பிரம்மபுத்திரா நதியின் கீழ் இரட்டை சுரங்கப்பாதை: ரூ.18,662 கோடி திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
புதுடெல்லி: அசாமின் பிரம்மபுத்திரா நதியின் கீழ் ரூ.18,662 கோடி செலவில் இரட்டை சுரங்கப் பாதைகள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. ஒரு சுரங்கப் பாதையில் ரயில்களும், மற்றொரு சுரங்கப் பாதையில் வாகனங்களும் இயக்கப்பட உள்ளன.
அசாம் மாநிலம் கோஹ்பூரில் இருந்து நுமலிகர் வரை பிரம்மபுத்திரா நதியின் கீழ் 32 மீட்டர் ஆழத்தில் இரட்டை சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட உள்ளன. இவை 33.7 கி.மீ. நீளம் கொண்டதாகவும் 4 வழிப் பாதையாகவும் இருக்கும்.
திட்டத்தின் மதிப்பீடு ரூ.18,662 கோடி. கோஹ்பூர் முதல் நுமலிகர் வரையிலான சுரங்கப் பாதையில் ஆங்கேங்கே செயற்கை தீவுகளும் உருவாக்கப்பட உள்ளன. பிரம்மபுத்திரா சுரங்கப் பாதை திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதுதொடர்பாக அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
கடந்த 2021-ம் ஆண்டில் பிரம்மபுத்திரா சுரங்கப் பாதை திட்டம் தயாரிக்கப்பட்டது. இதற்கு மத்திய அமைச்சரவை தற்போது ஒப்புதல் வழங்கி உள்ளது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு அசாம் மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
கோஹ்பூரில் இருந்து நுமலிகர் வரை 240 கி.மீ. தொலைவை சாலை மார்க்கமாக கடந்து செல்ல 6 மணி நேரமாகிறது. பிரம்மபுத்திரா நதியின் அடியில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டால் 20 நிமிடங்களில் கோஹ்பூரில் இருந்து நுமலிகர் சென்றடைய முடியும்.
அசாமில் பிரம்ம புத்திரா நதியின் மேலே ஏற்கெனவே 3 ரயில்வே மேம்பாலங்கள் கட்டப்பட்டு உள்ளன. முதல் முறையாக ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தால் அசாம் மட்டுமன்றி ஒட்டுமொத்த வடகிழக்கும் பலன் அடையும். வர்த்தகம், சுற்றுலா மேம்படும். சரக்கு, பயணிகள் போக்குவரத்து செலவு கணிசமாக குறையும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 1962-ம் ஆண்டு போரின்போது பிரம்மபுத்திரா நதியின் வழியாகவே சீன ராணுவம் இந்திய பகுதிகளுக்குள் ஊடுருவியது. பாதுகாப்பு ரீதியாக இந்த நதி மிகவும் முக்கியமானது. தற்போது அசாம், அருணாச்சல பிரதேசத்தில் பிரம்மபுத்திரா நதியின் மீது 5 மேம்பாலங்கள் உள்ளன. போர் மூண்டால் மேம்பாலங்கள் தகர்க்கப்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே பிரம்மபுத்திரா நதியின் கீழே சுரங்கப் பாதை அமைக்கப்படுகிறது.
நகர்ப்புற சவால் நிதி.. - பிரதமர் மோடி தலைமையில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சரவை கூடி ஆலோசனை நடத்தியது. இதில் நாட்டில் நகர்ப்புற மேம்பாடு, அடிப்படைக் கட்டமைப்பு வசதித்திட்டங்களுக்காக 16 லட்சம் கோடியை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஒதுக்கீடு செய்ய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதில் ரூ.1 லட்சம் கோடி நகர்ப்புற சவால் நிதிக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.