news Breaking News
clock

இந்தியா உடனான உறவை மீட்டெடுக்க வங்கதேசம் விரும்புகிறது: தாரிக் ரஹ்மான் ஆலோசகர்

இந்தியா உடனான உறவை மீட்டெடுக்க வங்கதேசம் விரும்புகிறது: தாரிக் ரஹ்மான் ஆலோசகர்


 

டாக்கா: இந்தியா உடனான உறவை மீட்டெடுக்க வங்கதேசம் விரும்புகிறது என்றும், ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை இந்தியா அங்கீகரிக்க வேண்டும் என்றும் தாரிக் ரஹ்மானின் ஆலோசகர் ஹுமாயூன் கபீர் தெரிவித்துள்ளார்.


வங்கதேசத்தில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வங்கதேச தேசியவாத கட்சி(பிஎன்பி) மூன்றில் இரண்டு பங்குக்கும் மேலான இடங்களில் வெற்றி பெற்றது. அக்கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான் வரும் 17ம் தேதி வங்கதேச பிரதமராக பதவியேற்க இருக்கிறார்.


இந்நிலையில், தாரிக் ரஹ்மானின் ஆலோசகர் ஹுமாயூன் கபீர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், இந்திய - வங்கதேச உறவை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தியுள்ளார். இவ்விஷயத்தில், வங்கதேசத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை இந்தியா அங்கீகரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அவர் தனது பேட்டியில், பிஎன்பியின் மகத்தான தேர்தல் வெற்றியை அடுத்து வங்கதேசத்தில் மாறி இருக்கும் அரசியல் யதார்த்தத்தை அங்கீகரிக்கும் பொறுப்பு இந்தியாவுக்கு உள்ளது. இந்த மாற்றம் இந்தியாவின் மனநிலையிலிருந்து வர வேண்டும். இன்றைய வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவும் அவாமி லீக்கும் இனி இல்லை. மக்கள் வங்கதேச தேசியவாதக் கட்சிக்கு ஆதரவாக தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளனர்.


வங்கதேசத்தில் ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதற்கு காரணமான "பயங்கரவாதி" ஷேக் ஹசீனா. வங்கதேசத்தின் ஸ்திரத்தன்மையை பாதிக்கும் வகையில் ஹசீனாவோ அல்லது அவாமி லீக் பிரமுகர்களோ தங்கள் மண்ணை பயன்படுத்தாமல் இருப்பதை இந்தியா உறுதி செய்ய வேண்டும். வங்கதேசத்தின் இறையாண்மையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் எந்தவொரு நடவடிக்கையிலும் இந்தியா உடந்தையாகக் கருதப்படக்கூடாது. இந்த பிரச்சினை தீர்க்கப்பட்டவுடன், வழக்கமான ராஜதந்திர ஒத்துழைப்பு மீண்டும் தொடங்கலாம். நாம் அண்டை நாடுகள், பரஸ்பர நன்மைக்காக ஒன்றாகச் செயல்பட வேண்டும்.


பிரதமர் நரேந்திர மோடிக்கும் தாரிக் ரஹ்மானுக்கும் இடையே சமீபத்தில் அன்பான தொலைபேசி உரையாடல் நிகழ்ந்தது. அப்போது, ஒரு வசதியான நேரத்தில் இந்தியாவுக்கு வருகை தருமாறு பிரதமர் மோடி, ரஹ்மானுக்கு அழைப்பு விடுத்தார்.


நாட்டின் பொருளாதார பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் தாரிக் ரஹ்மான் கவனம் செலுத்துவார். இங்கு நிலைமைகள் சீரானவுடன், இந்திய வருகை உட்பட சர்வதேச பயணங்களை அவர் மேற்கொள்வார். மக்களின் வலுவான ஆணைக்கு இணங்க, வலுவான நிலையில் இருந்து நாங்கள் பேச்சுவார்த்தை நடத்துவோம். தேசிய நலன் மற்றும் நமது பிரதேசத்தின் நல்வாழ்வு எங்கள் வெளியுறவுக் கொள்கையின் மையமாக இருக்கும். நாங்கள் விரும்புவது சமநிலையான உறவுகளைத்தான். ஒரு குறிப்பிட்ட நாட்டோடு மட்டுமே உறவுகளை வைத்திருக்கப் போவதில்லை.


வங்கதேசத்தில் நிகழ்ந்த ஆகஸ்ட் எழுச்சிக்குப் பிறகு அரசாங்கம் இல்லாத ஐந்து நாட்களில் கூட, யாரும் சிறுபான்மையினரைத் தாக்கவில்லை. இங்கே வகுப்புவாத நல்லிணக்கம் நிலவுவதை அது காட்டுகிறது.


பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில் வலுவான பிராந்திய ஒத்துழைப்பு மிகவும் முக்கியம். தனிமைப்படுத்துதல் முன்னேற்றத்தைத் தடுக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்கள் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள வேண்டும். தீவிரவாதிகள், பயங்கரவாதிகளைக் கண்காணித்து நம்பிக்கையை வளர்க்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். பிஎன்பி தலைமையிலான அரசாங்கம் பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் அமைதி, செழிப்பு மற்றும் ஒருங்கிணைந்த பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு முன்னுரிமை அளிக்கும் என்று தெரிவித்தார்.


தாரிக் ரஹ்மான் வரும் 17-ம் தேதி வங்கதேசத்தின் பிரதமராக பதவியேற்க உள்ள நிலையில், பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு வங்கதேசம் அழைப்பு விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News