சென்னை கொளத்தூரில் ரூ.111 கோடியில் துணை மின் நிலையம்: ஸ்டாலின் திறந்துவைத்தார்

சென்னை கொளத்தூரில் ரூ.111 கோடியில் துணை மின் நிலையம்: ஸ்டாலின் திறந்துவைத்தார்



சென்னை, அக்.16-–


சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட கணேஷ் நகரில் ரூ.110.92 கோடி மதிப்பீட்டில் புதிதாக நிறுவப்பட்டுள்ள துணை மின் நிலையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார்.


தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் சார்பில் கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கணேஷ் நகர் பகுதியில், வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.110.92 கோடி மதிப்பீட்டில் 230/33 கிலோ வாட் வளிம காப்பு துணைமின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.


இந்த துணை மின் நிலையத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி துணை மின் நிலையத்தை திறந்துவைத்தார்.


இந்த துணைமின் நிலையத்தின் மூலமாக ஏற்கனவே இயக்கத்தில் உள்ள கொளத்தூர், பெரியார் நகர், அன்னை நகர், நேர்மை நகர் ஆகிய துணைமின் நிலையங்களுக்கும், தற்போது புதியதாக நிறுவப்பட்டுள்ள கணேஷ் நகர் மற்றும் மாதவரம் ரேடியன்ஸ் துணைமின் நிலையங்களுக்கும் தடையில்லாமல் சீரான மின்சாரம் வழங்கப்படும் என்றும், இந்த துணைமின் நிலையங்கள் வாயிலாக சுமார் 1 லட்சம் தொழில் மின் நுகர்வோர்கள், 1½லட்சம் வணிக மின் நுகர்வோர்கள் மற்றும் 3 லட்சம் வீட்டு மின் நுகர்வோர்கள் பயன்பெறுவார்கள் என்றும் மின்வாரிய அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.


இதன் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர், கணேஷ் நகரில் உள்ள ஒருங்கிணைந்த கல்லூரி மாணவர்களுக்கான சமூக நீதி விடுதியில் ரூ.12 லட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள தானியங்கி குடிநீர் வழங்கும் எந்திரத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர், சமூகநீதி விடுதியை பார்வையிட்டு மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.


இதைத்தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களுக்காக கொளத்தூர் நலச் சங்கங்களின் நிர்வாகிகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து பேசினார்கள்.


விழாவில் 300 டிரோன்கள் மூலம் வானில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவப்படம் உருவாக்கப்பட்டது.


‘நம்ம முதல்வர், நம்ம கொளத்தூர்' என்ற வாசகமும் டிரோன்கள் மூலம் வடிவமைக்கப்பட்டது. வானில் டிரோன்கள் நிகழ்த்திய இந்த வர்ண ஜால நிகழ்வை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வியப்புடன் பார்த்து ரசித்தார்.


இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எஸ்.எஸ். சிவசங்கர், சேகர்பாபு, சிவ.வீ. மெய்யநாதன், மேயர் பிரியா, எம்.பி.க்கள் டாக்டர் கலாநிதி வீராசாமி, கிரிராஜன், எம்.எல்.ஏ.க்கள் தாயகம் கவி, வெற்றியழகன், ஜோசப் சாமுவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%