மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும்: ஐ.நா.வில் இந்தியா கடும் தாக்கு

மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும்: ஐ.நா.வில் இந்தியா கடும் தாக்கு



நியூயார்க். அக்.26-


மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதை பாகிஸ்தான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஐ.நா. அமைப்பில் நடந்த கூட்டத்தில் இந்தியா தனது விமர்சனத்தை முன்வைத்தது.


2022-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் போராட்டம் ஏற்பட்டதை தொடர்ந்து அந்த நாட்டின் பிரதமர் அஷ்ரப் கனி பதவியில் இருந்து விலகி நாட்டைவிட்டு வெளியேறினார். இதனை தொடர்ந்து தலீபான்கள் தலைமையில் அங்கு ஆட்சி அமைந்தது. அன்று முதல் ஆப்கானிஸ்தானுடன் அதன் அண்டை நாடான பாகிஸ்தான் மோதலில் ஈடுபட்டு வருகிறது.


பாகிஸ்தானில் தஞ்சம் அடைந் திருந்த ஆப்கானிஸ்தான் அகதிகள் வெளியேற்றம், எல்லைப்பகுதி மீது தொடர் தாக்குதல் என தொடர்ந்து இருநாடுகளிடையே புகைச்சல் கிளம்பியது. இது முற்றி போர் தாக்குதலாக மாறியது.


ஆப்கானிஸ்தான் எல்லையோர பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.


இதில் பாக்டிகா மாகாணத்தை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஆப்கானிஸ்தான் நாட்டின் தேசிய கிரிக்கெட் அணி வீரர்கள் 3 பேர் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். இதே நேரத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் பாகிஸ்தான் ராணுவம் அதிபயங்கர தாக்குதல் நடத்தியது.


இதனை தொடர்ந்து கத்தாரில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட சமரசத்தை தொடர்ந்து போர் தாக்குதல் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் நியூயார்க்கை தலைமையிடமாக கொண்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று திறந்த விவாத கூட்டம் நடந்தது. இதில் உறுப்பினர் நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு விவாதித்தனர்.


அப்போது ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியான பர்வதனேனி ஹரீஷ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பாகிஸ்தான் தொடர்ந்து மனித உரிமை மீறலில் ஈடுபடுவதாக விமர்சித்தார். அவர் கூறுகையில், “பாகிஸ்தான் ஜனநாயகம் என்ற கருத்தை ஏற்க மறுத்து வருகிறது. இதற்கு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் ஆப்கானிஸ்தான் மீதான தாக்குதல் எடுத்துக்காட்டு.


மனித உரிமை மீறல்களில் அந்த நாட்டு ராணுவம் தொடர்ந்து ஈடுபட்டு ஆக்கிரமிப்பு, அடக்குமுறை, மிருகத்தனம் மற்றும் சுரண்டலுக்கு ஆதரவளிக்கிறது.


இதற்கு அப்படியே எதிரான கொள்கை கொண்டதாக இந்தியா உள்ளது. நாங்கள் காஷ்மீரை இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாக அங்கீகரித்து வருகிறோம். அங்குள்ள மக்களுக்கும் உரித்தான அரசியல் அமைப்பை கொண்டுள்ளோம். ஐ.நா. அமைப்பு பாகிஸ்தானின் இந்த போக்கை கட்டுப்படுத்த வேண்டும். நீண்ட கால பாரம்பரியத்தை கொண்ட ஐ.நா. அமைப்பின் கட்டமைப்புகள் சிறந்தவை. இருப்பினும் அதில் பெரும் மாற்றம் கொண்டு வர வேண்டும்” என்றார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%