இரு கோணங்கள்.!

இரு கோணங்கள்.!

*மயிலாடுதுறை தற்காலிக பேருந்து நிலையம்.மக்களின் மனநலன்..பொதுநலன் நெருக்கடிகளை மறந்து..தேர்தல் கால நெருக்கடிக்கு முகம் கொடுக்கும் விதமாக மாவட்ட நூலகக் கட்டடம் கட்டப்பட்டு வருவதால் ஏகப்பட்ட நெரிசலை சந்தித்து பிதுங்கி வழிகிறது.பயணிகள் மட்டுமல்ல..டாஸ்மாக் விரும்பிகளும் அதற்குள்ளாகவே ஊடுபாவி ஊர்வலம் நடத்தியாக வேண்டும்..ஆட்டோ.. வேன்..வெளியூர் பயணிப்பவர்களின் இருசக்கர வாகனங்கள் என பல இடையூறுகளுக் கிடையே..வரும் ஆனா வராது கணக்காக நகரப்பேருந்துக்கான காத்திருப்பு. ஒரு பேருந்து வந்து நின்று பயணிகளை ஏற்றி இறக்குவதற்குள்.. அடுத்த பேருந்து பின்நின்று ஒலி எழுப்பி வழி கேட்கும் தர்ம சங்கடம்...வறுகடலை.. சுண்டல்...சுக்குக்காப்பி...சோன்பப்டி வியாபாரிகள் அலைகழிப்பின் விரக்தியை.. வியாபார முகத்தை மறைத்துக்கொண்டு.. பயணிகளிடமே சிடுசிடுப்பாய் இறக்கி வைக்கும் இன்னல்.இறைச்சலும்..கூச்சலும்..மண் புழுதியும் சாக்கடை நெடியுமாக அலையும் காற்று..தேசிய உயிரினமான கொசுவின் ரீங்காரத்துடன் கூடிய நலவிசாரிப்பு இவற்றிலிருந்து விலக்கி...இரண்டு ஆட்டோ ஓட்டுனர்களின் அங்கலாய்ப்பு சற்றே ஆசுவாசப்படுத்தியது."இங்க பாடுடா பரமா..தினம் நூறு ருபா நகைச்சீட்டு கட்டி...மூனரை மாசத்துல ரெண்டு கிராம் காயின் வாங்கி வீட்டுக்காரிகிட்ட கொடுத்துடுவேன்.. ஏதோ நம்ம சத்துக்கு அது ஒரு பொருளாதார தன்னிறைவுன்னு வச்சுக்கயேன்..இப்ப அதுக்கும் வச்சுட்டானுங்க ஆப்பு..இப்ப ஒருலட்சத்தி முப்பதை தாண்டுது சவரன்..ரெண்டு லட்சத்துக்கு மேல போகுமாம்..நம்ம இனி வெள்ளிநகைக்கு தான் சீட்டு போடனும் போல..."என அலுத்துக்கொண்ட அதே நேரம்...எழுந்து போய் வெற்றிலை எச்சிலை சாக்கடை வாய்க்காலில் உமிழ்ந்துவிட்டு வந்த குப்பை பொறுக்கும் பார்வதியம்மாள்.."ஏ.. அண்ணாத்த..சுத்தமான பவுனுல செப்பு கலக்காம உருவம் செய்ய முடியாதாமே நெஜமாலுமா..பவுனு வெல ரெக்ககட்டி பறக்குறதுல யாருக்கு பாதிப்போ என்னவோ...எனக்கு ஒரே குஜாலிப்பு தான்..ரொம்ப லாபந்தான் ..பாத்துக்க..பொறுக்கி தேத்துன பழைய ஒயருங்கள சேத்து வச்சு கொளுத்தி சுத்தம்பண்ணி எடைக்கு போடுவனா..அப்ப செப்புக்கம்பி..கிலோ முந்நூத்தி இருவதுக்கு எடுப்பாங்க..இப்ப வல்லிசா நாநூறு ரூபா தர்றாங்க..இன்னும் பவுனு ஏறட்டும்..கிலோ ஐநூறு பார்க்காம விடமாட்டால்ல..இந்த பார்வதி"என்றபடி நடக்க வாயடைத்து நின்றனர் ஆட்டோ ஓட்டுநர்கள்.ஏன் பயணிகளான நாங்களும் தான்.!..*----------- *


அரும்பூர். க.குமாரகுரு, மயிலாடுதுறை*

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%