சென்னை,
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
“தமிழ் வளர்ச்சித் துறையின் 2022–2023 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின்போது, தொழில் துறை அமைச்சரால் சட்டமன்றப் பேரவையில் 19.04.2022 ஆம் நாளன்று பின்வரும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஊடகங்களில் தமிழ்ச் செய்திகளைத் தவறில்லாமலும், அழகாகவும், சரியாகவும் உச்சரிக்கும் செய்தி வாசிப்பாளர்கள், நேர்காணல் செய்பவர்கள் மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுக்கு நான்கு பேரைத் தெரிவு செய்து அவர்களை பாராட்டி ஒவ்வொருவருக்கும் ரூ.25,000/- பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
2023 - 2024 ஆம் ஆண்டிற்கான சிறந்த தமிழ் உச்சரிப்புக்கான விருதாளரை தேர்வு செய்ய ஏதுவாக அனைத்து காட்சி ஊடக நிறுவனங்களிடம் இருந்த ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களை தங்களை பற்றிய குறிப்புகளுடன் பின்வரும் நா பிறழ் தொடர்களை மை அணலில் பற்றிய அணுப் போன்ற அனலால் அனு வெந்து போனது. அணுக்கத்தார் அனுக்கம் என்றும் தொல்லை அண்ணத்தில் அன்னம் படலாம; கன்னம் படலாமா? கன்னி அணிந்த கண்ணி காணத்தில் வந்ததா? கானத்தில் சேர்ந்த்தா? அலம் பிடித்தால் அளம் வருமோ? அளைக்குள்ளே புகுந்த அலை அழைத்து வருமோ? கறையானை அவள் அல்லில் செய்த அவலை அள்ளி எடு, ஒலியும் ஒளியும் ஒழிந்து போனால் ஒள் உளதாகுமோ?. கழகத்தார் ஆடும் கழங்கு கலகம் விளைக்குமா? களங்கம் தருமா? அரம் கொண்டு அறம் அரியலாமா? அரியை அறியா அரிவை அருவை அறுத்த இறவியன்றோ? ஒருத்தலை ஒறுத்து ஒருவினால் ஒறுவு இலதாகுமோ?. தமிழுக்குக் கரையில்லை கறுப்பென்பது கறையுமில்லை உச்சரித்து அதனை காணொலியாக பெறப்பட்டு தேர்வுக்குழுவின் முன் காட்சிபடுத்தப்பட்டது.
இவ்விருதிற்கென 2023-2024ஆம் ஆண்டிற்கான சிறந்த தமிழ் உச்சரிப்பாளர் விருதாளருக்கான தகுதியானவர்களாக முனைவர் வா.கி.சர்வோதய ராமலிங்கம், வேதவள்ளி செகதீசன், ஜோ.அருணோதய சொர்ணமேரி, ப.மோகன்ராஜ் ஆகிய நான்கு ஊடகவியலாளர்கள் தெரிவு செய்யப் பெற்றுள்ளனர்.
சென்னை, தலைமைச்செயலகத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனால் முனைவர் வா.கி.சர்வோதய ராமலிங்கம், வேதவள்ளி செகதீசன், ஜோ.அருணோதய சொர்ணமேரி, ப.மோகன்ராஜ் ஆகிய நால்வருக்கும் இன்று (08.09.2025) 2023 - 2024 ஆம் ஆண்டிற்கான சிறந்த தமிழ் உச்சரிப்பு விருதாளர் ஒவ்வொருவருக்கும் ரூ.25,000/-க்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கிச் சிறப்பிக்கப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் வே.ராஜாராமன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந.அருள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.