பக்கிங்ஹாம் கால்வாயில் தூர்வாரும் பணி: அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு
சென்னை, அக்.26–
வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ராயபுரம் மண்டலம், அண்ணா பிள்ளை தெரு, வுட் வார்ப் பகுதியில் உள்ள பக்கிங்ஹாம் கால்வாயில் மழைநீர் தடையின்றி செல்ல ஏதுவாக மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணியினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, கால்வாயில் அகற்றப்படும் கழிவுகளை உடனுக்குடன் அப்புறப்படுத்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
முன்னதாக, அமைச்சர், வுட் வார்ப் பகுதிக்குட்பட்ட அனைத்து தெருக்களிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள மழைநீர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் சுகாதார நடவடிக்கைகள் தொடர்பாக பார்வையிட்டு, அப்பகுதியில் வசிக்கும் மக்களிடம் கலந்துரையாடி தேவைகள் குறித்து கேட்டறிந்து, அதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதனைத்தொடர்ந்து, சென்னை மாநகரில் மழை காரணமாக சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்கள் குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு மேயர் பிரியா பதிலளித்தார்.
சென்னை மாநகராட்சியில் அதிக மழைப்பொழிவு ஏற்படுகின்ற போது சாலைகளில் இந்த குழிகள் ஏற்படுகின்றது. ஒவ்வொரு வார்டு வாரியாக இதற்காக நிதி ஒதுக்கீடு செய்து, எத்தனை இடத்தில் குழிகள் இருந்தாலும் உடனடியாக அவற்றை நிவர்த்தி செய்து சீர்செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. மழை முடிந்த பிறகு சாலை அமைக்கும் பணிகள் ஜனவரி மாதம் முதல் தொடங்கப்படும் என்று மேயர் கூறினார்.
2 ஆயிரம் குழிகள்
எத்தனை சாலைகள் பாதிப்படைந்துள்ளன கண்டறியப்பட்டுள்ளது என்ற செய்தியாளர் கேட்ட கேள்விக்கு மேயர் பதிலளிக்கையில், கிட்டத்தட்ட 2,000 பகுதிகளில் உள்ள சாலைகளில் குழிகள் கண்டறியப்பட்டுள்ளது. வார்டு வாரியாக அந்தந்த நாட்களிலே அவற்றை சீர்செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு கிட்டத்தட்ட 206 பகுதிகளில் தாழ்வான இடமாக கண்டறியப்பட்டுள்ளது. இவ்விடங்களில் மழைநீரினை வெளியேற்றுவதற்காக 100 ஹெச்பி திறன் கொண்ட மோட்டார் பம்புகள் பொருத்தப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண மையங்களில் சமுதாய நலக்கூடமோ அல்லது பள்ளிக்கூடங்களிலோ தங்க வைக்கப்படும் பொதுமக்களுக்கு தேவையான பாய், தலையணை, அரிசி, போர்வை, அவர்களுக்கு தேவையான உணவு அனைத்தும் மாநகராட்சியின் சார்பாக வழங்கப்படும். கூடுதலாக இந்த மையங்களில் மருத்துவ முகாம்களும் அமைக்கப்படுகிறது.
மழைநீர் வடிகால்
பணி முடிந்தது
முதலமைச்சரால் கடந்த 2022–ம் ஆண்டிலிருந்து மழைநீர் வடிகால் பணிகள் கட்டும் பணிகள் முக்கியமான பணிகளாக தொடர்ந்து நடைபெற்று, சிறப்பாக பணிகள் முடிவுற்றுள்ளது. கடந்த ஆண்டும் குறிப்பிட்ட பகுதிகளில் சாலையில் நீர் தேங்குகின்றது என்று தெரிவித்திருந்தார்கள். இரவு நேரத்தில் நீர் தேங்கி இருந்தாலும், காலையிலே மாநகராட்சி ஊழியர்களை கொண்டு அந்த நீர் வெளியேற்றப்பட்டது. இதே சென்னை மாநகராட்சியில் இதற்கு முன்பாக 10 நாட்கள் 15 நாட்கள் மழைநீர் தேக்கம் ஏற்பட்டிருந்த சூழல் இருந்த நிலையில், உடனடியாக மழைநீரை வெளியேற்றுகின்ற சூழல் மற்றும் உட்கட்டமைப்புகள் முதலமைச்சரால் உருவாக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரால் பேருந்து சாலைகளில் உள்ள மழைநீர் வடிகால்களில் கட்டமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை, நிறைய கால்வாய்கள் இருக்கக்கூடிய பகுதி, பொதுமக்களும் நீர்நிலைப் பகுதிகளில் நிறைய ஆக்கிரமிப்புகளில் இருக்கின்றார்கள். அவர்கள் இருக்கக்கூடிய சூழலில் இன்றைக்கு கிட்டத்தட்ட 15 சென்டிமீட்டர் வரைக்கும் மழை பொழிந்தாலும் அவை உடனே வெளியேறுவதற்கான சூழல் நிலவுகிறது.
நிஜாம் புயல் போன்று 40 சென்டிமீட்டர் அல்லது அதற்குமேல் மழை பொழிந்தால், மழைநீரினை வெளியேற்றுவதற்காக மாநகராட்சியின் சார்பில் பல இடங்களில் மோட்டார் பம்புகள் பொருத்தப்பட்டுள்ளது. அதன் மூலமாக மழைநீரினை உடனடியாக வெளியேற்றுவதற்கான பணிகளும் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு மேயர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, வடக்கு வட்டார துணை ஆணையாளர் கட்டா ரவி தேஜா, மண்டலக் குழுத் தலைவர் பி.ஸ்ரீராமுலு, மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.