, கேப்டன் சுப்மன் கில் களம் புகுந்தனர். ஸ்கோர் 69 ரன்னை (10.2 ஓவரில்) எட்டிய போது சுப்மன் கில் (24 ரன், 26 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஹேசில்வுட் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியிடம் சிக்கினார்.
இதனையடுத்து விராட் கோலி, ரோகித் சர்மாவுடன் இணைந்தார். ரோகித்-கோலியின் ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்து படைப்பதாக இருந்தது. அவர்கள் இருவரும் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய போதெல்லாம் ரசிகர்கள் உற்சாகத்தால் ஸ்டேடியம் களைகட்டியது.
விராட் கோலி 56 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். அவர் அடித்த 75-வது அரைசதம் இதுவாகும். அவர் அரைசதம் அடித்ததும் ரசிகர்களின் ஆரவாரத்தால் ஸ்டேடியமே அதிர்ந்தது. அபாரமாக ஆடிய ரோகித் சர்மா 105 பந்துகளில் தனது 33-வது சதத்தை பூர்த்தி செய்தார். அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடித்த 9-வது சதம் இதுவாகும்.
38.3 ஓவர்களில் இந்திய அணி ஒரு விக்கெட்டுக்கு 237 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரோகித் சர்மா 121 ரன்களுடனும் (125 பந்து, 13 பவுண்டரி, 3 சிக்சர்), விராட் கோலி 74 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இருவரும் 2-வது விக்கெட்டுக்கு 168 ரன்கள் சேர்த்தனர். முந்தைய ஆட்டத்தில் அரைசதம் அடித்திருந்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை தனதக்கினார்.
இந்திய அணிக்கு இது ஆறுதல் வெற்றியாக அமைந்தது. அத்துடன் இந்த வெற்றியால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை ஒருபோதும் முழுமையாக இழந்ததில்லை என்ற பெருமையை தக்கவைத்தது. முதல் இரு ஆட்டங்களில் வெற்றி பெற்று இருந்த ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-–1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
அடுத்து இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையே 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடர் நடைபெறுகிறது. இதில் முதலாவது ஆட்டம் கான்பெர்ராவில் வருகிற 29-ந் தேதி நடக்கிறது.