உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்: 9 பேர் கொண்ட பட்டியலை திருப்பி அனுப்பிய மத்திய அரசு
Sep 07 2025
10

மதுரை:
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பதற்குப் பரிந்துரைக்கப்பட்ட 9 வழக்கறிஞர்கள் கொண்ட பட்டியலை மத்திய அரசுதிரும்ப அனுப்பியுள்ளது. நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீட்டைப் பின்பற்றி, உரிய பிரதிநிதித்துவம் வழங்கி, புதிய முன்மொழிவை அனுப்புமாறு மத்திய சட்டத் துறை கேட்டுக் கொண்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் மொத்தம் 75 நீதிபதி பணியிடங்கள் உள்ளன. தற்போது தலைமை நீதிபதி உட்பட மொத்தம் 56 நீதிபதிகள் பணியில் உள்ளனர். 19 நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்நிலையில், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக வழக்கறிஞர்கள் கே.கோவிந்தராஜன், இ.வி.சந்துரு(எ) இ.சந்திரசேகரன், பி.வி.பாலசுப்பிரமணியம், என்.சி. அசோக்குமார், ஆர்.காந்தி, அசன்முகமதுஜின்னா, எம்.பி. செந்தில், ஜெ.சந்திரன் சுந்தர் சசிகுமார், இ.மனோகரன் ஆகியோரை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க, சென்னை உயர் நீதிமன்றம் மத்திய அரசுக்கு கடந்த ஏப்ரல் மாதம் முன்மொழிவு அனுப்பியது.
இந்த முன்மொழிவு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஆலோசனைக்காக மத்திய அரசால் அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் உச்ச நீதிமன்ற கொலீஜியம், சென்னை உயர் நீதிமன்றத்தின் முந்தைய தலைமை நீதிபதியின் முன்மொழிவை மறுபரிசீலனை செய்வதற்காக திரும்ப அனுப்ப மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
புதிய முன்மொழிவு... மேலும், முன்மொழிவுப் பட்டியலில் இடம் பெற்றுள்ள வழக்கறிஞர்கள் மற்றும் பிற தகுதியான வழக்கறிஞர்களின் நன்னடத்தையைச் சரிபார்த்துத் தகுதியான வழக்கறிஞர்களை நீதிபதிகளாக நியமிக்கும் வகையில் புதிய முன்மொழிவு அனுப்பவும் உச்சநீதிமன்ற கொலீஜியம் கூறியுள்ளது. இதையடுத்து 9 வழக்கறிஞர்களை நீதிபதிகளாக நியமிக்கும் முன்மொழிவை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது.
இது தொடர்பான கடிதத்தில், உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனங்களின்போது பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர் மற்றும் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கி முன்மொழிவுகளை அனுப்புமாறும் மத்திய சட்டத்துறை கூறியுள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?