சட்டசபை தேர்தல்: த.வெ.க. பிரச்சார பணிக்கு 10 பேர் கொண்ட குழு

சட்டசபை தேர்தல்: த.வெ.க. பிரச்சார பணிக்கு 10 பேர் கொண்ட குழு


சென்னை, ஜன.-


சட்டசபை தேர்தலை சந்திக்கும் வகையில், த.வெ.க. பிரச்சார பணிக்கு 10 பேர் கொண்ட குழுவை விஜய் உருவாக்கியுள்ளார்.


சட்டசபை தேர்தலை சந்திக்க த.வெ.க. தீவிரமாக இறங்கியுள்ளது. முதல்கட்டமாக தேர்தல் அறிக்கையை தயார் செய்ய 12 பேர் கொண்ட குழுவை விஜய் அமைத்து, உத்தரவிட்டு இருந்தார்.


இந்த குழு தற்போது தேர்தல் அறிக்கையை தயார் செய்யும் பணியில் இறங்கியுள்ளது. இதற்கிடையே தேர்தல் பிரச்சாரத்தை வேகமாக முன்னெடுக்கும் வகையில் தேர்தல் பிரச்சார குழு ஒன்றையும் விஜய் உருவாக்கியுள்ளார்.


இந்த குழுவில் 10 பேர் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் மாவட்டம் முழுவதும் பயணம் செய்து, தேர்தல் பிரச்சார திட்ட வியூகங்களை அமைக்கவும், பொதுக்கூட்டம் நடத்துவதற்கான இடத்தையும் தேர்வு செய்ய இருக்கிறார்கள்.


இதற்கான அறிவிப்பை விஜய் நேற்று வெளியிட்டார்.


இது தொடர்பாக த.வெ.க. தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-


தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை பொதுத்தேர்தலையொட்டி மாநில, மாவட்ட, தொகுதி அளவிலான தேர்தல் பிரசார பணிகளை மேற்கொள்ள, தேர்தல் பிரச்சார குழு அமைக்கப்படுகிறது. இந்த குழுவில், பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன்.


நிர்வாகிகள் பார்த்திபன், ராஜ்குமார், விஜய் தாமு, செல்வம், பிச்சை ரத்தினம் கரிகாலன், செரவு மைதீன் என்ற நியாஸ், கேத்ரின் பாண்டியன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.


இந்த குழுவினர் 234 தொகுதிகளிலும் ஆலோசனை கூட்டங்கள், பிரசார கூட்டங்கள் நடத்துவது தொடர்பான பணிகளை மேற்கொள்வார்கள். இந்த குழுவிற்கு தொண்டர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.


இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


விஜய் பிரசாரம்


எப்போது?


10 பேர் கொண்ட பிரசார குழு அமைக்கப்பட்ட போதிலும் தனது அடுத்தக்கட்ட பிரசார தேதி அறிவிப்பை விஜய் வெளியிடவில்லை. வரும் பிப்ரவரி 2-ந்தேதி கட்சியின் 3-ம் ஆண்டு தொடக்க நாளாகும். எனவே அந்த விழாவில் புதிய அறிவிப்புகளை வெளியிட விஜய் திட்டமிட்டுள்ளதாகவும், பிரசார வியூகங்கள் அந்த கூட்டத்தில் வகுக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.


கட்சியின் 3-ம் ஆண்டு தொடக்க விழாவை பொது வெளியில் நடத்தலாமா? அல்லது தனியார் கல்லூரி உள் அரங்கத்தில் நடத்தலாமா? என்பது குறித்து விஜய் தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.


இதற்கிடையே, கரூர் சி.பி.ஐ. வழக்கு தொடர்பாக இந்த மாதம் இறுதியில் விஜய் மீண்டும் டெல்லிக்கு செல்ல இருக்கிறார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%