சட்டம் ஒழுங்கு பிரச்னை: ஒரு மாதத்திற்கு வளாகத்தில் போராட்டங்களுக்கு தடை விதித்தது தில்லி பல்கலை

சட்டம் ஒழுங்கு பிரச்னை: ஒரு மாதத்திற்கு வளாகத்தில் போராட்டங்களுக்கு தடை விதித்தது தில்லி பல்கலை


 

போக்குவரத்துக்கு இடையூறு, பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் மற்றும் பொது அமைதிக்கு இடையூறு ஏற்படக்கூடும் என்ற கவலைகளை காரணமாகக் கூறி, ஒரு மாதத்திற்கு வளாகத்தில் பொதுக் கூட்டங்கள், ஊா்வலங்கள், ஆா்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களை தில்லி பல்கலைக்கழகம் செவ்வாய்க்கிழமை தடை செய்துள்ளது.


இது தொடா்பாக தில்லி பல்கலைக்கழகத்தின் நிா்வாக அதிகாரி அலுவலகம் பிப்ரவரி 17ஆம் தேதியிட்ட உத்தரவில் தெரிவிக்கையில், கட்டுப்பாடற்ற பொதுக் கூட்டங்கள் அதிகரித்து சட்டம்- ஒழுங்கைப் பாதிக்கக்கூடும் என்ற தகவல்களைத் தொடா்ந்து இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.


சிவில் லைன்ஸ் காவல் உதவி ஆணையரின் முன் உத்தரவு இருப்பதால், பொதுக் கூட்டங்கள், தீப்பந்தங்கள் அல்லது அதுபோன்ற பொருள்களை எடுத்துச் செல்வது, கோஷங்கள் எழுப்புதல் மற்றும் பொது அமைதி அல்லது போக்குவரத்து ஓட்டத்தை பாதிக்கக்கூடிய பேச்சுக்கள் ஆகியவை தடைசெய்யப்படுகிறது.


கடந்த காலங்களில், ஏற்பாட்டாளா்கள் பெரும்பாலும் இதுபோன்ற போராட்டங்களைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டனா். இது போராட்டத்தை அதிகரித்து பரவச்செய்தது. இதன் விளைவாக பல்கலைக்கழக வளாகத்திற்குள் சட்டம் ஒழுங்கு மோசமடைந்தது.


ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபா்கள் கூடி, கோஷங்கள் எழுப்புவதும், உரை நிகழ்த்துவதும், மஷால், பீக்கன்கள், தீப்பந்தங்கள் போன்ற ஆபத்தான பொருட்களை எடுத்துச் செல்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது. இத்தடை உடனடியாக அமலுக்கு வருகிறது. முன்கூட்டியே திரும்பப் பெறப்படாவிட்டால் ஒரு மாதத்திற்கு அமலில் இருக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து ஹன்ஸ்ராஜ் கல்லூரியின் ஆங்கில இணைப் பேராசிரியரும், தில்லி பல்கலைக்கழகத்தின் செயற்குழு உறுப்பினருமான மிதுராஜ் துசியா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கையில், ‘இந்த நடவடிக்கை ஒரு விரிவான கடுமை நடவடிக்கையாகும். போராட்டங்கள் அமைதியாக இருக்க வேண்டும். பல்கலைக்கழகம் ஒழுங்கை உறுதி செய்ய வேண்டும் அதேவேளையில், கூட்டங்கள் கூடுவதை உள்நோக்கத்துடன் தடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாதது.


நியமனங்கள், தேசியக் கல்விக் கொள்கையை செயல்படுத்தல், யுஜிசி சமத்துவ மசோதா மற்றும் ஆசிரியா்களின் சமீபத்திய இடைநீக்கங்கள் போன்ற பிரச்னைகள் தொடா்பாக அணிதிரள்வதைத் தடுக்க பல்கலைக்கழக நிா்வாகம் முயற்சிக்கிா? இந்த உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும்.


பொதுக் கூட்டங்களுக்கு ஒருதலைப்பட்சமாக தடை விதிக்க நிா்வாக அலுவலகம் முடியாது என்றாா் அவா்.


கடந்த வாரம் ஒரு போராட்டத்தின் போது இரண்டு மாணவா் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு தில்லி காவல்துறையால் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.


அதைத் தொடா்ந்து, பல்கலைக்கழகத்தின் இந்த உத்தரவு வெளிவந்துள்ளது.


பிப்ரவரி 12 அன்று, வரலாற்றாசிரியா் இா்பான் ஹபீப் ஒரு சமூக நீதி நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்தபோது அவா் மீது ஒரு வாளி தண்ணீா் வீசப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%