வானம் வெளுத்திருந்தது. இரண்டு நாட்கள் பெரிய மழை இல்லை எனினும், சூரியன் இல்லாத வானம் ஒளியிழந்து ஆங்காங்கே இருளைப் பரப்பியிருந்தது.
ஞாயிறு விடுமுறைக்குப் பின் வரும் திங்கட்கிழமை காலையைப் போல. ஞாயிறு ஆட்டம் திங்களை உம்மென்று ஆக்கும். அதுபோல, மழை இல்லை எனினும், சூரியன் இன்னும் பளிச்சென்று வரவில்லை. மழையின் பாதிப்பு சாலையில் ஆங்காங்கே இருந்தது.
தன் வண்டியை சரியான இடத்தில் ஓரமாக நிறுத்திவிட்டு உணவு உண்பதற்காக ஓட்டலுக்குள் செல்ல முற்பட்டான் ராஜராஜன் என்கிற ராஜன். "ராஜன்" னே பேர் வெச்சுருக்கலாமே! எதுக்கு "ராஜராஜன்" னு சொல்லிட்டு என்கிற "ராஜன்" னு கேப்பீங்க. கதைதானே! விட்ருங்க.
அப்போது ஓட்டலின் வாசலில் ஒருத்தி, "ஐயா! ஏதாச்சும் கொடுத்துட்டு போங்கய்யா! " என்றாள்.
பிச்சை என்ற பேரில் சிலபேர் அதட்டிக் கேட்பார்கள்; கொடுக்காவிடில் திட்டுபவர்களும் உண்டு. ஆனால், இவள் அப்படிப் பட்டவளாய்த் தெரியவில்லை. இவள் குரலில் கெஞ்சல் ஒன்றுமில்லை. அமைதியாய்த்தான் கேட்டாள். ஏனோ அவள் முகத்தில் தெளிவு அளவின்றி இருப்பதாய் உணர்ந்தான் ராஜன். அந்த அமைதி அவனை வெகுவாகக் கவர்ந்தது.
அவளை இன்னும் உற்று நோக்க நினைத்தான். ஆனால் பார்ப்பவர்கள் மட்டுமன்றி அவளும் தன்னைத் தவறாக எண்ணக்கூடும். என்ன செய்வது என்று யோசித்தான் அவன். இப்போ "ராஜன்" றதையும் விட்டாச்சு. இனிமே "அவன்"தான் அவன் பெயர் இதில்.
"சரி! வாம்மா! சாப்(ப)டதான காசு கேட்ட? வா உள்ள உக்காந்து சாப்(ப)டலாம்" என்றான் அவன்.
"நானா? உள்ளயா? அதெல்லாம் சரி வராதுங்கய்யா... நீங்க போய் சாப்டுங்க." என்றாள் அவள்.
ஏம்மா! இதுல என்ன இருக்கு? உனக்கும் எனக்கும் சேர்த்து காசு நான் கொடுக்கப்போறேன். சாப்(ப)டறதுல உனக்கு என்ன கஷ்டம்? என்றான் அவன்.
"இல்லங்கய்யா! இப்படி வாசல்ல கொடுக்கறவங்க காசுல நா வெளிய சாப்டுப்பேன். உள்ள போய்லாம் சாப்டு பழக்கமே இல்லீங்கய்யா!" என்றாள்.
"அட! பரவால்லம்மா வா! இன்னிக்கு ஒருநாள் வந்து சாப்(பு)டு, நா இருக்கேன். என் கூடயே உக்கா(ர்)ந்து சாப்(பு)டு" என்றான் அவன்.
"அவன் அழைத்த விதம் ஏனோ அவளுக்கும் பிடித்திருந்தது. சரிங்கய்யா! வரேன்" என்றாள் அவள். அட! இவளுக்குப் பேரே வக்கலியே" ன்னு கேப்பீங்க. அவள் பெயர் "அவள்" தான் இதில்.
"உனக்கு என்ன வேணுமோ சொல்லுமா! எனக்கு வேண்டியதை நா ஆர்டர் சொலிக்கறேன்" என்றான் அவன். "சரிங்கய்யா! என்றாள் அவள்.
அவர்கள் கேட்டவை வந்தது. இருவரும் சாப்(பிட்)டு முடித்தார்கள். அதுவரை இவனும் வாய் திறக்கவில்லை; அவளும் வாய் திறக்கவில்லை. உண்ண அல்ல. பேச!
"வேற ஏதாவது?...." என்று இழுத்தான் அவன். "பேசணுமாய்யா?"... என்றாள் அவள்.
