இன்றைய வாழ்க்கை

இன்றைய வாழ்க்கை


பாவலர் கருமலைத்தமிழாழன்


நேர்எதிரில் பக்கத்தில் குடியி ருப்போர்

நெருக்கத்தில் இருந்தாலும் தெரியா தென்போர்

பாற்கடலில் பள்ளிகொண்ட திருமால் பற்றிப்

பலப்பலவாய்ச் செய்திகளைச் சொல்லு கின்றார் !

ஊர்க்குள்ளே நடக்கின்ற நிகழ்வு பற்றி

உரைத்தாலும் தெரியாது எனப்ப கர்வோர்

பேர்தெரியா நாடுகளில் நடந்த தென்றே

பெருங்குரலில் நிகழ்வுகளை முழங்கு கின்றார் !


குடிப்பதற்கு நீரின்றிக் குளங்கள் ஏரிக்

குழிகளினை மேடாக்கி மனைகள் செய்து

விடியுமுன்னே மதுக்கடைகள் திறந்து வைத்து

விரைவாகத் தாகத்தைத் தீர்க்கின் றார்கள் !

பிடிப்பான இயற்கையினை அழித்து விட்டுப்

பிணிகளினைப் பலவாக வளர வைத்துக்

குடியிருப்பாய் மருத்துவமான் மனைகள் கட்டிக்

குற்றுயிராய் நோயரினைப் பெருக்கு கின்றார் !


சிந்திக்கக் கற்பித்த திண்ணைப் பள்ளி

சிறப்பான கட்டடமாய் உயர்ந்த போதும்

மொந்தைக்கள் குடித்துவாந்தி எடுப்ப தைப்போல்

மொத்தமுமே மனப்பாடக் கல்வி யாச்சு !

முந்தைவிட ஊதியம்தான் பெற்ற போதும்

முன்பிருந்த மனவமைதி இல்லை யிங்கே

வந்ததின்று புதுமைதான் என்ற போதும்

வளர்ந்தெல்லாம் முரண்கள்தாம் மகிழ்ச்சி யில்லை !

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%