இந்தியாவுடன் விளையாட பாகிஸ்தான் மறுப்பு: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கண்டனம்
துபாய், பிப். –
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிக்க பாகிஸ்தான் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கண்டனம் தெரிவித்துள்ளது.
20 அணிகள் பங்கேற்கும் 10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7-ந் தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. இதில் ‘சி’ பிரிவில் வங்காளதேச அணி இடம் பிடித்து இருந்தது. அந்த அணிக்குரிய லீக் ஆட்டங்கள் கொல்கத்தா மற்றும் மும்பையில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இதற்கிடையே, ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த வங்காளதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிஜூர் ரகுமானை இந்திய கிரிக்கெட் வாரியம் உத்தரவின் பேரில் அந்த அணி நிர்வாகம் விடுவித்தது. வங்காளதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல் அதிகரித்ததை தொடர்ந்து அவருக்கு எதிராக கடும் எதிர்ப்பு கிளம்பியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த வங்காளதேசம் டி 20 உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்க இந்தியாவுக்கு செல்லமாட்டோம். அங்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால் தங்கள் அணிக்குரிய ஆட்டங்களை போட்டியை நடத்தும் மற்றொரு நாடான இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியது. ஆனால் கடைசி நேரத்தில் போட்டி அட்டவணையில் மாற்றம் செய்ய முடியாது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) மறுத்து விட்டது. இதன் தொடர்ச்சியாக வங்காளதேச அணி டி 20 உலக கோப்பை தொடரில் இருந்து நீக்கப்பட்டது. மாற்று அணியாக ஸ்காட்லாந்து சேர்க்கப்பட்டது.
இந்தியாவுடன் விளையாட
பாகிஸ்தான் மறுப்பு
இந்த நிலையில், இலங்கையில் டி20 உலகக்கோப்பையில் விளையாடுவோம். ஆனால் இந்தியாவுக்கு எதிராக விளையாட மாட்டோம் என பாகிஸ்தான் இன்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்தியா தவிர இதர அணிகளுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் பங்கேற்கும் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இலங்கையில் வரும் 15 ஆம் தேதி இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பங்கேற்க இருந்தன. தற்போது இந்த போட்டியை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் அறிவித்து இருக்கிறது. இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிப்பதால், பாகிஸ்தான் அணி இரண்டு புள்ளிகளை இழக்கும். அதாவது, இந்திய அணிக்கு விளையாடமலே இரண்டு புள்ளிகள் கிடைக்கும்.
ஐசிசி கண்டனம்
பாகிஸ்தானில் இந்த முடிவுக்கு ஐசிசி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பையில் தனது தேசிய அணி தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டிகளில் மட்டும் பங்கேற்குமாறு அறிவுறுத்தும் முடிவு குறித்து பாகிஸ்தான் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையை ஐசிசி கவனத்தில் கொள்கிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து அதிகாரப்பூர்வமான தகவலுக்காக ஐசிசி காத்திருக்கும் வேளையில், தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டிகளில் மட்டும் பங்கேற்கும் இந்த நிலைப்பாடு, ஒரு உலகளாவிய விளையாட்டு நிகழ்வின் அடிப்படைக் கொள்கையுடன் முரண்படுகிறது. அந்த நிகழ்வில் தகுதிபெற்ற அனைத்து அணிகளும் போட்டி அட்டவணையின்படி சமமான அடிப்படையில் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐசிசி போட்டிகள் விளையாட்டு நேர்மை, போட்டித்தன்மை, நிலைத்தன்மை மற்றும் நியாயம் ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட பங்கேற்பு என்பது போட்டிகளின் உணர்வையும் புனிதத்தையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது.
தேசிய கொள்கை விஷயங்களில் அரசாங்கங்களின் பங்கை ஐசிசி மதித்தாலும், இந்த முடிவு உலகளாவிய விளையாட்டுக்கோ அல்லது பாகிஸ்தானில் உள்ள மில்லியன் கணக்கானோர் உட்பட உலகெங்கிலும் உள்ள ரசிகர்களின் நலனுக்கோ உகந்தது அல்ல. இந்த முடிவு உலக கிரிக்கெட் சூழல் அமைப்பைப் பாதிக்கக்கூடும் என்பதால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) தனது சொந்த நாட்டில் கிரிக்கெட்டிற்கு ஏற்படக்கூடிய குறிப்பிடத்தக்க மற்றும் நீண்ட கால விளைவுகளைக் கருத்தில் கொள்ளும் என்று ஐசிசி நம்புகிறது. அந்த சூழல் அமைப்பில் பிசிபி ஒரு உறுப்பினராகவும் பயனாளியாகவும் உள்ளது.
ஐசிசியின் முன்னுரிமை, ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பையை வெற்றிகரமாக நடத்துவதே ஆகும். இது பிசிபி உட்பட அதன் அனைத்து உறுப்பினர்களின் பொறுப்பாகவும் இருக்க வேண்டும். அனைத்து பங்குதாரர்களின் நலன்களையும் பாதுகாக்கும், பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வை பிசிபி ஆராயும் என்று ஐசிசி எதிர்பார்க்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.