மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் விமான விபத்தில் பலி 2 விமானிகள், பாதுகாப்பு அதிகாரி, உதவியாளர் உயிரிழந்த பரிதாபம்

மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் விமான விபத்தில் பலி  2 விமானிகள், பாதுகாப்பு அதிகாரி, உதவியாளர் உயிரிழந்த பரிதாபம்


 



மும்பை, ஜன. –


மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அஜித்பவார் நேற்று காலை விமான விபத்தில் பலியானார்.


அவருடன் விமான கேப்டன் சுமித் கபூர் மற்றும் துணை கேப்டன் ஷாம்பவி பதக், விமானப் பணிப்பெண் பிங்கி மாலி, பாதுகாப்பு அதிகாரி விதித் ஜாதவ் ஆகியோரும் பலியானார்கள்.


நெஞ்சை உலுக்கும் இந்த விபத்து பாராமதி விமான நிலையத்தில் இன்று காலை நடந்தது. விபத்து பற்றிய தகவல் கேட்டு நாடே அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது.


தேர்தல் பிரச்சாரத்துக்காக அஜித்பவார் பயணித்த இந்த விமானம், தரையிறங்கும்போது ஓடு பாதையிலிருந்து விலகி ஓடி தரையில் மோதி இரண்டாகப் பிளந்து தீப்பிடித்து எரிந்தது.


இந்த உருக்கமான சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-


மகாராஷ்டிர மாநிலத்தில் பாரதீய ஜனதா கட்சி (பா.ஜ.க) தலைமையில் அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ், ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. பா.ஜ.க.வை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராக உள்ளார். துணை முதலமைச்சர்களாக அஜித்பவார், ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் உள்ளனர்.


இந்த நிலையில் மாநிலத்தில் தற்போது பல்வேறு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடந்து வருகிறது. இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் சிறிய வகை விமானங்களை பயன்படுத்தி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்களில் பங்கேற்று வருகிறார்கள்.


அஜித்பவாரின் சொந்த தொகுதியான பாராமதியிலும் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து இன்று பாராமதி தொகுதியில் 4 இடங்களில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக அஜித்பவார் இன்று காலை 8 மணியளவில் மும்பையில் இருந்து லியர் ஜெட் 45 என்ற சிறிய ரக விமானத்தில் (வி.டி-எஸ்.எஸ்.கே.) பாராமதிக்கு புறப்பட்டார். அவருடன் 2 பாதுகாப்பு அதிகாரிகள், 2 விமான ஊழியர்கள் உள்பட 5 பேர் சென்றனர்.


கொழுந்துவிட்டு எரிந்தது


இன்று காலை 8.46 மணியளவில் அந்த சிறிய ரக விமானத்தை விமானி, பாராமதி விமான நிலையத்தில் 11-வது ஓடுபாதையில் தரை இறக்க முயற்சித்தார். அப்போது விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி ஓடி தரையில் மோதி 2 ஆக உடைந்து நொறுங்கியது. விமானம் மோதிய வேகத்தில் தீப்பிடித்துக் கொண்டது. இதனால் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. உடனடியாக தீயணைப்பு படையினரும், மீட்பு படையினரும் அங்கு விரைந்தனர். அவர்கள் தீயை அணைத்து அஜித்பவார் உள்பட 5 பேரையும் மீட்டு அங்கிருந்த ஆஸ்பத்திரிக்கு அவசரம் அவசரமாகக் கொண்டு சென்றனர். அங்கு அஜித்பவார் மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.


இதே போல் விமானத்தில் பயணித்த பாதுகாவலர்கள் 2 பேர், விமானிகள் 2 பேர் ஆக மொத்தம் 5 பேரும் உயிரிழந்ததாக விமானப் போக்குவரத்து அமைச்சகம் உறுதி செய்தது.


இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பெரும் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.


சரத்பவார் அண்ணன் மகன்


நாட்டின் மூத்த அரசியல் தலைவரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனருமான சரத்பவாரின் அண்ணன் அனந்த்ராவ் பவாரின் மகன் அஜித்பவார் (வயத் 67). சரத்பவாரின் அரசியல் வாரிசு யார் என்பதில் ஏற்பட்ட மோதலால் அஜித்பவார் தனித்து செயல்பட்டார். கட்சிக்குள் ஏற்பட்ட பிளவு காரணமாக சரத்பவாரை விட்டு தனது ஆதரவாளர்களுடன் பிரிந்து சென்றார். நீதிமன்றத்தை நாடி தேசியவாத காங்கிரஸ் கட்சியைக் கைப்பற்றினார்.மகாரஷ்டிராவில் பா.ஜ.க. கூட்டணி அரசில் 3-வது பெரிய கட்சியாக அஜித்பவாரின் கட்சி உள்ளது.


அஜித்பவார் 2010 முதல் 2014 வரையிலும், 2019 முதல் தற்போது வரையிலும் துணை முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். மாநிலத்தின் நிதித்துறை, மின்சாரம் உள்ளிட்ட முக்கிய துறைகளின் அமைச்சராகவும் அஜித்பவார் இருந்துள்ளார். எதிர்க்கட்சித்தலைவர் பதவியையும் வகித்துள்ளளார்.


முதல்முறையாக பாராமதி மக்களவை உறுப்பினராக 1991ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆண்டு, மக்களவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, பாராமதி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு தொடர்ந்து 1995, 1999, 2004, 2009, 2014, 2019, 2024 ஆகிய சட்டசபை தேர்தல்களில் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். 1991, 1995 தேர்தல்களில் மட்டும் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கினார்.


3 நாள்கள் துக்கம் அனுசரிப்பு


மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவார் மறைவையொட்டி, மாநிலம் முழுவதும் இன்று பொது விடுமுறை அளித்து முதல்வர் தேவேந்திர பட்னாவீஸ் உத்தரவிட்டுள்ளர்.


மேலும், மாநிலம் முழுவதும் மூன்று நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.


செய்தியாளர்களை சந்தித்த பட்னாவீஸ் பேசியதாவது:–


மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் விமான விபத்தில் உயிரிழந்தார். மாநிலத்தில் சோகமான சூழல் நிலவுகிறது. அவரைப் போன்ற ஒரு தலைவரை இழந்தது ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். தனிப்பட்ட முறையில் அவர் எனக்கு நல்ல நண்பராக இருந்தார். பல சவால்களை நாங்கள் ஒன்றாக சந்தித்தோம். மகாராஷ்டிராத்தின் வளர்ச்சிக்கு அவர் பங்களித்து வந்த நேரத்தில், அவரது அகால மரணம் ஒரு பேரிழப்பாகும். நாங்கள் அவரது குடும்பத்தினருடன் துணை நிற்கிறோம். நானும் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவும் இன்று பாராமதிக்குச் செல்லவுள்ளோம். இந்தச் சம்பவம் குறித்து பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரிடம் தெரிவித்தேன், அவர்களும் தங்கள் வருத்தத்தைத் தெரிவித்துள்ளனர் எனக் குறிப்பிட்டார்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%