சேலத்தில் பெண் தோழியை கொலை செய்த தனியார் மருத்துவமனை சிஇஓ கைது!
Dec 12 2025
25
சேலம்: சேலத்தில் திருமணத்துக்கு வற்புறுத்திய பெண் தோழியை கொலை செய்த தனியார் மருத்துவமனை சிஇஓ-வை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். சேலம் ராமகிருஷ்ணா சாலையை சேர்ந்த பிஇ பட்டதாரி பாரதி (34), சங்கர் நகரில் உள்ள டியூஷன் சென்டரில் தங்கி பணியாற்றி வந்தார்.
பாரதியின் நண்பர் உதயசரண் (49). தனியார் மருத்துவமனையில் சிஇஓ-வாக பணியாற்றி வருகிறார். 2 நாட்களுக்கு முன்னர் நள்ளிரவு காட்சி சினிமாவுக்கு சென்ற இருவரும் டியூஷன் சென்டரில் தங்கினர்.
அப்போது, பாரதி மயங்கி விழுந்ததாக, உதயசரண் தான் பணியாற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தார். மருத்துவர்கள் பரிசோதனை செய்து பாரதி ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையறிந்த பாரதியின் உறவினர்கள் உயிரிழப்பில் மர்மம் உள்ளதாகவும், இதுசம்பந்தமாக உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியதின் அடிப்படையில், அஸ்தம்பட்டி போலீஸார் மர்ம மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.
விசாரணை குறித்து போலீஸார் கூறியதாவது: உதயசரணுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். நாழிக்கல்பட்டியில் வசித்து வருகின்றனர். பாரதியுடன் தொடர்பு ஏற்பட்டு அவருடன் உதயசரண் நெருங்கி பழகியுள்ளார்.
திருமணம் செய்து கொள்ளுமாறு பாரதி அடிக்கடி வற்புறுத்தி உதயசரணுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதற்கு உதயசரண் மறுப்பு தெரிவித்த நிலையில் மீண்டும் அவர்க ளுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரம் அடைந்த உதயசரண் பாரதியை தாக்கி கீழே தள்ளி தலையணையால் மூச்சு திணறடித்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் கொலை வழக்காக மாற்றி உதயசரணை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?