தமிழ்நாட்டில் தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கான நிபந்தனையில் தளர்வு: சட்டசபையில் மசோதா தாக்கல்
சென்னை, அக்.16-–
தமிழ்நாட்டில் தனியார் பல்கலைக் கழகங்களை நிறுவுவதற்கான நிபந்தனையில் தளர்வை கொண்டு வருவதற்கான சட்ட மசோதா நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
தமிழ்நாடு சட்டசபையில் நேற்று தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதாவை உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் அறிமுகம் செய்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
2019-ம் ஆண்டு தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டம், தற்போதுள்ள கல்வி நிறுவனங்களின் நிலையை கருத்தில் கொள்ளாமல், புதிதாக தனியார் பல்கலைக்கழகத்தை நிறுவ நிர்ப்பந்தம் செய்கிறது.
தமிழ்நாட்டில் தனியார் பல்கலைக் கழகங்களை நிறுவுவதற்கு 100 ஏக்கர் தொடர் நிலம் தேவைப்படுகிறது. மாநகராட்சிப் பகுதிகள், நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் செயல்படும் கல்வி நிறுவனங்கள், அந்தப் பகுதிகளில் அத்தகைய மிகப்பெரிய அளவிலான தொடர்ச்சி யான நிலத்தை அடையாளம் காண்பது மிகவும் கடினமாக உள்ளது.
எனவே பக்கத்து மாநிலங்களுக்கான தனியார் பல்கலைக்கழக சட்டங்களில் உள்ளதுபோல், இங்கும் நிலத்தின் தேவை குறைக்கப்பட்டால், தகுதியான மற்றும் உரிய கல்வி நிறுவனங்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க முடியும்.
எனவே, மாணவர்களின் நலனுக்காகவும், உயர் கல்வியை மேம்படுத்தவும், மாநிலத்தில் தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கான கொள்கை நெறிகளை எளிமைப்படுத்தவும் சட்டத்தைத் திருத்தம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, தமிழகத்தில் தனியார் பல்கலைக்கழகத்திற்காக ஒதுக்கி வைக்கப்பட்ட நிலம், மாநகராட்சி எல்லைக்குள் இருந்தால் அது 25 ஏக்கருக்கு குறையாமல் இருக்க வேண்டும். அதுபோன்ற நிலம், நகராட்சி அல்லது பேரூராட்சி பரப்பிடத்திற்குள் இருந்தால் 35 ஏக்கருக்கு குறையாமல் இருக்க வேண்டும். வேறு இடங்களில் இருந்தால் 50 ஏக்கருக்கு குறையாமல் தொடர்ச்சி நிலமாக இருக்க வேண்டும்.
தனியார் பல்கலைக்கழகத்தின் மருத்துவம், பல்மருத்துவம், மருத்துவம் சார்ந்த துணைப் பாடப்பிரிவுகளுக்கான அரசு இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும்.
அதன்படி, சிறுபான்மையினரல்லாத தனியார் பல்கலைக்கழகங்கள் 65 சதவீத இடங்களையும், சிறுபான்மையினர் தனியார் பல்கலைக்கழகம் என்றால் 50 சதவீத இடங்களையும், மருத்துவம், பல்மருத்துவம், மருத்துவம் சார்ந்த துணைப் பாடப்பிரிவுகள் மற்றும் இந்திய மருத்துவப் பாடப்பிரிவுகளுக்கு ஏற்றபடி அரசுக்கு ஒதுக்க வேண்டும். இளநிலை மருத்துவம், அறுவை சிகிச்சை, இளநிலை பல்மருத்துவம் போன்றவை அதில் உள்ளடங்கும். இவை மட்டு மல்லாமல், அரசு அறிவிக்கும் இளநிலை, முதுநிலையிலான வேறு பாடப்பிரிவுகளும் அதில் உள்ளடங்கும்.
ஒவ்வொரு தனியார் பல்கலைக்கழகத்திலும் ஒதுக்கப்பட்ட அரசு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை, நடைமுறையில் உள்ள சட்டத்தின்படி, இடஒதுக் கீட்டு விதிகளை பின்பற்றி மேற்கொள்ளப் படும். கல்லூரி நிலையில் இருந்து பல்கலைக் கழகமாக மாறும் அரசு உதவி பெறும் நிறுவனங்கள், அங்குள்ள அனுமதிக்கப்பட்ட அரசுப் பணியிடங்களில் உள்ளவர்களுக்கான பணி நிபந்தனைகளை குறைக்கக் கூடாது. அதுபோல் பல்கலைக்கழகமாக மாற்றப்படும் அந்த கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் மாணவர் களும், பல்கலைக்கழக தேர்வு எழுதி படிப்பை முடிக்க அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.