news Breaking News
clock

சென்னை மெட்ரோ ரெயில் 2வது கட்டப் பணி: பனகல் பார்க் – கோடம்பாக்கம் இடையே சுரங்கப்பாதை அமைக்கும் திட்டம் நிறைவு

சென்னை மெட்ரோ ரெயில் 2வது கட்டப் பணி: பனகல் பார்க் – கோடம்பாக்கம் இடையே சுரங்கப்பாதை அமைக்கும் திட்டம் நிறைவு



சென்னை, அக். 16–


சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் 2ம் கட்டப் பணியின் 4வது வழித்தடத்தில் "பெலிகன்" என்றழைக்கப்படும் சுரங்கம் தோண்டும் இயந்திரம், பனகல் பார்க் நிலையம் மற்றும் மீனாட்சி கல்லூரிக்கு அருகில் உள்ள கோடம்பாக்கம் சாய்வுதளம் ஆகியவற்றுக்கு இடையேயான சுரங்கப்பாதை அமைக்கும் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.


சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் -2வது கட்டப்பணியில் 4வது வழித்தடத்தில் ‘பெலிகன்’ என பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம், வெற்றிகரமாக பணியை முடித்து கோடம்பாக்கம் நிலையத்தை வந்தடைந்தது.


இதற்கு முன்னதாக, இதற்கு இணையாக அமைக்கப்பட்ட மற்றொரு சுரங்கப் பாதையின் பணியை, "மயில்" எனப்படும் சுரங்கம் தோண்டும் இயந்திரம் கடந்த 23ந் தேதி அன்று முடித்தது. இந்த இரண்டு நிகழ்வுகளின் மூலம், இந்த முக்கியமான வழித்தடத்தில் செல்லும் இரட்டைச் சுரங்கப்பாதைகள் அமைக்கும் பணிகள் முழுவதுமாக நிறைவடைந்துள்ளது.


சுரங்கம் தோண்டும் இயந்திரம் பெலிகன், 2024ம் ஆண்டு மார்ச் 1ந் தேதி அன்று தனது ஆரம்பகட்டப் பணியைத் தொடங்கியது. பின்னர், மே 14ந் தேதி முதல் பிரதான சுரங்கம் தோண்டும் பணியைத் துவக்கியது.


பெலிகன் 594 நாட்களில், மொத்தம் 2076 மீட்டர் தூரத்திற்குச் சுரங்கப்பாதை அமைக்கும் பணியை முடித்துள்ளது. பனகல் பார்க் மற்றும் கோடம்பாக்கம் இடையிலான இந்த சுரங்கப்பாதை பிரிவு 2-ஆம் கட்டத்தின் மிகவும் நீளமான சுரங்கப்பாதை பிரிவாகும். பெலிகன் இயந்திரம், சென்னையில் நிலத்தடியில் உள்ள சவாலான கடினமான சூழ்நிலைகளை வெற்றிகரமாகக் கடந்து இறுதி இலக்கை அடைந்துள்ளது. சுரங்கப்பாதையின் இந்த வழித்தடம் கோடம்பாக்கத்தில் உள்ள இந்திய ரெயில்வே தண்டவாளத்தின் அடியில் அதன் மிக ஆழமான பகுதியைக் கொண்டுள்ளது. இங்கே, சுரங்கப்பாதையின் அடிப்பகுதி சுமார் -31.40 மீட்டர் ஆழத்தில் உள்ளது. இது இந்த வழித்தடத்திலேயே மிக ஆழமான பகுதிகளில் ஒன்றாகும்.


இந்நிகழ்வை, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன், பொது மேலாளர் ஆர். ரங்கநாதன் (கட்டுமானம்), பொது ஆலோசகர் நிறுவனத்தின் குழுத் தலைவர் சி. முருகமூர்த்தி, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், ஐடிடி சிமென்டேஷன்நிறுவனம் மற்றும் பொது ஆலோசகர் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தளத்தில் இருந்து பார்வையிட்டனர்.


முன்னதாக மெட்ரோ ரெயில் திட்டம் 2வது கட்டம், 3வது வழித்தடத்தில் ‘பவானி’ என்றழைக்கப்பட்ட சுரங்கம் தோண்டம் இயந்திரம் ராயப்பேட்டையிலிருந்து துவங்கி தனது பணியை வெற்றிகரமாக முடித்து ஆர்.கே. சாலை நிலையத்தை வந்தடைந்தது குறிப்பிடத்தக்கது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News