news Breaking News
clock

காப்புரிமை பெறுவதில் தமிழ்நாடு முன்னோடி: வரலாற்று சிறப்பு சாதனை

காப்புரிமை பெறுவதில் தமிழ்நாடு முன்னோடி: வரலாற்று சிறப்பு சாதனை


இந்தியாவில் காப்புரிமை தாக்கல் செய்வதில் தமிழ்நாடு முதலிடம் பிடித்து, நாட்டின் அறிவுசார் தலைநகராகத் தனது நிலையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்திய அளவில் பதிவுக்காக விண்ணப்பிக்கப்பட்ட மொத்தம் (68,201), காப்புரிமைகளில் தமிழ்நாடு மட்டுமே 15,440 காப்புரிமைகளைப் பதிவு செய்துள்ளது. இது நாட்டின் மொத்த எண்ணிக்கையில் ஏறத்தாழ 23 சதவீதம் ஆகும். இப்படி, காப்புரிமை பெறுவதில் மற்ற மாநிலங்களை விடத் தமிழ்நாடு மிகப்பெரிய இடைவெளியில் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


அண்மைச் சில நாட்களுக்கு முன் ஒன்றிய அரசின் இந்திய ரிசர்வ் வங்கி இந்திய மாநிலங்களின் வளர்ச்சி நிலைகள் குறித்த புள்ளி விவரங்களை வெளியிட்டு உள்நாட்டு உற்பத்திகளில் தமிழ்நாடு 16 சதவீதம் பெற்று இந்தியாவில் உச்சம் கண்டுள்ளது எனப் புதிய சாதனையை வெளிப்படுத்தியது.


அதனை தொடர்ந்து, 18.12.2025 அன்று தொழில் வழிகாட்டி நிறுவனம் வெளியிட்டுள்ள இந்திய காப்புரிமைப் பதிவுகளில் தமிழ்நாடு மாபெரும் வளர்ச்சி கண்டுள்ளது; மற்ற மாநிலங்களை விட மிக பெரிய இடைவெளியுடன் 23 சதவீதம் வளர்ச்சிகண்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது என்னும் விவரம் தெரியவந்துள்ளது.


62% வளர்ச்சி விகிதம்


முந்தைய 2023–2024–ம் நிதியாண்டோடு ஒப்பிடுகையில், 2024–2025–ம் நிதியாண்டில் காப்புரிமை தாக்கல் செய்வது 9,565-லிருந்து 15,440- ஆக உயர்ந்துள்ளது. இந்த 62 சதவீதம் வளர்ச்சி, மாநிலத்தில் உள்நாட்டுக் கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சிப் பணிகள் அதிவேகமாக விரைவுபடுத்தப்பட்டு வருவதைப் பிரதிபலிக்கிறது.


தமிழ்நாட்டின் ஆழமான ஆராய்ச்சித் தளம், வலுவான தொழில்முறை வலிமை, கல்வி நிறுவனங்களுக்கும் - தொழில் துறையினருக்கும் இடையே நிலவும் நெருக்கமான ஒருங்கிணைந்த சூழல் (Academia–Industry Ecosystem) ஆகியவை இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைக்கு இவை முக்கியக் காரணங்களாக அமைந்துள்ளன.


இந்தத் தொடர் வளர்ச்சியின் மூலம், இந்தியாவின் அறிவுசார் சொத்துரிமை மற்றும் கண்டுபிடிப்புத் துறையில் தமிழ்நாடு ஒரு மாபெரும் சக்தியாக உருவெடுத்துள்ளது என்று அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.




Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News