"இல்லம்மா! அப்பிடி கேக்கல... சாப்(ப)ட வேற ஏதாவது?... அந்த அர்த்தத்(து)ல" ன்னு அவன் இழுக்கச்ச, இல்லீங்கய்யா! இதுவே அதிகம். நா ரொம்ப சாப்(ப)ட மாட்டேன். இன்னிக்கு ஏனோ! நீங்க மதிப்பா கூப்டதும், நா மதிப்பா வந்துட்டேன். நன்றிங்கய்யா!" என்றாள் அவள் மதிப்பா.
"ஒண்ணு கேக்கட்டுமா?" என்றான் அவன். புரிதுங்கய்யா! இப்டி பிச்சை எடுக்கறதுக்கு பதிலா உழைச்சு சாப்(ப)டாலாமே ன்னு கேப்பீங்க ன்னு தெரியும். எனக்கு பிச்சை எடுக்கறதுதான் பிடிச்சுருக்கங்கய்யா!
"நா அந்த அர்த்தத்(து)ல கேக்கலாமா!. ஒரு நாளைக்கு எவ்ளோ வரும் பிச்சைல?" என்றான் அவன். அவள் ஏதோ கணக்கு சொன்னாள். உடனே அவன் கணக்கு போட்டு, "அப்போ! மாசம் இவ்ளோ வரும் அப்படிதான" என்றான் அவன். "ஆமாங்கய்யா" என்றாள் அவள்.
"அப்போ..." என்று அவன் இழுக்க, அவன் குறிப்பறிந்து "வர்ஷத்துக்கு இவ்ளோ வருங்கய்யா" என்றாள் அவள்.
அவன் ஆச்சரியப்பட்டான். இவள் சாதாரண பிச்சைக்காரி இல்லை. ... இல்ல இல்ல ... இந்த இல்ல வேற. இவள் சாதாரணப் பெண் இல்ல.... என்று திருத்தி நினைத்தான் அவன்.
"என்ன பண்ணுவ?"என்றான். அவளுக்குப் புரிந்தது. "இந்த காசெல்லாம் சே(ர்)த்து வச்சு ஒரு ஓட்டல் கட்டலாம்னு" அவள் முடிக்கச்ச, "என்னது! ஓட்டலா! நீயா! நீ கட்டபோறயா! என்னம்மா சொல்ற"? அவனுக்குத் தலை சுற்றியது. அவள் யதார்த்தமாக(வே) இருந்தாள். நிதானமாக இருந்தாள். பேச ஆரம்பித்தாள்.
"ஆமா! நா ஒண்ணும் விளையாட்டுக்கு சொல்லலீங்கய்யா. நிஜமாத்தான் சொல்றேன். பிச்சை எடுத்து சே(ர்)த்து வச்ச காசு இவ்ளோ... இருக்கு. ஓட்டல் ஆரம்பிக்க இது போதும்" என்றாள் அவள்.
"ஓ! வியாபாரம்... ஓட்டல் வியாபாரம்! அப்(பி)டிதான!" என்று கிண்டல் கலந்த மாதிரி கேட்டான் அவன். அவள் அசரவில்லை. நிதானமாகவே இருந்தாள்.
"அடித்தளம் போட்டாச்சு" என்றாள். அவன் அசந்து நின்றான். இங்கதான். பக்கத்(து)லதான். இன்னும் ஆறு மாசம். ரெடி ஆய்டும்" என்றாள் அவள்.
அவனால் இன்னும் சகஜ நிலைக்கு வர முடியவில்லை. ஒரு சாலைப் பிச்சைக்காரி பிச்சையெடுத்து சே(ர்)த்து வச்ச காசுல ஓட்டலாம் ஓட்டல்! என்று மனசுக்குள் நினைத்தான். அவளுக்குப் புரிந்தது.
"நீங்க நினைக்கறா மாதிரி இல்லீங்கய்யா! நா ஆரம்பிக்கப்போற ஓட்டல் இலவச ஓட்டல்" என்றாள் அவள்.
"இலவசமா? யாரவது freeயா நிலம் கொடுத்தாங்களா ஓட்டல் கட்ட?" என்று (அபத்தமாய்) கேட்டான். இந்தக் கேள்வி அபத்தந்தான? ஆமாம் ஆமாம். அபத்தந்தான். உங்கள் உணர்வு புரிகிறது.
"இல்லீங்கய்யா! காசு கொடுத்துதான் (நிலம்) வாங்கினேனுங்கய்யா! பிச்சை எடுத்து சே(ர்)த்த காசு. நா சொன்ன இலவசம், "வாங்கின நிலத்துக்கு" இல்ல. என் ஓட்டல்ல சாப்(ப)ட வரவங்களுக்கு இலவசமா உணவு கொடுக்கப் போறேனுங்கய்யா!" என்றாள் அவள்.
