குடும்பங்கள் நடத்தும் கட்சிகளின் அரசியல் இனி எடுபடாது என்பதை பாஜக நிரூபித்துள்ளது” - அமித் ஷா

குடும்பங்கள் நடத்தும் கட்சிகளின் அரசியல் இனி எடுபடாது என்பதை பாஜக நிரூபித்துள்ளது” - அமித் ஷா



மும்பை: குடும்பங்கள் நடத்தும் கட்சிகளின் அரசியல் இனி எடுபடாது என்பதை பாஜக நிரூபித்துள்ளதாக அமித் ஷா தெரிவித்துள்ளார்.


மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் பாஜகவுக்கு புதிய அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (அக்.27) நடைபெற்றது. இதில், அடிக்கல் நாட்டிப் பேசிய பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, "1950-ல் இருந்தவர்கள் முதல் 2025-ல் இருப்பவர்கள் வரை, மூத்தவர்கள் முதல் இளையவர்கள் வரை பாஜகவினர் அனைவருக்கும் கட்சி அலுவகம் என்பது ஒரு கோயிலைப் போன்றது. இது நாம் மேற்கொள்ள வேண்டிய பணி தங்கி இருக்கும் இடம். இது, நமது கட்சியின் கொள்கைகள் ஊக்குவிக்கப்பட்டு பாதுகாக்கப்படும் இடம்.


நலம் விரும்பிகளாக இருப்போர் தொண்டர்களாக மாறுவதற்கான கல்லூரியாக இயங்குவது இந்த அலுவலகம். நமது தொண்டர்கள் நடைமுறை பயிற்சியை இங்குதான் பெருகிறார்கள். அமைப்பின் அடிப்படையில், கொள்கைகளின் அடிப்படையில், மக்கள் நலன் அடிப்படையில் அரசியல் கட்சியை நடத்துபவர்கள் நாம். இந்த மூன்று நோக்கங்களும் நிறைவேற்றப்படும் இடம் பாஜக அலுவலகம்.


மகாராஷ்டிராவில் பாஜக ஊன்றுகோள்களை நம்பியிருக்க வேண்டியதில்லை. இங்கு பாஜக அதன் சொந்த கால்களில் நிற்கிறது. மகாராஷ்டிராவின் ஒரு வலுவான சக்தியாக பாஜக உள்ளது. உறவினர்களுக்கு சலுகைகளை அளிப்பதாக அல்லாமல், ஜனநாயக விழுமியங்களின் அடிப்படையில் இயங்கக்கூடியது பாஜக. கடினமாக உழைப்பவர்கள், கட்சியின் கொள்கைகளை கடைப்பிடிப்பவர்கள், செயல்பட வலிமை உள்ளவர்கள் மட்டுமே இந்த கட்சியில் முக்கிய தலைவர்களாக முடியும்.


இந்திய அரசியல் களத்தில் பாஜக ஒரு சக்திவாய்ந்த மற்றும் நீடித்த இடத்தைப் பிடித்துள்ளது. அதேபோல், மகாராஷ்டிராவிலும் பாஜகவின் இருப்பு, கேள்விக்கு அப்பாற்பட்டு வலுவாக உள்ளது.


குடும்பங்கள் நடத்தும் கட்சிகளின் அரசியல் இனி இந்த நாட்டில் எடுபடாது என்பதை பாஜக நிரூபித்துள்ளது. செயல்திறன் அரசியல்தான் நாட்டை முன்னோக்கி அழைத்துச் செல்லும். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு நமது பிரதமர் நரேந்திர மோடி. தேநீர் விற்ற ஒரு எளிய குடும்பத்தில் பிறந்த நரேந்திர மோடி, தனது அர்ப்பணிப்பு, தியாகம், கடின உழைப்பால் நாட்டின் பிரதமராக உயர்ந்துள்ளார்.


உள்கட்சி ஜனநாயகத்தை நிலைநிறுத்த முடியாத கட்சிகளால், நாட்டின் ஜனநாயகத்தை ஒருபோதும் பாதுகாக்க முடியாது என்று நான் நம்புகிறேன். வாரிசு அடிப்படையிலான அனைத்துக் கட்சிகளுக்கும் இது ஒரு வலுவான செய்தியாகும்" என தெரிவித்தார்.


இந்நிகழ்ச்சியில், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் உள்ளிட்ட பாஜக தலைவர்களும் ஏராளமான தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%