தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையிலிருந்து 2695 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையிலிருந்து 2695 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
கோவை, அக். 16–

கோவை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளுக்கான சிறப்பு பேருந்துகள் இயக்குவது, போக்குவரத்து ஏற்பாடுகள் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் கலெக்டர் பவன்குமார் கிரியப்பனவர் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது,

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளுக்கான சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. போக்குவரத்து துறையின் சார்பில் அக்டோபர் 17 முதல் 20 வரை மதுரை, தேனி, திண்டுக்கல், அடுத்துள்ள தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் மட்டுமே சிங்காநல்லூர் நிலையத்திலிருந்தும், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, கரூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் சூலூர் பேருந்து நிலையத்திலிருந்தும், ஊட்டி, குன்னூர், கூடலூர் செல்லும் பேருந்துகள் சாய்பாபா காலனி புதிய பேருந்து நிலையத்திலிருந்தும், மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம், ஈரோடு, சேலம், திருப்பூர் செல்லும் பேருந்துகள் காந்திபுரம் மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்தும், பொள்ளாச்சி, உடுமலை, பழனி, பாலக்காடு செல்லும் பேருந்துகள் உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்தும் பேருந்துகளை இயக்க வேண்டும்.

2695 சிறப்பு பேருந்துகள்

இந்த நான்கு நாட்களில் 2695 பேருந்துகள் கோவை மாவட்டத்தி லிருந்து வெளி மாவட்டங்களுக்கு இயக்கப்படவுள்ளன. பேருந்துகள் தொடர்பான விவரங்களை அறிந்து கொள்ள மற்றும் புகார்களை தெரிவிக்க வும் பொதுமக்கள் 9442501920 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்

கோவை மாவட்டத்திற்கு தென் மாவட்டங்களிலிருந்து வரும் பேருந்துகள் அனைத்தும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக பயணிகளை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் மட்டுமே (இறுதி நிறுத்தம்) இறக்கிவிட ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

வெளி மாவட்டங்களிலிருந்து வரும் வழக்கமான பேருந்துகள் பேருந்து நிலைய வாயிலில் நின்று பயணிகளை ஏற்றும் பொழுது போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் அவற்றை தவிர்க்கும் பொருட்டு வெளி மாவட்ட பேருந்துகளுக்கென பயணிகளை ஏற்றுவதற்கும், இறக்குவதற்கும் ஏற்படுத்தப்பட்ட பேருந்து நிலை யங்கள் விபரம் முன்கூட்டியே தெரி விக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டிப்போவிலிருந்து பேருந்து நிலையத்திற்குள் நுழைவதற்கு முன் பேருந்துகளில் பயணிகள் ஏறுவதை தவிர்க்கும் பொருட்டு வாகனங்களில் செல்லும் இடம் ஒளிர்வதை தவிர்க்கவும், பேருந்து நிலையத்திற்குள் நுழைந்த பின்பு மட்டுமே செல்லும் இடம் ஒளிர்வதை உறுதி செய்யவும், பேருந்து நிலையம் நுழையும் முன்புவரை கோவை என்றே ஒளிரும்படி வழிவகை செய்ய வேண்டும். முடிவாக தீபாவளிப் பண்டிகை நாட்களுக்கு கோவைக்கு வரும் பயணிகள் தங்களது பகுதிகளுக்குச் செல்ல ஏதுவாக மாநகரப் பேருந்துகளை கூடுதல் முறை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பேருந்துகள் உரிய கால இடைவெளி யில் பொதுமக்களுக்கு இடையூறின்றி இயக்கப்படுவதை உறுதி செய்ய முதல் நிலை அலுவலர்களை சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பேருந்து நிலையத்தில் பணியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொடிசியாவில் ஆம்னி பேருந்துகள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளி மாவட்டங்களுக்கு இயங்கவிருக்கும் தனியார் ஆம்னி பேருந்துகள் அனைத்தும் கொடிசியாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அனுமதிக்கப்பட்ட இடத்திலிருந்து மட்டுமே பேருந்துகளை நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