அவன் ஏற்கனவே மயக்கத்தில் இருந்தான். அவ இப்போ சொன்னத கேட்டு, அவனுக்கு கண்கள் சுழன்றன. "இல...வச...மா சாப்...பா....டா....! என்ன விளை....யா...ட்ற....யா?" என்றான் அவன்.
அவள் அமைதியாகவே இருந்தாள். "ஆமாம். யார் வேணா வந்து சாப்(ப)டலாங்கய்யா. காசு கிடையாது. தினைக்கும் ரெண்டு வேளை உணவு நிச்சயம் உண்டு. எல்லாம் இலவசம்தான். யார் வேண்ணா ...." என்று அவள் முடிப்பதற்கு முன்...
"free... ன்னா அவ்ளோ easy இல்ல. ஒரே வாரத்துல போண்டிதான்..".என்றான் அவன்.
"இல்லீங்கய்யா! நீங்க ....கறா மாதிரில்லாம் ஆகாதுங்கய்யா! . அவளிடத்திலிருந்து இந்த "ங்க" என்ற மரியாதை தொடர்ந்து வந்ததை அவன் கவனித்தான். இவள் சாதாரணப் பெண் இல்லை" என்று உறுதி கொண்டான்.
"காசு வாங்காம நிச்சயம் ரெண்டு மாசம் நடத்திடலாம். அதுக்கு காசு இருக்கு.".
"ஓ! நினச்சேன். விளம்பரம். Freeங்கறது ஒரு விளம்பரம். சூப்பர் சூப்பர்" என்றான் அவன்.
"இல்லீங்கய்யா!" என்ற அவளிடம், "அம்மா தாயே! நீயே முழுசா சொல்லி முடிச்சுடு" ன்னான் அவன்.
"ஆமாங்கய்யா! அதான் சரி! ரெண்டு மாசம் வரைக்கும் என் காசுல இலவசம். அதுக்குள்ள இதக் கேள்விப்பட்டு சில நல்ல மனுஷங்க வருவாங்க.... இதுக்கு நிச்சயம் அவங்க உதவி ஓரளவு கிடைக்கும். நல்லதுக்கு எப்போதுமே ஒரு மரியாத இருக்குமில்ல ...அப்(பி)டிதானங்கய்யா" என்றாள் அவள்.
"இருக்கும் இருக்கும் நிச்சயம் இருக்கும்". சரி! இப்போ நீ எங்க இருக்க? அதான் .... உன் வீடு எங்க..ன்னு கேட்டேன்" என்றான் அவன்.
"தோ! எதிர்க்க இருக்கற கோயில்தாங்கய்யா நா தங்கற இடம். நா தனி ஆளு. எனக்கு எதுக்கு வீடு வாசலு...ல்லாம். அப்பறம் பிச்சை எடுக்க முடியாது... காசு பத்தாது. ஓட்டல் கட்ட முடியாது... இலவச சாப்பாடு போட முடியாது... அதான், கோயில்லயே...." என்றாள் அவள்.
அவன் அதிர்ந்தான். 30 வயசு இருக்கும் அவளுக்கு. ரொம்ப நிதானமா பேசறா. அழுத்தம் திருத்தமா பேசறா! "நம்பறதா வாணாமா!" என்று அவன் மனசுக்குள் கேட்டுக்கொண்டதை உணர்ந்தவளாய், "நிச்சயம் நம்பலாங்கய்யா" என்று அவள் உறுதிபட உரைத்தாள். அவன் மீண்டும் அதிர்ந்தான். யார்ரா இவ? ன்னு மனதினுள் இறைஞ்சினான்.
சரி! ஓட்டல், இலவச சாப்பாடு, நல்ல மனுஷங்க உதவி... இதெல்லாம் எவ்ளோ நாள் நடக்கும்?
ஐயா! இந்த வாழ்க்கையே நிலையில்ல. அப்பறம் எதுக்கு அதெல்லாம் யோசிக்கணும்...? வாழற வரைக்கும், முடியற வரைக்கும் நடக்கும்" ன்னாள் அவள்.
*"நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க*
*அதை நடத்த ஒருவனுண்டு கோயிலில் காண்க"*
ஏனோ அவள் சொன்னத கேட்டதும், கண்ணாதாசனின் இந்தப் பாடல் வரிகள் அவன் மனதுக்குள் கணீரென்று ஒலித்தன.
அவன் விடவில்லை. சரிம்மா! நல்லா நடத்து. ஒரு நிலைக்கு வந்தப்பறம் என்ன plan? என்று கேட்டான் அவன்.
