மழைக்கால மின் விபத்துகளை தவிர்ப்பது எப்படி? தலைமை மின் ஆய்வாளர் விளக்கம்

மழைக்கால மின் விபத்துகளை தவிர்ப்பது எப்படி? தலைமை மின் ஆய்வாளர் விளக்கம்


சென்னை, அக்.23-


மழைக்கால மின் விபத்துகளை தவிர்ப்பது குறித்து தமிழக அரசின் தலைமை மின் ஆய்வாளர் விளக்கம் அளித்துள்ளார்.


தமிழக அரசின் தலைமை மின் ஆய்வாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-


மழைக்காலங்களில் மின் மாற்றிகள், மின் கம்பங்கள், மின் பகிர்வு பெட்டிகள் ஆகியவற்றின் அருகே செல்லக்கூடாது.


மழையாலும், பெரும் காற்றாலும் அறுந்து விழுந்த மேல்நிலை மின்சார கம்பி அருகே செல்லக்கூடாது. இதுதொடர்பாக அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.


மின்கம்பங்களை பந்தல்களுக்கு பயன்படுத்தக்கூடாது. அதன்மீது விளம்பர பலகைகளை கட்டக்கூடாது. மின் கம்பத்திலோ, அவற்றை தாங்கும் கம்பிகளிலோ கால்நடைகளை கட்டுவது கூடாது.


மின் மாற்றிகள் மற்றும் துணை மின் நிலையத்துக்காக போடப்பட்டுள்ள வேலியின் அருகில் சிறுநீர் கழிக்கக்கூடாது.


மின்சாரத்தால் ஏற்பட்ட தீயை தண்ணீர் கொண்டு கட்டுப்படுத்த வேண்டாம். தீ விபத்து மின்சாரத்தால் ஏற்பட்டது எனில் உடனடியாக மெயின் சுவிட்சை நிறுத்தி விட வேண்டும். இடி-மின்னலின்போது டி.வி., மிக்சி, கிரைண்டர், கணினி மற்றும் செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.


கான்கிரீட் கூரையிலான பெரிய கட்டிடம், வீடு போன்ற பெரிய கட்டிடம் மற்றும் மேற்கூரை உலோகத்தால் மூடப்பட்ட பஸ், கார், வேன் போன்ற வாகனங்களில் தஞ்சம் அடையுங்கள்.


குடிசை வீட்டிலோ, மரத்தின் அடியிலோ, பஸ் நிறுத்த நிழற்குடை யின் கீழ் பகுதியிலோ தஞ்சம் புகுதல் கூடாது.


மின்சார பெட்டியை சுற்றி தண்ணீர் தேங்கி நிற்கும்போது அதன் அருகில் செல்ல வேண்டாம். அதிக மின்பளு கொண்ட கருவிகளை இயக்கும்போது ரப்பர் பூட்ஸ் காலணிகளை அணிந்து கொள்ளுங்கள்.


பால்கனி பகுதி, மொட்டை மாடியில் திறந்த வெளியில் உள்ள மின்சாதனங்கள், பிளக் பாயிண்டுகள் மழைநீர் புகாத வகையில் மூடப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஈரமான கைகளால் மின் சுவிட்சுகள், மின் பலகைகளை ஒருபோதும் தொடக்கூடாது. மின்கம்பத்தை தாங்கும் கம்பிகள் அல்லது மின்கம்பத்தின் மீது கயிறு கட்டி துணிகளை காய வைப்பதை தவிர்க்க வேண்டும்.


மின் சாதனங்கள் உபயோகத்தில் இல்லாத பட்சத்தில் சுவிட்சை ‘ஆப்' செய்து வைக்க வேண்டும். மின்சார தீ விபத்துகளுக்கான தீயணைப்பான்களை மட்டுமே மின்சாதனங்களில் தீ விபத்து ஏற்படும் போது பயன்படுத்த வேண்டும்.


உலர்ந்த மணல், கம்பளி போர்வை, உலர்ந்த ரசாயன பொடி, கரியமில வாயு ஆகிய தீயணைப்பான்களை பயன்படுத்தலாம். சார்ஜர் ஏற்றும் போது செல்போனை பயன்படுத்தக்கூடாது.


சுவிட்ச் போர்டு, மின் மோட்டார், தண்ணீர் பம்பு போன்றவற்றின் மீது தண்ணீர், மழைநீர் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%