தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 4-வது ரெயில் பாதை திட்டம்: ரூ.757 கோடியில் செயல்படுத்த ரெயில்வே அமைச்சகம் ஒப்புதல்

தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 4-வது ரெயில் பாதை திட்டம்: ரூ.757 கோடியில் செயல்படுத்த ரெயில்வே அமைச்சகம் ஒப்புதல்


சென்னை, அக்.23-


தாம்பரம்-செங்கல்பட்டு இடையேயான 4-வது ரெயில் பாதை திட்டத்துக்கு மத்திய ரெயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்து உள்ளது. இத்திட்டம் ரு.757.18 கோடியில் அமைய உள்ளது.


தாம்பரம்-செங்கல்பட்டு ரெயில் பாதையானது தென் மாவட்டங்களுக்கு செல்லும் பிரதான ரெயில் பாதையாக இருக்கிறது. எழும்பூரில் இருந்து செல்லும் பெரும்பாலான தென் மாவட்ட ரெயில்கள் இப்பாதை வழியே செல்கிறது.


நாள்தோறும் இந்த பாதை வழியே 60-க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களும், 300-க்கும் மேற்பட்ட மின்சார ரெயில்களும் இயக்கப்படுகின்றன. மின்சார ரெயில் சேவையை பொறுத்தவரையில் சென்னை கடற்கரை–-செங்கல்பட்டு வழித்தடத்தில் மட்டும் ஒரு நாளைக்கு 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் சென்று வருகின்றனர். தற்போது இந்த வழித்தடத்தில் 3 பாதைகள் மட்டுமே உள்ளன. கூடுதல் பாதைகள் இல்லாததால் தென் மாவட்டங்களுக்கு இந்த வழித்தடத்தில் கூடுதல் ரெயில்களை இயக்க முடியாத நிலை இருந்து வந்தது.


இதுபோக விழாக்காலங்களில் சிறப்பு ரெயில்கள் விடப்பட்டாலும் குறைந்த அளவில் விடும் நிலையே இருந்து வருகிறது. எனவே, தாம்பரம்-செங்கல்பட்டு 4-வது ரெயில் பாதை திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டுமென பயணிகள் மத்தியில் கோரிக்கை எழுந்தது. இதேபோல, 4-வது புதிய பாதை அமைக்கும் திட்டத்துக்கு தமிழக அரசும் விருப்பம் தெரிவித்திருந்தது. அதன்படி, இந்த திட்டத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரித்து மத்திய ரெயில்வே அமைச்சகத்திடம் தெற்கு ரெயில்வே வழங்கியது.


இந்த நிலையில், தாம்பரம்–-செங்கல்பட்டு இடையிலான 4-வது ரெயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கு மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ஒப்புதல் அளித்துள்ளார்.


இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-


தாம்பரம்–செங்கல்பட்டு இடையிலான 30.2 கிலோ மீட்டர் தூரத்திலான 4-வது ரெயில் பாதை திட்டத்திற்கு மத்திய ரெயில்வே மந்திரி ஒப்புதல் அளித்துள்ளார். இந்த திட்டத்தின் செலவு ரூ.757.18 கோடி என மதிப்பிடப்பட்டு உள்ளது. சென்னை கடற்கரை முதல் கன்னியாகுமரி வரையிலான வழித்தடத்தில் தாம்பரம்-செங்கல்பட்டு பிரதான பாதை ஆகும். மின்சார ரெயில்களும், எக்ஸ்பிரஸ் ரெயில்களும் இந்த வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. அதிக அளவிலான பயணிகள் இந்த வழித்தடத்தை பயன்படுத்துகிறார்கள்.


அந்த வகையில், தற்போது இந்த வழித்தடத்தில் பயணிகளின் பயன்பாடு 87 சதவீதமாக இருக்கிறது. புதிய பாதை செயல்படுத்தப்படும் போது அது 136 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதேபோல, பயணிகளின் கூட்ட நெரிசலும் குறையும். செங்கல்பட்டு வரையில் மின்சார ரெயில் சேவையை நீட்டிக்கவும் இது உதவும். தாம்பரம், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்பதூர் ஆகிய பகுதிகளில் அதிகரிக்கும் குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு இந்த திட்டம் வரப்பிரசாதமாக அமையும். மேலும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு பெரிதும் பயனளிக்கும். இதேபோல, இந்த வழித்தடத்தில் ஆண்டுக்கு ரூ.157 கோடி அளவில் வருவாய் ஈட்டும் வகையில் சரக்கு ரெயில் போக்குவரத்தும் கையாளப்படும்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%