திருவள்ளுவர் தினத்தையொட்டி அமைச்சர் துரைமுருகன் உள்பட 13 பேருக்கு விருது: முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்
சென்னை, ஜன.
திருவள்ளுவர் தினத்தையொட்டி அமைச்சர் துரைமுருகன், இறையன்பு உள்பட 13 பேருக்கு விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
திருவள்ளுவர் திருநாளையொட்டி தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் தமிழ்மொழிக்கும், இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றி பெருமை சேர்த்த தமிழறிஞர்களுக்கு விருது வழங்கும் விழா, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று நடந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விருதுகள் வழங்கி கவுரவித்தார்.
அதன்படி 2026-ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது மு.பெ.சத்தியவேல் முருகனார், 2025-ம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது வக்கீல் அ.அருள்மொழி, அண்ணல் அம்பேத்கர் விருது சிந்தனைச் செல்வன், பேரறிஞர் அண்ணா விருது அமைச்சர் துரைமுருகன், பெருந்தலைவர் காமராசர் விருது எஸ்.எம்.இதயத்துல்லா, மகாகவி பாரதியார் விருது கவிஞர் நெல்லை ஜெயந்தா, பாவேந்தர் பாரதிதாசன் விருது கவிஞர் யுகபாரதி ஆகியோர் பெற்றனர்.
மேலும் தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது முன்னாள் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது சு.செல்லப்பா, முத்தமிழறிஞர் கலைஞர் விருது விடுதலை விரும்பி என மொத்தம் 10 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
இலக்கிய மாமணி விருது
அதன்தொடர்ச்சியாக, இந்த விழாவில் 2025-ம் ஆண்டுக்கான இலக்கிய மாமணி விருதுகள் 3 பேருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அதன்படி மரபுத் தமிழ் வகைப்பாட்டில் த.ராமலிங்கம், ஆய்வுத்தமிழ் வகைப்பாட்டில் சி.மகேந்திரன், படைப்புத்தமிழ் வகைப்பாட்டில் ரா.நரேந்திரகுமார் ஆகியோர் பெற்றனர்.
இந்த விருது பெற்ற 13 பேருக்கும் விருதுத்தொகையாக ரூ.5 லட்சம், ஒரு பவுன் தங்கப்பதக்கம், தகுதியுரை ஆகியவற்றை வழங்கியும் பொன்னாடை அணிவித்தும் சிறப்பு செய்யப்பட்டது.
விழாவில் அமைச்சர்கள் சாமிநாதன், சேகர்பாபு, மெய்யநாதன், மதிவேந்தன், எம்.எல்.ஏ.க்கள் எழிலன், எஸ்.எஸ்.பாலாஜி, பாபு, தலைமைச் செயலாளர் முருகானந்தம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் வைத்திநாதன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் அருள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?