புதுடெல்லி: தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழை வளர்ப்பதற்காக பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது. தமிழ்நாட்டுக்கு வெளியேயும் தமிழ் பாடங்கள் நடத்த குறிப்பிட்ட தொகை வைப்பு நிதியாக அளிக்கப்பட்டுள்ளது.
இதன் கீழ் அசாம், உ.பி., ஆந்திரா, கேரளா, ஒடிசா போன்ற மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் போதிக்கப்படுகிறது. கடந்த 1977- 78 நிதியாண்டில் தலா ரூ.3 லட்சம் நிதியுதவியுடன் வாராணசியின் பழமையான 3 பல்கலைக்கழகங்களில் தமிழ் பாடங்கள் போதிக்க முடிவு செய்யப்பட்டது. இவற்றில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் (பிஎச்யு) மட்டுமே சில ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழை போதிக்கிறது.
சம்பூர்ணானந்த் சம்ஸ்கிருதப் பல்கலைக்கழகம், காசி வித்யாபீடம் ஆகியவற்றுக்கு நிதி அளித்தும் பலன் இல்லை. ஆந்திராவின் குப்பம் நகரின் திராவிடன் பல்கலைக்கழகம், திருப்பதி ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்திலும் தமிழ் பேராசிரியர்களுக்கான 4 பணியிடங்கள் காலியாகவே உள்ளன.
இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டிடம் தமிழ் வளர்ச்சித்துறை முன்னாள் இயக்குநரும், தமிழ் வளர்ச்சிக் கழகத் தலைவருமான கணையாழி மா.இராசேந்திரன் கூறுகையில், "சென்னைப் பல்கலைக்கழகத்தில் இந்தி, சம்ஸ்கிருதம் உள்ளிட்ட வடமொழிகளுக்காக தமிழ்நாடு அரசே செலவிடுவது போல், பிற மாநிலங்களில் தமிழ் போதிக்க அந்தந்த மாநில அரசுகளே முன்வர வேண்டும்.
மேலும், காசி தமிழ்ச் சங்கமம் 4.0-வில் வாராணசி பள்ளிகளில் பிரதமர் நரேந்திர மோடி யோசனையின் பேரில் குறுகிய நாட்களுக்காக தமிழ் மொழி கற்பிக்கப்பட்டது. கூடுதலாக ஏற்கெனவே உ.பி. உள்ளிட்ட மாநில உயர்கல்வி நிலையங்களில் போதிக்கப்பட்ட தமிழுக்கான தடையை பிரதமர் மோடி தலையிட்டு நீக்கலாம்" என்றார்.
சுதந்திரம் அடைந்த பிறகு நாட்டின் மத்திய பல்கலைக்கழகங்களிலும் தமிழ்ப் பாடங்கள் போதிக்க மத்திய அரசு முடிவு எடுத்தது. இதன் பலனாக, உபி., பஞ்சாப், டெல்லி மற்றும் கேரளாவின் மத்திய பல்கலைக்கழகங்களில் நவீன இந்திய மொழிகள் துறை எனும் பெயரில் தமிழ் உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளுக்காகவும் துறைகள் தொடங்கப்பட்டு செயல்படுகின்றன.
ஆனால் பிரயாக்ராஜின் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் இன்னும் தமிழ் பேராசிரியர் பணிக்கு எவருமே அமர்த்தப்படவில்லை. மத்திய அரசின் டெல்லி பல்கலைக் கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரியில் தலா 2 பேராசிரியர்கள் ஓய்வு பெற்ற பிறகு அந்த இடங்களும் நிரப்பப்படவில்லை. இப்பிரச்சினையில் அப்பல்கலை.யில் பணியாற்றும் தமிழர்கள் மற்றும் தமிழ்ப் பேராசிரியர்கள் டெல்லி பல்கலை துணை வேந்தரிடம் 3 மாதங்களுக்கு முன் அளித்த மனு மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.