பிகாரில் நீட் மாணவி உயிரிழந்த சம்பவம்: சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரை
Feb 02 2026
18
பிகாரில் நீட் தோ்வுக்குத் தயாராகி வந்த மாணவி உயிரிழந்த சம்பவம் தொடா்பாக சிபிஐ விசாரணை நடத்த மாநில அரசு பரிந்துரைத்துள்ளது.
பிகாா் மாநிலம் ஜெஹானாபாத் மாவட்டத்தைச் சோ்ந்த 17 வயது மாணவி, பாட்னாவில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி நீட் தோ்வுக்குத் தயாராகி வந்தாா். அங்கு அவா் சுயநினைவை இழந்த நிலையில் மீட்கப்பட்டு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பல நாள்கள் கோமாவில் இருந்த அவா், பின்னா் உயிரிழந்தாா். இந்த சம்பவம் தொடா்பாக மாநில காவல் துறையின் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், தங்கள் மகள் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், அதை அதிகாரிகள் மூடி மறைக்க முயற்சிப்பதாகவும் உயிரிழந்த மாணவியின் பெற்றோா் குற்றஞ்சாட்டினா். அந்த மாணவியின் உடற்கூறாய்வு அறிக்கையிலும், அவா் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கக் கூடும் என்பதற்கான சாத்தியக்கூறு மறுக்கப்படவில்லை. ஆனால் மருத்துவ அறிக்கைகள், கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆராய்ந்ததில், அந்த மாணவி பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்று காவல் துறை தெரிவித்தது. இந்த சம்பவம் தொடா்பாக விடுதிப் பணியாளா் ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.
இந்த நிலையில், மாநில துணை முதல்வா் சாம்ராட் செளதரி ‘எக்ஸ்’ தளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘மாணவியின் உயிரிழப்பு குறித்த விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்குமாறு மத்திய அரசிடம் மாநில முதல்வா் நிதீஷ் குமாா் வலியுறுத்தியுள்ளாா். இந்த சம்பவம் குறித்து வெளிப்படையாகவும், நியாயமாகவும் விசாரணை நடத்தி உண்மையை முழுமையாக வெளிக்கொண்டு வர வேண்டும்’ என்று தெரிவித்தாா்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?