உலகத் தொழில்நுட்பத்தின் மையம் இந்தியா: பிரதமர் மோடி பெருமிதம்

உலகத் தொழில்நுட்பத்தின் மையம் இந்தியா: பிரதமர் மோடி பெருமிதம்




‘‘ஏஐ செயலியை உருவாக்க இளைஞர்களுக்கு அழைப்பு’’


புதுடெல்லி, பிப்.–


உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப மையமாக இந்தியா திகழ்வதாக பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார்.


டெல்லி பாரத மண்டபத்தில் நடைபெற்ற ஏஐ உச்சி மாநாட்டை (ஏஐ இம்பாக்ட் சம்மிட்) பிரதமர் மோடி இன்று துவக்கிவைத்தார். இதில் பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் மற்றும் உலக தலைவர்கள் பங்கேற்றனர். மேலும் ஓபன் ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மேன், முகேஷ் அம்பானி, பில்கேட்ஸ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.


நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:– ‘‘உலக வரலாற்றில் மிக சிறப்புமிக்க ஏஐ உச்சி மாநாட்டுக்கு அனைவரையும் வரவேற்கிறோம். உலகின் மிகப்பெரிய தொழில்நுட்பத் தொகுப்பின் மையமாக இந்தியா திகழ்கிறது. ஏஐ மாநாடு இந்தியாவில் நடத்தப்படுவது, உலகின் தெற்குப் பகுதிக்கு பெருமையை சேர்க்கும் விஷயம்.


முதன்முதலில் வயர்லெஸ் மூலம் சிக்னல்கள் அனுப்பப்பட்டபோது, ஒருநாள் முழு உலகமும் நிகழ்நேரத்தில் இணைக்கப்படும் என்பதை யாரும் கற்பனைகூட செய்து பார்க்கவில்லை. செய்யறிவும் மனித வரலாற்றின் அத்தகைய மாற்றமாகும். இன்று நாம் காண்பதும், கணிப்பதும் அதன் தாக்கத்தின் தொடக்கம்தான். ஏஐ இயந்திரங்களை அறிவு சார்ந்ததாக உருவாக்குகிறது. ஆனால், அதைவிட மனித திறன்களை பலமடங்கு அதிகரிக்கிறது. ஒரேவொரு வித்தியாசம் என்னவென்றால், இந்த முறை அதன் வேகமானது முன்னெப்போதும் கண்டிராத எதிர்பாராதது. முன்பெல்லாம் தொழில்நுட்பத்தின் தாக்கம் தெரிய பல தசாப்தங்கள் ஆகும். ஆனால் தற்போது இதுவரை இல்லாத வேகத்திலும் ஆழத்திலும் உள்ளது. உலக இளைஞர்கள் ஏஐ-யை ஏற்றுக் கொண்டு அதனை தங்களுக்கு சொந்தமாக்கும் வேகம் பாராட்டுக்குரியது.


இளைஞர்கள் படை


இந்தியாவில் மிகப்பெரிய இளைஞர்கள் படை உள்ளது. இளைஞர்கள் ஏஐ தொழில் நுட்பத்தை நம்பிக்கையுடன் ஏற்றுக்கொள் கிறார்கள். இந்தியாவை சேர்ந்த 3 நிறுவனங்கள் ஏஐ செயலியின் மாதிரிகளை அறிமுகப்படுத்தி்யுள்ளது. இதுவே நமது இளைஞர்களின் சக்தி. ஏஐ தொடர்பான செயலிகளை வடிவமைக்க அனைவரையும் அழைக்கிறேன்.


நமது பார்வை பெரிதாக இருக்க வேண்டும், அதே அளவுக்கு பொறுப்பும் இருக்க வேண்டும். அடுத்த தலைமுறையினருக்கு எந்த வடிவில் ஏஐ-யை ஒப்படைக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். எதிர்காலத்தில் செய்யறிவு என்ன செய்யும் என்பது கேள்வி அல்ல, தற்போதைய சூழலில் செய்யறிவுடன் நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதுதான்.


திறன் மேம்பாடு, மறுதிறன் மேம்பாடு மற்றும் வாழ்நாள் முழுவதும் கற்றல் ஆகியவற்றை பழக்கமாக மாற்ற வேண்டும். செய்யறிவுடன் ஒன்றிணைந்து முன்னேறினால், மனித குலத்தின் திறனை உயர்த்தும். ஏஐ என்பது ஒரு மாற்றும் சக்தி.


இலக்கு இன்றி இருந்தால் அது இடையூறாக மாறும், சரியான இலக்கு இருந்தால் அது தீர்வாக மாறும். ஏஐ-க்கு பரந்த வாய்ப்புகளை வழங்க வேண்டும். ஆனால், ஜிபிஎஸ் போல, கட்டுப்பாட்டை நமது கைகளில் வைத்திருக்க வேண்டும். ஜிபிஎஸ் நமக்கு வழிகாட்டுகிறது, ஆனால், எந்த திசையில் செல்ல வேண்டும் என்ற இறுதி முடிவு நம்முடையதுதான். அதுபோல், இன்று நாம் செய்யறிவை எந்த திசையில் கொண்டு செல்கிறோம் என்பதே நமது எதிர்காலத்தை தீர்மானிக்கும்” .


இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%