சொத்துக் குவிப்பு புகார்: அமைச்சர் துரைமுருகனுக்கு ‘பிடிவாரண்டு' கோர்ட் உத்தரவை நிறைவேற்ற 15-ந் தேதிக்கு வழக்கு தள்ளிவைப்பு

சென்னை, செப்.5-
சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் துரைமுருகனுக்கு எதிராக சென்னை சிறப்பு கோர்ட்டு ஏற்கனவே பிடிவாரண்டு பிறப்பித்த நிலையில் அந்த உத்தரவை நிறைவேற்றுவதற்காக வருகிற 15-ந் தேதிக்கு வழக்கை கோர்ட் தள்ளிவைத்துள்ளது.
தமிழக நீர்வளத்துறை அமைச்சராக இருந்து வரும் அமைச்சர் துரைமுருகன், கடந்த 2006-11-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின்போது பொதுப்பணித்துறை அமைச்சராக பதவி வகித்தபோது வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய்க்கு சொத்து சேர்த்ததாக 2011-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த வேலூர் சிறப்பு கோர்ட், துரைமுருகன், அவரது மனைவி சாந்தகுமாரி ஆகியோருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் இருந்து அவர்களை விடுவித்து 2017-ம் ஆண்டு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.
இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த ஐகோர்ட், துரைமுருகன், அவரது மனைவி சாந்தகுமாரியை விடுவித்து வேலூர் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது.
இதைத்தொடர்ந்து, இந்த வழக்கு சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறப்பு கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின்போது அமைச்சர் துரைமுருகன், அவரது மனைவி சாந்தகுமாரி ஆகியோர் ஆஜராகாததால் அவர்கள் இருவருக்கும் எதிராக பிடிவாரண்டு பிறப்பித்து கோர்ட் உத்தரவிட்டது. இந்தநிலையில் நேற்று அந்த வழக்கு நீதிபதி பக்தவச்சலு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அமைச்சர் துரைமுருகனின் மனைவி சாந்தகுமாரி நேரில் ஆஜராகி தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டை திரும்ப பெறக்கோரி மனு தாக்கல் செய்தார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, சாந்தகுமாரிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டை திரும்ப பெற்று உத்தரவிட்டார்.
பின்னர், அமைச்சர் துரைமுருகனுக்கு எதிரான பிடிவாரண்டை நிறைவேற்றுவதற்காக வழக்கை செப்டம்பர் 15-ந் தேதிக்கு தள்ளி வைப்பதாக உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை அன்றைய தினம் தள்ளிவைத்தார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?