எந்த பிளானும் இல்லீங்கய்யா! ஓடற வரை ஓடட்டும். நடக்கற வரை நடக்கட்டும். திட்டம் போட்டுல்லாம் இத நடத்த முடியாது. இது வியாபாரமில்ல திட்டம்போட, கடவுள் போட்ட பிச்சை. அவர் பாத்துப்பாரு.
அவன் அதிர்ந்தான். "சரி. நல்லா நடத்து. எதுனா வேணுன்னா ... னு தன் நம்பர் கொடுக்க முற்பட்டான் அவன். இல்லீங்கய்யா. உங்க நம்பர நீங்க ஒருத்தர்கிட்ட போன்ல சொல்லச்ச, மனசுல குறிச்சுண்டேன். அது எப்பவும் மறக்காது" என்று அவள் சொல்ல, மீண்டும் மீண்டும் அதிர்ந்தான் அவன். ஏற்கனவே மேல ஒரு "மீண்டும்" போட்டாச்சு. அதனால, ரெண்டு "மீண்டும்" இங்க.
"அப்பறம், ஓட்டல்லதான எப்பவும் இருப்ப?" ன்னு கேட்க, "இல்லீங்கய்யா! ராத்திரி ஓட்டல் வேலை முடிஞ்சப்பறம், நா இந்தக் கோயில்லதான் வந்து படுப்பேன். காலைல எழுந்து ஓட்டலுக்குப் போய்டுவேன்" என்றாள் அவள்.
"என்ன....து....ஓட்டல் ஆரம்பிச்சப்பறமும் இந்தக் கோயில்லதான் தங்குவியா?" என்றான் அவன். அதற்கு நிறைய காரணங்கள் சொன்னாள். எல்லாம் நல்ல பதில்களே. ஆனால், கடைசியில் அவள் சொன்ன பதில்....
எதுவும் நிரந்தரமில்லீங்கய்யா! உள்ள இருக்கற அந்த சாமிதான் நிரந்தரம். நா என்னவா இருக்கணும் னு அதுக்குத் தெரியும். தினைக்கும் அந்த சாமிகிட்ட சொல்லிட்டுதான் பிச்சை எடுக்க வருவேன்... அதனால இதெல்லாமே அவர் போடற பிச்சைதான். நானோ, நீங்களோ, மத்தவங்களோ ஒரு கருவி. அவ்ளோதாங்கய்யா!" என்றாள் அவள்.
அவன் மீண்டும் மீண்டும் மீண்டும் அதிர்ந்தான். பதிலுக்கு ஏதும் பேச முடியவில்லை அவனால்.
"ஐயா!" ... அழைத்தாள் அவள்.
"என்னம்மா?" என்றான் அவன்.
"நன்றிங்கய்யா" என்றாள் அவள். அவனுக்குப் புரிந்தது. அவன் ஏன்? எதற்கு நன்றில்லாம்? என்று அவளிடம் ஏதும் கேட்கவில்லை.
அவன் ஏன் கேட்கவில்லை? அவனுக்குப் புரிந்தது... "நானும் ஒரு கருவிதான்". இதை இயக்குபவன் எதிரே உள்ளே இருக்கின்றான்.
"நல்லாரும்மா!" விடைபெற்றுப் புறப்பட்டான் அவன். "சாமி பாத்துப்பாருங்கய்யா!" திடமாகச் சொன்னாள் அவள்.
சிறிது தூரம் வந்தவன், ஓடிச்சென்று அவள் கைப்பிடித்தான். கும்பிட்டான். அவன் கண்களில் நீர் வழிந்தது. விம்மி நின்றான்.
மனிதர்கள் பலவிதம். இவள் எவ்விதம்? அவனுக்குப் புரியவில்லை. "சாமி பாத்துப்பாருங்கய்யா!" ... இந்த வார்த்தை அவனுக்குள்ளே பலவிதமாய் அதிர்ந்து கொண்டே இருந்தது. அந்த சாமி இப்போது அவனுக்குள்ளேயும் சிரித்தது. தன் வண்டியை விட்டுவிட்டு அப்படியே நடக்கத் தொடங்கினான் அவன்.
அப்போ, அவன் வண்டீ..... ன்னு கேக்கறீங்களா? "சாமி பாத்துப்பாருங்க!". அப்(பி)டியே விட்ருவோம்.
"மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
வாரிவாரி வழங்கும்போது வள்ளலாகலாம்
வாழைபோல தன்னைத் தந்து தியாகி ஆகலாம்
உறுதியோடு மெழுகு போல ஒளியை வீசலா....ம்
மனிதன் என்பவன் தெய்வமா...கலாம் ...
மனிதன் என்பவன் தெய்வமா....கலாம் ...
தெய்வமாகலாம்"
<><><> <><><>
*B Venkatakrishnan*
ThiruvallikkeNi
26.01.2026