news Breaking News
clock

தொழில் முதலீடுகளை ஈர்க்க ஸ்டாலின் வெளிநாடு பயணம்

தொழில் முதலீடுகளை ஈர்க்க ஸ்டாலின் வெளிநாடு பயணம்

சென்னை, ஆக. 11–


தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை பெறுவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 5வது முறையாக வெளிநாடு பயணம் மேற்கொள்ள உள்ளார்.


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை 1 டிரில்லியன் டாலர் என்ற அளவுக்கு உயர்த்த வேண்டும் என்ற இலக்குடன் தொழில் மேம்பாட்டு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார்.அதன் ஒரு பகுதியாக வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நாடுகளின் முதலீடுகளை தமிழ்நாட்டுக்கு பெற்று வருகிறார். இதுவரை அவர் 4 தடவை வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு உள்ளார்.


தற்போது 5-வது முறையாக வெளிநாடு செல்ல முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டு உள்ளார்.


இம்மாத இறுதியில்...


இங்கிலாந்து, ஜெர்மனி நாடுகளுக்கு இம்மாத இறுதியில் அல்லது செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் முதலமைச்சர் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என தெரிகிறது.


இந்த இரு நாடுகளிலும் பல்வேறு தொழில் அதிபர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேச இருக்கிறார். அப்போது தமிழகத்திற்கு தொழில் தொடங்க வருமாறு, அவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுக்கிறார்.


இந்தப் பயணத்தில் முதலமைச்சருடன், தலைமைச் செயலர் முருகானந்தம், நிதி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மற்றும் பல முக்கிய அரசு அதிகாரிகள் உடன் செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.


இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியில் மாணவர்கள் மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார். இங்கிலாந்து, ஜெர்மனி இரு நாடுகளிலும் சுமார் ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் முதலமைச்சர் பயணம் மேற்கொள்வார் என தெரிகிறது. விரைவில் முதலமைச்சரின் முழு பயண விவரம் குறித்த அறிவிப்பு வெளியாகும்.


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டுக்கு சென்றார். அங்கு ரூ.6 ஆயிரத்து 100 கோடி அளவுக்கு தொழில் ஒப்பந்தங்கள் செய்தார். இதன் மூலம் தமிழகத்தில் 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது. பிறகு 2023ம் ஆண்டு சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு சென்று ரூ.1,342 கோடி ஒப்பந்தங்கள் செய்தார். இது சுமார் 2 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு பெற்றுத் தரும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த ஆண்டு தொடக்கத்தில் ஸ்பெயின் நாட்டுக்கு சென்று ரூ.3 ஆயிரத்து 440 கோடிக்கு தொழில் ஒப்பந்தங்கள் மேற்கொண்டார். கடந்த ஆண்டு ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் அமெரிக்காவுக்கு சென்று ரூ.7 ஆயிரத்து 616 கோடிக்கு பல்வேறு தொழில் மேம்பாட்டு ஒப்பந்தங்கள் செய்து வந்தார். இது 11 ஆயிரத்து 516 பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் சூழலை கொடுத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News