பெத்த மனசு

பெத்த மனசு


     சுதாகர் அதிகாலையிலேயே எழுந்து ரெடியாகி விட்டான்.

மனைவி ராகினி இன்னும் தூங்கிக் கொண்டே இருந்தாள்.

இத்தனை நாள் சரி... இன்றைக்காவது கொஞ்சம் சீக்கிரம் எழுந்திருக்கக் கூடாதா?

கண்ணை மூடியபடியே படுத்து இருப்பாளே ஒழிய எழமாட்டாள்.

அவளுடைய சுபாவம் அப்படி.


      சுதாகருக்கு இன்று பிறந்தநாள்

என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும். அவளுடைய பிறந்தநாளை மட்டும் ரொம்ப விமரிசையாகக் கொண்டாடுவாள்.ஊரில் இருக்கும் அவளுடைய அப்பா அம்மா தங்கை என்று எல்லாரையும் வரவழைத்து குதூகலமாகக் கொண்டாடுவாள்.           


          "ராகினி சீக்கிரம் ரெடியாகு.

கோயிலுக்குப் போயிட்டு அப்படியே ஹோட்டலில் டிபன் சாப்பிட்டுட்டு வந்துடலாம்" என்று சுதாகர் சொன்னதும் தான் படுக்கையை விட்டு எழுந்தாள்.


        இருவரும் காரிலேயே கோயிலுக்குப் புறப்பட்டார்கள். 

 போகும் வழியில் அந்த முதியோர் இல்லம் அவர்கள் கண்ணில் பட்டது.


      "ராகினி! முதலில் முதியோர் இல்லத்துக்கு போயிட்டு அப்புறமா கோவிலுக்கு போகலாம் "என்று சுதாகர் சொன்னதும் கோபமானாள் ராகினி." உனக்கு பிடிக்கலைன்னா

நீ காரிலேயே உட்கார்ந்துக்கோ.

நான் போயிட்டு பத்து நிமிஷத்துல திரும்பி வந்துடுறேன்" என்றான் சுதாகர்.


      கல்யாணமான புதிதில் சுதாகர், அவனுடைய பெற்றோர், ராகினி அனைவரும் ஒரே வீட்டில் தான் இருந்தார்கள். சுதாகரின் பெற்றோர்களை காரணமே இல்லாமல் ராகினிக்கு பிடிக்காமல் போனது. மாமியாரிடம் அடிக்கடி பிரச்சினை செய்து அவளுடைய பிறந்த வீட்டுக்குப் போய் தங்கி விடுவாள்.

இது கடைசியில் எங்கே போய் முடியுமோ என்று நினைத்த சுதாகரின் அப்பா

"நாங்கள் முதியோர் இல்லத்திற்கு

போயிடறோம் . எங்களால் உன்னுடைய நிம்மதியும் சந்தோஷமும் கெட வேண்டாம். 

இது நாங்கள் எடுத்த சொந்த முடிவு. இதற்காக ராகினியை கோபித்துக் கொள்ளாதே"என்று சொல்லிவிட்டு சென்று விட்டனர்.


      'இன்று எப்படியாவது பெற்றோரைப் பார்த்து அவர்களது ஆசீர்வாதத்தைப் பெற்று விட வேண்டும் ' என்று மனதுக்குள் நினைத்தவாறே சென்ற சுதாகரைப் பார்த்த முதியோர் இல்ல நிர்வாகி "உங்க பேரண்ட்ஸ் இப்போதான் இந்தப் பக்கமா போனாங்க "என்று சொல்லவும் 

அங்கே சென்றான் சுதாகர்.


    அங்கே இருந்த சிறிய கோவிலில் அவனது அப்பாவும் அம்மாவும்

அர்ச்சகரிடம் அவனது நட்சத்திரத்தையும் ராசியையும் சொல்லி "இன்னைக்கு எங்க பையனோட பிறந்தநாள். அவன் இன்னும் பல்லாண்டுகள் நோய்நொடி இன்றி நீடுழி வாழணும்னு அவன் பேர்ல ஒரு அர்ச்சனை பண்ணுங்க "என்று சொல்லிக் கொண்டிருந்தனர்.


    பார்த்துக் கொண்டிருந்த சுதாகரின் கண்கள் கலங்கின. 



மு.மதிவாணன்

குபேந்திரன் நகர்

அரூர் 636903

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%