மலையும் மலை சார்ந்த இடங்களெல்லாம்..
மணித்தமிழர் குறிஞ்சிநிலம் என்றழைத்தார்!
மலைமேல் முருகனுக்கு வீடுகட்டி.. மாவிளக்கு ஏற்றி வைத்துப் படையலிட்டார்!
நிலைகள் மாறியது இந்த நாளில்.. மலையை உடைத்து விற்று.. சல்லியாக்கி
குறிஞ்சியினை குவாரி யெனப் மாற்றிவிட்டார்!
காடும் காடு சார்ந்த இடத்தையெல்லாம்.. முல்லை என முத்தமிழர் பெயருமிட்டார்.. காடு கழனியென வனவிலங்கு இயற்கையென கைகூப்பி நம்தமிழர் காத்துவந்தார்!
தேடும் பொருளாசை தன் நலத்தினாலே.. காடுகளை அழித்து.. மழைத் தடுத்து.. கட்டிவைத்தார் தொழிற்சாலை காடுதோறும்.. முல்லையினை முட்காடாய் மாற்றிவிட்டார்!
வயலும் வயல் சார்ந்த இடத்தையெல்லாம்.. வாழ்ந்தவர்கள் மருதநிலம் என்றுரைத்தார்.. வாழ்வுதரும் நெல்மணிகள் பயிர் வளர்த்தே.. பசுமைநிலமாகப் பாதுகாத்தார்!
செயல்மறந்து செழும்வயல் சிறப்பு மறந்து.. சென்றதொரு பாதையினை தான்மறந்து.. நெல் விளையும் வயலெல்லாம் கல் நட்டார்! சோறு போட்ட நிலம் விற்க கூறு போட்டார் ! !ஃப்ளாட் போட்டு பாவிமக்கள் காசு பார்த்தார்!
கடலும் கடல் சார்ந்த இடத்தையெல்லாம்..நெய்தல் என்று அழகாக அழைத்து வந்தார்.. கயல் வலைகள்.. கலம் நிறைத்து கடலன்னை பிள்ளைகளாய் மடிதுயின்றார்.!
மீத்தேன் எண்ணை என அமிலக் கழிவை.. ஆழ்கடலில் துலைகளிட்டு நிலத்தோடு கடல் கெடுத்தார் நெஞ்சமற்றோர். நெய்தலினை குப்பைக்கூடம் ஆக்கிவிட்டார்!
மணலும் மணல் சார்ந்த இடத்திற்கெல்லாம்.. பாலையென பழந்தமிழர் பெயருமிட்டார்! குணமிழந்து இந்த நாளில் இவர்கள்தானே.. மணல் அள்ளி.. மலைகள் வெட்டி குடல் வளர்த்தார்.! மணி முத்து ஆறுயெல்லாம் வற்ற வைத்து.. பாலையினை பாழ்நிலமாய் மாற்றிவிட்டார்!
ஐந்திணைகள் என்பதெல்லாம். இலக்கியத்தில் இருக்கிறது.. புத்தகத்தில்.. ஓவியத்தில்.. மீயூசியத்தில் இருக்கிறது!
பெருமைமிகு தமிழர் வாழ்வு.. பெருஞ்சிதைவு கொண்டதனால் ஐநிலங்கள் மாறிப்போய்.. அழுது கண்ணீர் வடிக்கிறது!
என்தமிழன் எப்போது உணருவானோ?ஐந்திணைகள் காக்கும் வழி காணுவானோ?
*வே.கல்யாண்குமார்.*
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?