பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஐபிஎல் 2026 போட்டிகளை நடத்த கர்நாடக அரசு அனுமதி
Feb 15 2026
14
பெங்களூரு: எதிர்வரும் ஐபிஎல் 2026 சீசனுக்கான போட்டிகளை பெங்களுருவில் உள்ள எம்.சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடத்த கர்நாடக மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. இருப்பினும் இதற்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
“விளையாட்டு மற்றும் ரசிகர்களின் ஆர்வம் காரணமாக எம்.சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகள் நடத்துவதற்கு அனுமதி வழங்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதில் மக்களுக்கான பாதுகாப்பு சார்ந்த விவகாரத்தில் முக்கியத்துவம் அளிக்கப்படும்.
நீதிபதி குன்ஹா அளித்துள்ள அறிக்கையின் அடிப்படையில் டிக்கெட் வழங்குவது முதல் பார்வையாளர்களுக்கான பல்வேறு விதிமுறைகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். பொறுப்புணர்வுடன் முன்னோக்கி செல்கிறோம்” என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டிகளை மீண்டும் சின்னசாமி மைதானத்தில் நடத்த மாநில அரசு அனுமதி அளித்துள்ளதன் மூலம் நடப்பு சாம்பியனான ஆர்சிபி அணி இந்த சீசனில் ஹோம் போட்டிகளை இங்கு விளையாடலாம். வழக்கமாக நடப்பு சாம்பியனின் சொந்த மைதானத்தில் ஐபிஎல் சீசனுக்கான முதல் போட்டி, குவாலிபையர் 2 மற்றும் இறுதிப் போட்டியை நடத்தும் உரிமை வழங்கப்படும். அந்த வகையில் இந்த முறை அந்த வாய்ப்பை சின்னசாமி மைதானம் பெற்றுள்ளது.
கடந்த சீசனில் ஆர்சிபி அணி சாம்பியன் பட்டம் வென்றது. முதல் முறையாக அந்த அணி பட்டம் வென்றதை தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூன் 4-ம் தேத பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையொட்டி மைதானத்துக்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் இறந்தனர். இதைத் தொடர்ந்து சின்னசாமி மைதானத்தில் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளையும் நடத்த கர்நாடக மாநில அரசு தடைவிதித்தது.
தொடர்ந்து மைதானத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய சிறப்பு குழு ஒன்றையும் மாநில அரசு நியமித்தது. இந்த சூழலில் தற்போது மீண்டும் ஐபிஎல் போட்டிகளை பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடத்த அனுமதி அளித்துள்ளது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?