நடப்பு ஆண்டில் 273 டி.எம்.சி. தண்ணீர் திறப்பு தமிழகத்துடன் காவிரி நீர் பிரச்சினை ஏற்படாது: கர்நாடக அரசு தகவல்
Oct 29 2025
17
பெங்களூரு, அக்.28-–
இந்த ஆண்டில் இதுவரை தமிழகத்துக்கு 273 டி.எம்.சி. காவிரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதாகவும், இதனால் தமிழகத்துடன் காவிரி நீர் பிரச்சினை ஏற்படாது என்றும் கர்நாடக அரசு கூறியுள்ளது.
தமிழ்நாடு-–கர்நாடகம் இடையே அடிக்கடி காவிரி நீரை பங்கிட்டு கொள்வதில் பிரச்சினை நீடித்து வருகிறது. இதில் சுப்ரீம் கோர்ட் தலையிட்டு ஆண்டுக்கு 177.25 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) தண்ணீர் தமிழகத்திற்கு வழங்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. ஆனால் கர்நாடகத்தில் மழை பொழிவு குறைவாக இருக்கும் சமயத்தில் காவிரி நதிநீர் பிரச்சினை பூதாகரமாக கிளம்பி வருகிறது.
இந்த பிரச்சினைக்கு தீரவு காண காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த ஆணையம் இரு மாநில நீர்ப்பாசனத் துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து கர்நாடக அணைகளில் உள்ள நீர் இருப்பை பொறுத்து தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்து விட்டு வருகிறது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை காரணமாக கர்நாடக அணைகள் நிரம்பின.
இதையடுத்து தமிழகத்திற்கு காவிரியில் அதிகளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து கர்நாடக நீர்ப்பாசனத்துறையை தன்வசம் வைத்துள்ள துணை முதல்-மந்திரிடி.கே.சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
நடப்பாண்டில் தமிழ்நாட்டிற்கு வழக்கமாக வழங்க வேண்டிய நீரை விட 2 மடங்கு தண்ணீரை திறந்து விட்டுள்ளோம். அதனால் தமிழகத்துடன் தண்ணீர் பிரச்சினை ஏற்படாது.
தற்போது காவிரி படுகையில் உள்ள கபினி, கே.ஆர்.எஸ்., ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளில் 115 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு ஆண்டுக்கு 177.25 டி.எம்.சி நீர் திறக்க வேண்டும்.
கடந்த ஜூன் முதல் இதுவரை தமிழ்நாட்டிற்கு 135 டி.எம்.சி. நீர் திறந்திருக்க வேண்டும்.
ஆனால் தற்போது வரை தமிழ்நாட்டிற்கு 273.426 டி.எம்.சி. நீர் திறந்து விட்டுள்ளோம். அதாவது 135.412 டி.எம்.சி. நீர் கூடுதலாக திறந்து விடப்பட்டுள்ளது. அதனால் வரும் நாட்களில் தண்ணீர் பற்றாக்குறை இருக்காது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?