சென்னையில் ஆன் லைன் வர்த்தகத்தில் ரூ. 22.3 கோடி மோசடி

சென்னையில் ஆன் லைன் வர்த்தகத்தில் ரூ. 22.3 கோடி மோசடி

சென்னை, செப். 10–


ஆன்லைன் டிரேடிங் தளத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறி, ரூ.22.3 கோடி பணத்தை மோசடி செய்த வடமாநில ஆசாமியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.


சென்னை, இராயப்பேட்டை பகுதியில் வசித்து வரும் ஸ்வேதரன்யன் (76) என்பவர் மத்திய குற்றப்பிரிவில் அளித்த புகாரில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆன்லைன் டிரேடிங் தளத்தில் முதலீடு செய்தபோது, போலியான ஆன்லைன் டிரேடிங் தளம் மூலம் மொத்தம் ரூ.22.30 கோடி மோசடி செய்யப்பட்டதாகவும், அதற்கு காரணமானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொடுத்த புகாரின்பேரில், மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொள்ளப்பட்டது.


சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின்பேரில், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையாளர் ஏ.ராதிகா வழிகாட்டுதலின் பேரில், மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் துணை ஆணையாளர் அறிவுரையின்பேரில், சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நடத்திய விசாரணையில், மேற்படி புகார்தாரரின் தொகையில் சுமார் ரூ.1.4 கோடி அகமதாபாத் நகரில் உள்ள பந்தன் வங்கி கணக்கிற்கு செலுத்தப்பட்டிருந்தது தெரியவந்தது.


அதன்பேரில், சைபர்கிரைம் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் அகமதாபாத் சென்று, குற்ற சம்பவத்தில் தொடர்புடைய படேல் ஜே (28) என்பவரை கைது செய்து, அகமதாபாத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, உரிய சட்ட நடவடிக்கைகளுக்கு பின்னர் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்டவரிடமிருந்து குற்ற செயலுக்கு பயன்படுத்திய மொபைல் போன் மற்றும் இரண்டு சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.


மேலும் விசாரணையில், எதிரி படேல் ஜே மீது தமிழ்நாடு, மகாராஷ்டிரா, தெலுங்கானா, கர்நாடகா, டெல்லி, கோவா, பஞ்சாப், ஆந்திர பிரதேசம், உத்திர பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் 31 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதும், படேல் ஜே மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து போலி முதலீட்டு செயலிகள், இணையதளங்கள், சமூக ஊடக விளம்பரங்கள் மூலம் பொதுமக்களை ஏமாற்றி, விரைவில் அதிக லாபம் கிடைக்கும் என்ற பேராசையை தூண்டி, பெரிய அளவில் நிதி இழப்பை ஏற்படுத்தியுள்ளது தெரியவந்தது.


சைபர் குற்றங்கள் தொடர்பாக 1930 என்ற தொலைபேசி எண் மூலமாகவும், www.cybercrime.gov.in என்ற இணையதள வாயிலாகவும் மற்றும் அருகிலுள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகாரளிக்கலாம் என்றும் கமிஷனர் அருண் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%