அவ்வாறு கொடிசியாவிலிருந்து இயக்கப்படும் சென்னை மற்றும் பெங்களூர் செல்லும் ஆம்னி பேருந்துகள் அனைத்தும் அவினாசி சாலை வழியாக செல்ல வேண்டும். தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ஆம்னி பேருந்துகள் சின்னியம் பாளையம், நிலாம்பூர், எல்அன்டி பைபாஸ் வழியாக சென்று திருச்சி சாலையை சென்றடைந்து செல்ல வேண்டும். கொடிசியா பேருந்து நிறுத்தம் பகுதியில் பயணிக ளுக்கு உணவு கிடைக்குமாறு தனியார் மூலம் தற்காலிக உணவகங்கள் அமைக்க ஒப்பந்தம் செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு வாகன ஓட்டிகளின் வசதிக்காக புதிதாக ஏற்படுத்தவுள்ள வாகனங்கள் நிறுத்தங்கள் விபரம், அவற்றிற்கான வழிகள் குறித்து பேனர் வைத்து உரிய பார்க்கிங் குறிகள் இட்டு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். கூடுதலாக இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும் பேருந்து நிலையத்தில் நிறுத்த இயலாத நிலையில் அவற்றை நிறுத்துவதற்கு அந்தந்த பேருந்து நிலையத்திற்கு அருகில் பேருந்துகளை நிறுத்த ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

அனைத்து பேருந்து நிலையங்களி லும் பயணிகள் பேருந்தில் ஏறும் பொழுது கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு தனித்தனி மாவட்டங்களுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் பேரிகேட் வசதி ஏற்படுத்தவும், பயணிகள் நெரிசலின்றி வரிசையில் நின்று பேருந்தில் ஏறிச் செல்வதை கண்காணிக்க வேண்டும்.

அடிப்படை வசதிகள்

மேலும் தீபாவளி பண்டிகை நாளினை முன்னிட்டு ஆம்னி பேருந்து கள் அதிக கட்டணம் வசூல் செய்தால் புகார் தெரிவிக்கும் பொருட்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஒருவரை நியமித்து கண்காணிக்க வேண்டும்.

கோவை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு துணிக் கடைகள் மற்றும் இதர கடைகளுக்கு பொதுமக்கள் வருகை அதிகமாக இருப்பதால் ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் வீதி ஆகிய வீதிகளில் உள்ள துணிக்கடை உரிமையாளர்களுக்கென உள்ள சங்கத்துடன் மாநகராட்சி மற்றும் பேரூராட்சி துறை சார்பில் பேச்சுவார்த்தை நடத்தி கூடுதல் வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் அனைத்து பேருந்து நிலையங்களிலும் பயணிகளுக்கென குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, மழையின் காரணமாக தற்காலிக கூடாரங்கள், மின்விளக்கு வசதி, சுகாதார வசதி ஆகியவற்றை ஏற்படுத்த வேண்டும். கோவை மாவட்டத்தின் முக்கிய பேருந்து நிலையங்களான காந்திபுரம், சூலூர், சிங்காநல்லூர், உக்கடம் ஆகிய பேருந்து நிலையங்களிலும் மேற்படி அடிப்படை வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

கட்டுப்பாட்டுக்குழு

தீபாவளி பண்டிகையை ஒட்டிய முந்தைய இரு தினங்களில் கட்டுப்பாட்டுக்குழு ஏற்பாடு செய்து, அக்குழுவில் போக்குவரத்துக் காவல்துறை சார்பில் ஒரு அலுவலர் மற்றும் கோவை மாவட்ட தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஒருவர் பணியமர்த்தப்பட வேண்டும். பேருந்து நிலையத்தில் கூடுதல் பேருந்து இயக்கம் மற்றும் புகார்கள் பொது மக்களிடமிருந்து வரும் பொழுது அவற்றை நிவர்த்தி செய்யும்பொருட்டு உயர்நிலை அலுவலர்களை ஒவ்வொரு பேருந்து நிலையத்திலும் சுழற்சி முறையில் பணியமர்த்திட வேண்டும்.

சாலைப் போக்குவரத்து தொடர்பான வாட்சப் குழு ஒன்றை உருவாக்கி சம்பந்தப்பட்ட அதிகாரிகளை குழுவில் இணைத்து உடனுக்குடன் செய்திகளை பெறவும், தீர்வு காணவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் பவன்குமார் க.கிரியப்பனவர் தெரிவித்தார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மோ.ஷர்மிளா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொ) நிறைமதி, கூடுதல் துணை ஆணையர் (போக்குவரத்து) சிற்றரசு, துணை ஆணையர் போக்குவரத்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் துணை மேலாளர் (வணிகம்) ராதாகிருஷ்ணன், வட்டார போக்குவரத்து அலுவலர் (வடக்கு) விஸ்வநாதன், பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலர் செழியன், உதவி காவல் ஆணையாளர்கள், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) மனோரஞ்சிதம், கூடுதல் உதவி காவல் ஆணையர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%