மோமோஸுக்காக ரூ. 85 லட்சம் நகை! சிறுவனை ஏமாற்றிய 3 இளைஞர்களுக்கு வலைவீச்சு!

மோமோஸுக்காக ரூ. 85 லட்சம் நகை! சிறுவனை ஏமாற்றிய 3 இளைஞர்களுக்கு வலைவீச்சு!


 

உத்தரப் பிரதேசத்தில் மோமோஸுக்காக சிறுவன் ஒருவன், வீட்டில் இருந்த ரூ. 85 லட்சம் மதிப்புடைய நகையை வியாபாரிகளிடம் கொடுத்துள்ளார்.


அப்பகுதியில் மோமோஸ் கடை நடத்திவரும் 3 இளைஞர்கள் சிறுவனிடம் நன்கு பழகி, நகைகளைப் பெற்றுக்கொண்டு மோமோஸ் வழங்கியுள்ளனர். இது காவல் துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது.


உத்தரப் பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில், வாழ்நாள் முழுவதும் இலவசமாக மோமோஸ் தருவதாகக் கூறிய 3 இளைஞர்களை நம்பி, 7 ஆம் வகுப்பு பயிலும் சிறுவன், வீட்டில் இருந்த ரூ. 85 லட்சம் மதிப்பிலான நகைகளைக் கொடுத்துள்ளார்.


சிறுவனின் சகோதரி பெற்றோரிடம் நகைகளைக் கேட்டு அழுதுள்ளார். அப்போது, பெற்றோர் அலமாறியைத் திறந்து பார்க்கும்போது வீட்டில் நகைகள் இல்லை என்பது தெரியவந்துள்ளது.


இதனைத்தொடர்ந்து சிறுவனிடம் கேட்டபோது, மோமோஸுக்காக வியாபாரிகளிடம் நகைகளைக் கொடுத்ததைக் கூறியுள்ளார்.


குற்றவாளிகள் யார்?


இச்சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், 3 இளைஞர்களே இதற்கு காரணம் என்பதை கண்டறிந்தனர். 3 இளைஞர்களும் தியோரியா - கசாயா சாலையில் மோமோஸ் கடை நடத்தி வருகின்றனர்.


குறிப்பிட்ட கால இடைவெளியில் சிறுவனிடம் நன்கு பழகி, அவனின் நம்பிக்கையைப் பெற்ற பிறகே, இலவச மோமோஸுக்காக வீட்டில் இருந்த நகைகளை எடுத்துவர அவர்கள் கட்டாயப்படுத்தியுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.


வீட்டில் உள்ள நகைகளை சிறுவனால் எடுக்க முடியும் என்பதை கண்காணித்தே இதனைச் செய்துள்ளனர். சிறுவன் எடுத்து வந்து கொடுத்த நகைகள் அனைத்துமே சகோதரியினுடையது. இதன் மதிப்பு ரூ. 85 லட்சம் என காவல் துறை மதிப்பிட்டுள்ளது.


சிறுவனின் தந்தை விமலேஷ் மிஸ்ரா, வாரணாசியில் உள்ள கோயிலில் பூசாரியாக உள்ளார். படிப்புக்காக மகனையும் மகளையும் கிராமத்தில் விட்டுச் சென்றுள்ளார்.


சிறுவனின் தந்தை கொடுத்த புகாரின்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, 3 இளைஞர்களையும் தேடி வருகின்றனர்.


அறிமுகமில்லாத நபர்கள் பேச்சுக்கொடுத்தால், அதனை நம்ப வேண்டாம் என குழந்தைகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என பெற்றோர்களிடம் காவல் துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.


மோமோஸ் உணவுக்காக அறிமுகம் இல்லாத நபர்களின் வாக்குறுதியை நம்பி, வீட்டில் இருந்த நகைகளை சிறுவன் ஒருவன் எடுத்துக்கொடுத்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%