கிட்னி’ திருட்டு புகாரில் பாரபட்சமின்றி நடவடிக்கை: சட்டசபையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
சென்னை, அக். 16–
கிட்னி திருட்டு புகாரில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று சட்டசபையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார்.
தமிழக சட்டசபையில் இன்று, கிட்னி திருட்டு புகார் தொடர்பாக சட்டசபையில் அண்ணா தி.மு.க. கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இது தொடர்பாக பேசி அரசின் கவனத்தை ஈர்த்தார். அத்துடன், ‘கிட்னிகள் ஜாக்கிரதை' என அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பேட்ஜ் அணிந்து சட்டசபையில் பங்கேற்றனர்.
இந்த நிலையில், அண்ணா தி.மு.க. கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானம் மீது பதிலளித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது;
கிட்னி முறைகேடு குறித்து தொலைக்காட்சியில் வந்த செய்தியை அறிந்த உடனேயே முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். முதலமைச்சர் உத்தரவின் பேரில் குழு அமைக்கப்பட்டு உடனடியாக விசாரணை தொடங்கப்பட்டது. கிட்னி திருட்டு புகார் தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி வினித் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்தப்படுகிறது. அரசின் குழு பள்ளிப்பாளையம் உள்ளிட்ட பகுதி மருத்துவமனைகளில் ஆய்வு செய்து முறைகேடு நடந்ததை உறுதி செய்தது. சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளில் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்ய உடனடியாக தடை விதிக்கப்பட்டது. சட்ட நுணுக்கங்களை தவறாக பயன்படுத்தி கிட்னி மாற்று அறுவை சிகிச்சையில் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளின் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சியிலும் கிட்னி முறைகேடு நடந்துள்ளது. 2017-ம் ஆண்டு நாமக்கல் மாவட்ட எஸ்.பி. சுகாதாரத்துறைக்கு கடிதம் எழுதியிருந்தார். சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணை மேற்கொண்ட சுகாதாரத்துறை குழு பல்வேறு பரிந்துரைகளை வழங்கியது. பாரபட்சமின்றி, பாகுபாடு காட்டாமல் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிட்னி முறைகேட்டில் ஈடுபட்டதாக 2 புரோக்கர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தொடர்பாக புதிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. தானம் எனும் பெயரில் உடல் உறுப்பை விற்கக்கூடாது என ஆட்சியர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான ஆவணங்கள் 10 ஆண்டுகள் வரை பராமரிக்க வேண்டும். அனைத்து ஆவணங்களும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை, மதுரை, கோவை உட்பட 4 அரசு மருத்துவமனைகளில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான அங்கீகார குழு செயல்படுகிறது. கிட்னி மோசடி தொடர்பாக இடைத்தரகர்கள் 2 பேர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு கைது செய்யப்பட்டனர். கிட்னி மோசடி தொடர்பாக அரசு அலுவலர்கள் 7 பேர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.